என் மலர்
இந்தியா
இரும்பு கேட்டில் சிக்கிய யானையின் தலை: காப்பாற்றிய மற்றொரு யானை- வீடியோ வைரல்
- குடகு மாவட்டத்தில் உள்ள தித்திமதி அடர்ந்த வனப்பகுதி ஆகும்.
- யானைகள், மான், புலி, கரடி உள்ளிட்டவைகள் அதிக எண்ணிக்கையில் உள்ளன.
பெங்களூரு:
'ஆபத்தில் உதவுபவனே உண்மையான நண்பன்' என்று சொல்வார்கள். அப்படி ஒரு சம்பவம் 5 அறிவு ஜீவனான யானை நிகழ்த்தியுள்ளது. ஆபத்தில் சிக்கிய யானையை உடன் வந்த நண்பனான மற்றொரு யானை காப்பாற்றியுள்ள சம்பவம் அனைவரின் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகா மாநிலம் குடகு மாவட்டத்தில் உள்ள தித்திமதி அடர்ந்த வனப்பகுதி ஆகும். இங்கு யானைகள், மான், புலி, கரடி உள்ளிட்டவைகள் அதிக எண்ணிக்கையில் உள்ளன.
இந்த நிலையில் 2 காட்டு யானைகள் உணவு தேடி தித்திமதி பகுதியில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான மர சேகரிப்பு கிடங்கிற்குள் நுழைந்தன. அப்போது அந்த யானைகளில் ஒன்றின் தலை அங்கு பொருத்தப்பட்டிருந்த இரும்பு கேட்டின் இரும்பு கம்பிகளுக்கு இடையே சிக்கிக் கொண்டது.
தலை சிக்கிக்கொண்ட காட்டு யானையால், தலையை வெளியே எடுக்க முடியாமல் கேட்டை முன்னும் பின்னுமாக தள்ளி முயற்சித்தது. இருப்பினும் அந்த யானையால் தலையை வெளியே எடுக்க முடியவில்லை.
இதனால் வேதனையுடன் யானை பிளிறியது. இதை பார்த்த அதனுடன் வந்த மற்றொரு யானை, கேட்டில் சிக்கிய யானைக்கு உதவி செய்து மாட்டிய தலையை வெளியே எடுக்க உதவியது. தலை சிக்கிய யானைக்கு ஏதோ சைகை செய்த மற்றொரு யானை கேட்டை தன் பலம் கொண்டு தள்ளியது.
அப்போது தலை சிக்கிய யானை லேசாக தலையை சாய்த்து வெளியே எடுத்தது. பின்னர் மீண்டும் அடர்ந்த வனப்பகுதி 2 யானைகளும் புறப்பட்டு சென்றது.
2 யானைகளின் இந்த பரஸ்பர உதவி தித்திமதி பகுதியில் உள்ள பொதுமக்களை மட்டுமின்றி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.