search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பெங்களூருவில் முழு அடைப்பு போராட்டம் எதிரொலி: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
    X

    பெங்களூருவில் முழு அடைப்பு போராட்டம் எதிரொலி: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

    • ஐ.டி. நிறுவனங்களை சேர்ந்தவர்கள் வீட்டில் இருந்தே பணியாற்ற அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.
    • பெங்களூருவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் காந்தி நகர், ஸ்ரீராமபுரம், சிவாஜிநகர், மாகடி ரோடு, அல்சூர், இந்திரா நகர் உள்பட பல பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    பெங்களூரு:

    சுப்ரீம் கோர்ட்டு தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீரை திறக்கும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    இதனிடையே தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து மண்டியா, மைசூரு ஆகிய மாவட்டங்களில் விவசாயிகள், கன்னட அமைப்பினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் சில கன்னட அமைப்புகள் மற்றும் விவசாய அமைப்புகள் பெங்களூருவில் இன்று முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தன.

    இதையடுத்து இன்று தலைநகர் பெங்களூருவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்துக்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. மேலும் பேரணிகள் நடத்தவும் எந்த அமைப்புக்கும் அனுமதி கொடுக்கப்படவில்லை.

    போராட்டத்தையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று நள்ளிரவு முதல் இன்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவின்படி 5 பேருக்கு அதிகமானவர்கள் ஒரே இடத்தில் கூடக்கூடாது. அதோடு ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்தாலோ அல்லது பொதுச்சொத்துகளுக்கு சேதம் விளைவித்தாலோ பந்த் நடத்தும் அமைப்பின் நிர்வாகிகள் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் இதுபற்றி அமைப்பின் நிர்வாகிகளுக்கும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    பெங்களூரு நகரில் போலீஸ் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கர்நாடக ஆயுதப்படை, நகர ஆயுதப்படை போலீசார் என 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதை தவிர வெளி மாவட்டங்களை சேர்ந்த போலீசாரும் பாதுகாப்புக்கு பெங்களூருவுக்கு வரவழைக்கப்பட்டு இருந்தனர்.

    பொதுமக்களின் நலன் கருதியும் மற்றும் அவசர தேவையை கருத்தில் கொண்டும் பெங்களூருவில் இருந்து நகரின் பல்வேறு பகுதிகளுக்கு குறைந்த எண்ணிக்கையில் அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. பந்த் காரணமாக பஸ்களில் பொதுமக்களின் கூட்டம் குறைவாகவே இருந்தது.

    ஆட்டோ, வாடகை கார்கள், டாக்சிகள் ஓடவில்லை. திரையரங்குகள், வணிக வளாகங்கள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மூடப்பட்டது. கடைகள், ஓட்டல்கள் அனைத்தும் அடைக்கப்பட்டன. மருந்து கடைகள், ஆஸ்பத்திரிகள் வழக்கம் போல் திறந்திருந்தன. பெங்களூரு மைய பகுதியில் பொதுமக்களின் நடமாட்டம் குறைவாக இருந்தது.

    அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டது. இந்த முழு அடைப்பு காரணமாக பள்ளிகளில் இன்று நடைபெற இருந்த காலாண்டு தேர்வு அடுத்த மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. இதற்கான உத்தரவை பெங்களூரு நகர மாவட்ட கலெக்டர் தயானந்த் பிறப்பித்துள்ளார்.

    ஐ.டி. நிறுவனங்களை சேர்ந்தவர்கள் வீட்டில் இருந்தே பணியாற்ற அறிவுறுத்தப்பட்டிருந்தனர். அதன்படி ஐ.டி. நிறுவனங்கள், கம்ப்யூட்டர் நிறுவனங்கள், சாப்ட்வேர் நிறுவனங்களை சேர்ந்த பணியாளர்கள் வீட்டில் இருந்தே வேலை செய்தனர். போராட்டம் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    பெங்களூருவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் காந்தி நகர், ஸ்ரீராமபுரம், சிவாஜிநகர், மாகடி ரோடு, அல்சூர், இந்திரா நகர் உள்பட பல பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ரோந்து வாகனத்தில் போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரமாக தொடங்கி உள்ளனர்.

    மேலும் ஓசூர்-பெங்களூரு எல்லையான எலக்ட்ரானிக் சிட்டி, சில்க் போர்டு, மடிவாளா, மாரத்தஹள்ளி, பிடிஎம் லே அவுட் உள்ளிட்ட பகுதிகளிலும் போலீசார் அடிக்கடி ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    போலீஸ் தடை உத்தரவை மீறியும் பெங்களூரு நகரில் பல்வேறு இடங்களில் கன்னட அமைப்புகள் சார்பில் போராட்டம் நடைபெற்றது. கன்னட அமைப்பினர் காவிரியில் தண்ணீர் திறந்து விட்ட முதல் மந்திரி சித்தராமையா, துணை முதல் மந்திரி டி.கே.சிவக்குமார் உள்ளிட்டோர் உருவ பொம்மையுடன் போராட்டம் நடத்தினர்.

    பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தமிழக அரசு பஸ்களின் சேவை நிறுத்தப்பட்டது. தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து பெங்களூரு, மைசூரு உள்ளிட்ட இடங்களுக்கு 250 தமிழக அரசு விரைவு பஸ்கள் இன்று இயக்கப்படவில்லை. குறிப்பாக நேற்று நள்ளிரவு முதல் கர்நாடகாவில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டதால் நள்ளிரவில் இருந்து இந்த பஸ்கள் இயக்கப்படவில்லை.

    இதேபோல் சேலத்தில் இருந்து ஓசூர் வழியாக பெங்களூரு செல்லும் பஸ்கள், கிருஷ்ணகிரியில் இருந்து பெங்களூரு செல்லும் பஸ்கள், தர்மபுரி, ஈரோடு பகுதியிலிருந்து செல்லும் பஸ்கள் அனைத்தும் தமிழக எல்லை பகுதி வரை மட்டுமே இயக்கப்பட்டன.

    தமிழகத்தில் இருந்து தினசரி கர்நாடகா வழியாக வட மாநிலங்களுக்கு 35ஆயிரம் லாரிகள் செல்கிறது. இந்த லாரிகள் மற்றும் கண்டெய்னர் லாரிகள் அனைத்தும் ஓசூர் எல்லை, மேட்டூர் அருகே உள்ள எல்லை, ஈரோடு தாளவாடி எல்லையில் டிரைவர்கள் வரிசையாக நிறுத்தி இருந்தனர். அதேபோல் வடமாநிலங்களில் இருந்து பெங்களூரு வழியாக தமிழகத்திற்கு 30 ஆயிரம் லாரிகள் வருகிறது. இந்த லாரிகளும் மாநில எல்லையில் நிறுத்தப்பட்டது. பெங்களூருவில் நடந்து வரும் முழு அடைப்பு போராட்டம் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

    கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வருகிற 29-ந்தேதி கர்நாடக முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. இதையொட்டி 29-ந்தேதி டவுன்ஹாலில் இருந்து சுதந்திர பூங்கா வரை கண்டன ஊர்வலம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது

    Next Story
    ×