என் மலர்
உள்ளூர் செய்திகள்
சிலம்பம் போட்டியில் மலை கிராம மாணவி 3 தங்கம் வென்று சாதனை
- மாணவி பதக்கங்களுடன் சொந்த ஊரான ஏற்காடு திரும்பினார்.
- மாணவி அனுஷ்கா ஏற்காடு நாசேரத் பள்ளியில் 9 -ம் வகுப்பு படித்து வருகிறார்.
ஏற்காடு:
ஏற்காடு குண்டூர் மலை கிராமத்தில் வசித்து வரும் சுந்தரம்-ஜானகி ஆகியோரின் மகள் அனுஷ்கா (வயது 12) இவர் மலேசியாவில் நடைபெற்ற உலக அளவிலான சிலம்பம் போட்டியில் கலந்து கொண்டு 3 தங்கப்பதக்கம் வென்று அசத்தினார்.
இதையடுத்து மாணவி பதக்கங்களுடன் சொந்த ஊரான ஏற்காடு திரும்பினார். இன்று ஏற்காடுக்கு வந்த மாணவி அனுஷ்காவை கிராம மக்கள் ஒன்று கூடி வரவேற்று மாலை அணிவித்து சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்து ஜீப்பில் அவரது வீட்டுக்கு அழைத்து சென்றனர்.
பெற்றோர் தங்கள் மகளை மகிழ்ச்சி பொங்க வரவேற்றனர். மாணவி அனுஷ்கா ஏற்காடு நாசேரத் பள்ளியில் 9 -ம் வகுப்பு படித்து வருகிறார். இம்மாணவி மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர். இவரது பெற்றோர் சுந்தரம்- ஜானகி தம்பதியினர் காபி தோட்டத்தில் கூலி வேலை செய்து வருகின்றனர். அதில் கிடைக்கும் பணத்தை தமிழகத்தின் பாரம்பரிய கலையான சிலம்பாட்டத்தை கற்று கொள்வதற்கு கொடுத்து ஊக்கப்படுத்தினர். மேலும் ஊர்மக்கள், பள்ளி ஆசிரியர்கள், பயிற்சியாளர் மாணவியை ஊக்கப்படுத்தினார்கள். இதனால் சிலம்பாட்ட போட்டியில் தங்கப்பதக்கம் வெல்ல முடிந்தது என மாணவி தெரிவித்தார்.