என் மலர்tooltip icon

    இந்தியா

    விதியை மீறும் பாஜக மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் பயப்படுகிறது-  காங்கிரஸ் விமர்சனம்
    X

    பிரதமர் மோடி, பவன் கேரா

    விதியை மீறும் பாஜக மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் பயப்படுகிறது- காங்கிரஸ் விமர்சனம்

    • பாஜக சின்னத்துடன் உள்ள பிரசார வாகனங்களில் மது வினியோகம் செய்யப்பட்டது.
    • காங்கிரஸின் புகார்கள் மீது தேர்தல் ஆணையம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

    குஜராத்தில் இரண்டாம் கட்ட தேர்தல் இன்று நடைபெற்ற நிலையில் இதில் கலந்து கொள்ள வந்த பிரதமர் மோடி வாகன ஊர்வலம் நடத்தியது தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல் என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது இது குறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் ஊடக பிரிவு தலைவர் பவன் கேரா தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறியுள்ளதாவது:

    நமது ஜனநாயகத்தின் கண்காணிப்பு அமைப்பான தேர்தல் ஆணையத்தின் செயலற்ற தன்மை நடந்து முடிந்துள்ள தேர்தல்கள் மூலம் தெளிவாகத் தெரிகிறது. தேர்தலில் பிரதமரின் வாக்கு மதிப்பும், சாமானியரின் வாக்கு மதிப்பும் ஒன்றுதான். ஆனால், பிரதமர் வாக்களிக்கச் செல்லும்போது இரண்டரைமணி நேரம் ரோட்ஷோ நடத்துவது எப்படி?

    பிரதமரின் எந்த அத்து மீறலையும் கண்டு கொள்ளாத தேர்தல் ஆணையத்திற்கு என்ன நிர்பந்தங்கள் உள்ளன?. பிரதமர் மோடி அகமதாபாத்தில் வாக்களிக்கும் போதும், இரண்டரை மணி நேர ரோட்ஷோ நடத்தும் போதும் அனைத்து சேனல்களிலும் இலவசமாக ஒளிபரப்ப முடிவு செய்தார். இது விளம்பரம் இல்லையா? இதற்காக பா.ஜ.க.விடம் கட்டணம் ஏன் வசூலிக்கக் கூடாது. கட்சியின் தேர்தல் செலவினத்தின் கீழ் இதை கொண்டுவர நாங்கள் தேவையான நடவடிக்கைகளை எடுப்போம்.

    மது விற்பனை தடை உள்ள மாநிலத்தில் பாஜகவினர் வெளிப்படையாக, வெட்கமின்றி, பாஜக சின்னத்துடன் தங்கள் வாகனங்களில் மது வினியோகம் செய்யும் காட்சிகளையும் நாங்கள் மீண்டும் மீண்டும் பகிர்ந்து வருகிறோம். அத்தகைய விதி மீறல்கள் குறித்து தேர்தல் ஆணையம் மௌனம் சாதிப்பது ஏன்.

    பாஜக தொடர்ந்து நடத்தி விதிகளை மீறுகிறது, ஆனால் தேர்தல் ஆணையம் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை. அமைதியாக உள்ளது. நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் பயப்படுவதாக தெரிகிறது. காங்கிரஸின் புகார்கள் மீது தேர்தல் ஆணையம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த விவகாரத்தில் தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுப்பது குறித்து காங்கிரஸ் கட்சி ஆலோசித்து வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×