search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தேர்தல் தோல்வி: நகரி தொகுதியில் இருந்து ரோஜா ஓட்டம்
    X

    தேர்தல் தோல்வி: நகரி தொகுதியில் இருந்து ரோஜா ஓட்டம்

    • ரோஜா நகரியில் உள்ள தனது வீட்டை காலி செய்து விட்டு சென்னை சென்றார்.
    • மாநிலத்தில் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு நீட்டிக்கப்பட்டுள்ளது.

    திருப்பதி:

    ஆந்திர சட்டமன்ற தேர்தலில் தமிழக எல்லையோரம் உள்ள நகரி தொகுதியில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் ரோஜா 3-வது முறையாக போட்டியிட்டார்.

    ஆந்திர மாநிலத்தின் சுற்றுலாத்துறை மந்திரியாக இருந்த ரோஜாவுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கக் கூடாது என நகரி தொகுதியில் உள்ள அவருடைய சொந்த கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதனையும் மீறி ஜெகன்மோகன் ரெட்டி ரோஜாவுக்கு போட்டியிட வாய்ப்பளித்தார். நகரி தொகுதியில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து ரோஜா பிரசாரம் செய்தார்.

    பிரசாரத்தின் போது சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண் உள்ளிட்டோரை கடுமையாக விமர்சித்தார்.மேலும் அவர் தனது ஆட்சி காலத்திலும் சட்டமன்றம் மற்றும் பொதுக்கூட்டங்களிலும் சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண் ஆகியோரை விமர்சித்து வந்தார்.

    இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளரிடம் 40 ஆயிரத்து 687 வாக்குகள் வித்தியாசத்தில் ரோஜா படுதோல்வி அடைந்தார்.

    ஆந்திராவில் வாக்கு எண்ணிக்கைக்கு பிறகும் தெலுங்கு தேசம் மற்றும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தொண்டர்கள் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு நீட்டிக்கப்பட்டுள்ளது.

    நடிகை ரோஜாவுக்கு திருப்பதி மற்றும் நகரி ஆகிய இடங்களில் வீடுகள் உள்ளன. இந்த வீடுகளில் ஆந்திர மாநில போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தேர்தல் மோதல் காரணமாக தொடர்ந்து ஆந்திராவில் பதட்டம் நிலவுவதால் ரோஜா நகரியில் உள்ள தனது வீட்டை காலி செய்து விட்டு சென்னை சென்றார்.

    அவர் தனது கணவர் ஆர்.கே.செல்வமணி மற்றும் மகன், மகளுடன் சென்னையில் உள்ள வீட்டில் தங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

    தேர்தல் தோல்வியால் ரோஜா ஆந்திராவில் உள்ள வீடுகளை காலி செய்து தமிழகத்துக்கு சென்றிருப்பது ஆந்திர மாநிலத்தில் பரப்பரப்பாக பேசப்படுகிறது.

    Next Story
    ×