என் மலர்tooltip icon

    இந்தியா

    அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதை உறுதி செய்த அமித்ஷா
    X

    அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதை உறுதி செய்த அமித்ஷா

    • 2026-ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் நிச்சயம் மாற்றங்கள் ஏற்படும்.
    • தி.மு.க. அரசின் செயல்பாடுகளால் மக்கள் மிகவும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

    புதுடெல்லி:

    மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா டெல்லியில் தனியார் தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

    அப்போது அவர் தமிழக அரசியல் நிலவரம் தொடர்பாக பல்வேறு கருத்துக்களை வெளியிட்டார். அவர் கூறியதாவது:-

    தமிழ்நாடு மிக மிக முன்னேறிய மாநிலம் ஆகும். ஆனால் சமீப காலமாக தமிழ்நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சி முழுமையாக பின்தங்கி உள்ளது. அதற்கு தி.மு.க. அரசின் தவறான கொள்கைகளால் ஏற்பட்டு இருக்கும் குழப்பங்கள்தான் முக்கிய காரணம் ஆகும்.

    தமிழ்நாட்டில் இளைஞர்களுக்கு வேலை கிடைப்பது இல்லை. அங்குள்ள தொழிற்சாலைகள் வேறு மாநிலங்களுக்கு ஓடிக் கொண்டு இருக்கின்றன. அந்த மாநிலத்தில் பலருக்கும் அதிக மாத சம்பளம் கிடைக்கிறது. என்றாலும் அவர்கள் கூட வேறு மாநிலத்துக்கு செல்வதையே விரும்புகிறார்கள்.

    தமிழ்நாட்டில் தற்போது நடந்து வரும் தி.மு.க. ஆட்சி மக்களுக்கு எதிராக நடந்து வருகிறது. மொழி கொள்கையை முன்வைத்து அவர்கள் பேசுகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் மருத்துவம், பொறியியல் படிப்புகளை தமிழில் நடத்துமாறு நாங்கள் கூறினோம். அதற்கு இதுவரை அவர்கள் பதில் சொல்வதில்லை.

    மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளில் உள்ள பாடப்புத்தகங்களை இன்னும் அவர்கள் தமிழுக்கு மொழி மாற்றம் செய்யவில்லை. தி.மு.க. ஊழலில்தான் மிதக்கிறது. அதனால்தான் தொழிற்சாலைகள் வேறு மாநிலங்களுக்கு செல்கின்றன.

    தி.மு.க. அரசின் செயல்பாடுகளால் மக்கள் மிகவும் அதிருப்தி அடைந்துள்ளனர். தி.மு.க. ஆட்சியை அகற்ற வேண்டும் என்று மக்கள் நினைப்பதை உணர முடிகிறது. சமீப காலமாக அங்கு சென்று வரும்போது இதை உணர்ந்து இருக்கிறேன்.

    எனவே 2026-ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் நிச்சயம் மாற்றங்கள் ஏற்படும். தி.மு.க.வை மக்கள் நிச்சயம் பதவியில் இருந்து அகற்றுவார்கள். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

    தமிழகத்தில் 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வின் தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயம் ஆட்சி அமைக்கும். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி தொடர்பாக தொடர்ந்து பேசி வருகிறது.

    பா.ஜ.க.-அ.தி.மு.க. கூட்டணி தொடர்பாக உரிய நேரத்தில் உரிய தகவல்கள் வெளியிடப்படும். தற்போது பேச்சுவார்த்தை திருப்திகரமாக சென்று கொண்டு இருக்கிறது.

    தமிழகத்தில் ஆளும் தி.மு.க.வுக்கு எதிராக பா.ஜ.க. சொல்லும் குற்றச்சாட்டுகளை திசை திருப்பும் நோக்கத்தில் பல்வேறு போராட்டங்களை நடத்துகிறார்கள். தொகுதி மறுசீரமைப்பு பற்றி பேசுகிறார்கள். மத்திய அரசு தொகுதி மறுசீரமைப்பு பற்றி இதுவரை எதுவும் சொல்லவும் இல்லை, நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    அப்படி இருக்கும் போது தி.மு.க. ஏன் இதை பிரச்சனையாக இப்போது எழுப்ப வேண்டும். 2026-ம் ஆண்டு தேர்தலை மனதில் கொண்டு தான் இப்படியெல்லாம் நடந்து கொள்கிறார்கள். 5 ஆண்டுகளாக ஊழலில் திளைத்தவர்கள் இப்போது திடீரென விழித்துக் கொண்டு இப்படி செயல்பட ஆரம்பித்து உள்ளனர்.

    தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் மேற்கொள்ளப்படும் போது அந்த சமயத்தில் யாருக்கும் நிச்சயம் அநீதி ஏற்படாது. இதை என்னால் .0001 சதவீதம் உறுதியாக தமிழக மக்களுக்கு சொல்ல முடியும்.

    இந்தி திணிப்பு என்றும் தி.மு.க. ஆட்சியாளர்கள் போர்க்கொடி உயர்த்துகிறார்கள். தமிழகத்தில் மருத்துவம், என்ஜினீயரிங் படிப்புகளை தமிழில் நடத்தாமல் இருப்பதுதான் உண்மையில் தமிழுக்கு எதிரானது.

    மத்திய அரசின் கல்வி கொள்கை தாய்மொழியை வளர்ப்பதாகவே அமையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×