என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருமாவளவன் 'காலி'டப்பா -எச்.ராஜா
- கருத்தியல் ரீதியாக விடுதலை சிறுத்தைகளுக்கும், பாரதிய ஜனதாவுக்கும் தான் யுத்தம்.
- பா.ஜனதாவை அவரால் எதிர்க்க முடியுமா? அசைத்துக் கூட பார்க்க முடியாது.
சென்னை:
விடுதலைகள் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் பா. ஜனதாவின் தீவிர எதிர்ப்பாளர் என்பது தெரிந்ததே. கருத்தியல் ரீதியாக விடுதலை சிறுத்தைகளுக்கும், பாரதிய ஜனதாவுக்கும் தான் யுத்தம். பாரதிய ஜனதாவை ஓட ஓட விரட்டுவோம் என்று கடுமையாக விமர்சித்து இருந்தார். இது தொடர்பாக பா. ஜனதா மூத்த தலைவர் எச். ராஜா கூறியதாவது:
திருமாவளவனிடம் என்ன கருத்து இருக்கிறது. அவரை பொறுத்தவரை ஒரு காலிடப்பா. அவரை ஒரு பொருட்டாகவே நாங்கள் கருதவில்லை. பா.ஜனதாவை அவரால் எதிர்க்க முடியுமா? அசைத்துக் கூட பார்க்க முடியாது. பா.ஜனதா சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி என்று ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கி பார்த்தார்கள். ஆனால் இன்று வட கிழக்கு மாநிலங்களில் நடந்திருப்பது என்ன? 90 சதவீதம் சிறுபான்மை மக்கள் வாழும் அந்த மாநிலங்களில் பெரும்பான்மை பலத்துடன் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்திருக்கிறது. ஒரு குறிப்பிட்ட சமூகம் டெல்லியில் இருந்து ஆட்டி படைக்கிறது என்று ஒரு தவறான தகவலை பரப்பி பார்க்கிறார். ஏன் மக்களுக்கு புரியாதா? பிரதமர் மோடி ஒரு பிற்பட்ட சமூகத்தை சார்ந்தவர். ஜனாதிபதி முர்மு மலைவாழ் மக்கள் சமூகம், உள்துறை அமைச்சர் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர். அப்படி இருக்கும்போது இவர் சொல்வதை மக்கள் எப்படி ஏற்பார்கள். பா.ஜனதா மீது இவர்கள் எப்படிப்பட்ட விமர்சனங்களை வைத்தாலும் அதை ஒவ்வொன்றாக மக்களே முறியடிப்பார்கள்.
இப்போது சனாதனம் எதிர்ப்பு என்று ஒன்றை சொல்கிறார். சனாதனம் என்றால் என்ன? தொன்மையானது என்பது தான்! இந்துக்கள் எதிர்ப்பு என்று சொல்கிறார். ஆனால் தேர்தல் நேரத்தில் சிதம்பரம் கோவிலில் சென்று பரிவட்டம் கட்டி தீட்சிதர்களிடம் ஆசி பெறுகிறார். இந்த வேடம் எதற்கு? என்று அவர் கூறினார்.