search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மதுக்கடையில் கொள்ளையடிக்கச் சென்று வயிறு முட்ட குடித்து தூங்கிய திருடன்
    X

    மதுக்கடையில் கொள்ளையடிக்கச் சென்று வயிறு முட்ட குடித்து தூங்கிய திருடன்

    • ரூபாய் நோட்டுகள் மற்றும் மது பாட்டில்கள் சிதறி கிடந்தன.
    • போதையில் இருந்த வாலிபரை எழுப்ப நீண்ட நேரம் முயற்சி செய்தனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், மேடக் மாவட்டம், நர்சிங்கியில் தனியார் மதுபான கடை இயங்கி வருகிறது.

    நேற்று முன்தினம் நள்ளிரவு வாலிபர் ஒருவர் மதுக்கடையில் கொள்ளையடிக்க சென்றார். கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற வாலிபர் அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா ஹார்ட் டிஸ்கை கழட்டினார். பின்னர் கடையில் வைத்திருந்த பணத்தை எடுத்து தனது பாக்கெட்டில் நிரப்பி கொண்டார்.

    ஹார்ட் டிஸ்க் கழற்றியாதால் தன்னை யாரும் அடையாளம் கண்டு கொள்ள முடியாது என நினைத்தார்.

    கடையில் இருந்த விலை உயர்ந்த பல ரகமான மது பாட்டில்களை பார்த்ததும் அவருக்கு மதுகுடிக்க ஆசை ஏற்பட்டது. கடையில் தரையில் அமர்ந்து ஒவ்வொரு பாட்டிலாக எடுத்து குடிக்க ஆரம்பித்தார்.

    வயிறு முட்ட குடித்தார். சிறிது நேரத்தில் வாலிபருக்கு போதை தலைக்கேறியது. இதனால் கடையின் உள்ளேயே குறட்டை விட்டபடி தூங்கினார்.

    காலையில் கடைக்கு வந்த உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் கடையில் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது வாலிபர் மது போதையில் தூங்கிக் கொண்டு இருப்பதைக் கண்டனர்.

    அவரது அருகே ரூபாய் நோட்டுகள் மற்றும் மது பாட்டில்கள் சிதறி கிடந்தன. வாலிபரை எழுப்ப நீண்ட நேரம் முயற்சி செய்தனர். அவர் எழுந்திருக்கவில்லை.

    சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வாலிபரை எழுப்பப்படாத பாடுபட்டனர். அவர்களின் முயற்சி தோல்வி அடைந்ததால் 108 ஆம்புலன்ஸ் மூலம் வாலிபரை மீட்டு ராமையம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கும் அவருக்கு போதை தெளியவில்லை. மதியத்திற்கு மேல் வாலிபருக்கு லேசாக போதை இறங்க ஆரம்பித்தது. போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×