search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    காங்கிரஸ் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை: பசவராஜ் பொம்மை
    X

    காங்கிரஸ் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை: பசவராஜ் பொம்மை

    • மந்திரிசபை விரிவாக்கம் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.
    • காங்கிரஸ் கட்சியினர் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    பெங்களூரு:

    முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    பிரதமர் மோடி நாளை(இன்று) கர்நாடகம் வருகிறார். கலபுரகி, யாதகிரியில் நடைபெறும் 2 நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டு பல்வேறு திட்ட பணிகளை தொடங்கி வைத்தும், அடிக்கல் நாட்டியும் பேசுகிறார். நாராயணபுரா இடது கால்வாய் நவீனமயமாக்கப்பட்டு உள்ளது. அதை அவர் தொடங்கி வைக்கிறார்.

    இந்த திட்டத்தை மத்திய-மாநில அரசுகள் இணைந்து செய்து முடித்துள்ளன. இதை பிரதமர் மோடி தொடங்கி வைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதனால் வரும் காலத்தில் இதுபோன்ற திட்டங்களை இன்னும் அதிகளவில் மேற்கொள்ள ஊக்கம் அளிக்கிறது. 40 ஆண்டுகளுக்கும் மேலாக பஞ்சாரா, லம்பானி இன மக்கள் வசிக்கும் பகுதிகளை வருவாய் கிராமங்களாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வருகிறது. இது சமூக ரீதியாக மாற்றத்தை ஏற்படுத்தும் மிகப்பெரிய திட்டம் ஆகும்.

    நாடோடிகளான அந்த மக்களுக்கு இந்த திட்டம் நிரந்தர வாழ்வியலை ஏற்படுத்தி கொடுக்கும். அவர்களின் வாழ்க்கைக்கு பாதுகாப்பை கொடுக்கும். இத்தகைய திட்டங்களால் கர்நாடகத்திற்கு நல்லது நடக்கும். மந்திரிசபை விரிவாக்கம் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விரைவில் தகவல் தெரிவிப்பதாக எங்கள் கட்சி மேலிட தலைவர்கள் கூறியுள்ளனர்.

    பி.கே.ஹரிபிரசாத் கூறிய தரம் தாழ்ந்த கருத்துக்கு நான் பதிலளிக்க மாட்டேன். இது தான் அவருக்கு எனது பதில் ஆகும். காங்கிரஸ் கட்சியினர் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அதனால் பெண்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்குவதாக அறிவித்துள்ளனர். இதன் மூலம் மக்களை திசை திருப்ப காங்கிரஸ் முயற்சி செய்கிறது. காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, இதை ஏன் அவர்கள் செய்யவில்லை.

    ஏற்கனவே கொடுத்த வாக்குறுதிகளையே நிறைவேற்றவில்லை. அதனால் இந்த வாக்குறுதியை நிறைவேற்றுவார்கள் என்று எந்த உறுதியும் இல்லை. காங்கிரஸ் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. நாங்கள் அரசின் நிதி நிலையை கருத்தில் கொண்டு திட்டங்களை அறிவித்து செயல்படுத்துகிறோம். நாங்கள் சொன்னபடி நடந்து கொள்கிறோம்.

    இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

    Next Story
    ×