என் மலர்
இந்தியா

பா.ஜ.க. புதிய தலைவர் ஏப்ரல் 10-ந்தேதி தேர்வு? மாநில தலைவர்கள் டெல்லிக்கு வருமாறு அழைப்பு
- மாநில நிர்வாகிகள் தேர்வு தாமதமானதால் பா.ஜ.க. தேசிய தலைவரை தேர்வு செய்வதில் தாமதம் ஏற்பட்டது.
- ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துவார் என்று தெரியவந்துள்ளது.
புதுடெல்லி:
பா.ஜ.க. தேசிய தலைவராக இருக்கும் ஜே.பி.நட்டாவின் பதவி காலம் ஏற்கனவே நிறைவு பெற்று விட்டது. இதற்கிடையே அவர் கடந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தேர்வாகி மத்திய மந்திரியாகவும் பதவி வகித்து வருகிறார்.
இதன் காரணமாக பா.ஜ.க.வுக்கு புதிய தேசிய தலைவரை தேர்வு செய்வதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் பா.ஜ.க. உள்கட்சி தேர்தல் நடத்தப்பட்டு நிர்வாகிகள் தேர்வாகி வருகிறார்கள். சில மாநிலங்களுக்கு மட்டும் மாநில தலைவர்கள் அறிவிக்கப்படாமல் உள்ளனர். புதிய மாநில நிர்வாகிகள் மூலம் தேசிய தலைவர் தேர்வு செய்யப்பட உள்ளார்.
மாநில நிர்வாகிகள் தேர்வு தாமதமானதால் பா.ஜ.க. தேசிய தலைவரை தேர்வு செய்வதில் தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில் ஏப்ரல் 2-வது வாரத்துக்குள் பா.ஜ.க.வுக்கு புதிய தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துள்ளனர்.
இதை உறுதிப்படுத்தும் வகையில் பா.ஜ.க. தலைவர்கள் ஆலோசனை கூட்டம் டெல்லியில் 10-ந்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்க வருமாறு பா.ஜ.க. முதல்-மந்திரிகள், மாநில பா.ஜ.க. தலைவர்கள், மாநில பொதுச்செயலாளர்கள் உள்பட நிர்வாகிகள் டெல்லிக்கு வருமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிர்வாகிகள் கூட்டத்தில் என்னென்ன விஷயங்கள் ஆலோசிக்கப்படும் என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. என்றாலும் பா.ஜ.க.வுக்கு புதிய தேசிய தலைவரை தேர்வு செய்வது தொடர்பாக அந்த கூட்டத்தில் முக்கிய ஆலோசனைகள் நடத்தப்பட்டு முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே பிரதமர் மோடி நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூருக்கு செல்ல இருக்கிறார். அங்குள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்துக்கு அவர் செல்கிறார். அப்போது புதிய கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
மேலும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துவார் என்று தெரியவந்துள்ளது. அந்த கூட்டத்தில் பா.ஜ.க.வின் புதிய தேசிய தலைவராக யாரை தேர்வு செய்யலாம் என்பது பற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுடன் பிரதமர் மோடி விவாதித்து முக்கிய முடிவுகள் எடுப்பார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.