என் மலர்
இந்தியா
திருப்பதியில் பக்தர்கள் 1 மணி நேரத்தில் தரிசனம் செய்ய ஏற்பாடு
- 20 இடங்களில் முகத்தை ஸ்கேன் செய்யும் மையம் அமைக்கப்பட உள்ளது.
- இடைத்தரகர்களிடம் பக்தர்கள் பணத்தை கொடுத்து ஏமாறுவது தடுக்கப்படும்.
திருப்பதி:
திருப்பதியில் ஏழுமலையான தரிசிப்பதற்காக தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதனால் பக்தர்கள் பல மணி நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டி உள்ளது.
பக்தர்களின் சிரமத்தை போக்குவதற்காக திருப்பதி தேவஸ்தானம் பெங்களூரில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனத்துடன் இணைந்து பக்தர்கள் ஒரு மணி நேரத்தில் தரிசனம் செய்வதற்காக ஏற்பாடுகளை செய்து வருகிறது.
திருப்பதியில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் முகத்தை நவீன தொழில்நுட்பத்தில் ஸ்கேன் செய்வதற்காக விமான நிலையம், ரெயில் நிலையம், பஸ் நிலையம், அலிபிரி உள்ளிட்ட 20 இடங்களில் முகத்தை ஸ்கேன் செய்யும் மையம் அமைக்கப்பட உள்ளது.
திருப்பதிக்கு வரும் பக்தர்கள் உடனடியாக தங்களது முகத்தை ஸ்கேன் செய்தவுடன் அவர்களுக்கு உண்டான தரிசன நேரம் வழங்கப்படும்.
தரிசன நேரம் இடைவெளிக்குள் பக்தர்கள் திருப்பதி மற்றும் திருப்பதி சுற்றி உள்ள கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்துவிட்டு அவர்களுக்கு வழங்கப்பட்ட தரிசன நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்பாக கோவிலுக்கு வந்து தரிசனம் செய்து கொள்ளலாம். கேரளா, உத்தரப்பிரதேசம், டெல்லி உள்ளிட்ட நீண்ட தூரத்தில் இருந்து வரும் சாதாரண பக்தர்களும் ஒரு மணி நேரத்தில் ஏழுமலையான தரிசனம் செய்யலாம்.
இதன் மூலம் இடைத்தரகர்களிடம் பக்தர்கள் பணத்தை கொடுத்து ஏமாறுவது தடுக்கப்படும். பக்தர்கள் முகத்தை ஸ்கேன் செய்யும் சோதனை தற்போது நடைபெற்று வருகிறது. இன்னும் 6 மாதத்தில் இந்த திட்டம் முழுமையாக செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும்போது தடையற்ற தரிசனமும், மரியாதைக்குரிய அனுபவமும் பக்தர்களுக்கு கிடைக்கும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.