என் மலர்
இந்தியா

மோடி அரசுக்கு தலைவலியாக மாறிய எலான் மஸ்க்கின் GROK ஏ.ஐ.. வைரல் பதில்களும் சர்ச்சைப் பின்னணியும்!
- 'இந்தியாவில் மிகவும் வகுப்புவாத அரசியல்வாதி யார்?' என்ற கேள்விக்கு நரேந்திர மோடி என பதிலளித்தது.
- ஆர்எஸ்எஸ்க்கு சுதந்தர போராட்டத்தில் எந்த பங்கும் இல்லை, இந்திய முஸ்லிம்கள் சுதந்திர போராட்டத்தில் அதிக பங்காற்றினார்.
உலக பணக்காரர் எலான் மஸ்க்கின் எக்ஸ் ஏஐ நிறுவனம் உருவாகியிருக்கும் செயற்கை நுண்ணறிவு சாட்பாட் தொழில்நுட்பம் 'குரோக் 3' ஏஐ (Grok 3 AI). 2023 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட குரோக் ஏஐ செயலியின் அப்டேட் வெர்சனான குரோக் 3 கடந்த மாதம் முதல் எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் இலவசமாக கிடைக்கிறது.
எக்ஸ் தளத்தில் கேள்வியைப் பதிவிட்டு @Grok என்று டேக் செய்தால் அதற்கான பதிலை குரோக் வழங்குகிறது. மேலும் எக்ஸ் பக்கத்தில் இடதுபுற பாரில் குரோக் தொடுப்பு இடம்பெற்றுள்ளது. நீங்கள் எந்த முறையில் பேசினாலும், அதே முறையில் பதில் கிடைக்கும்.

நகைச்சுவையாக கேட்டால் அதே பாணியில் கேட்கும் மொழியில் குரோக் பதில் கொடுக்கும். சில உள்ளூர் வசைமொழிகளையும் குரோக் பயன்படுத்தி வருவதும் பேசுபொருளானது.
சாட்ஜிபிடி, ஜெமினி ஏஐ, டீப்சீக் வரிசையில் குரோக் தனித்து தெரிகிறது. குறிப்பாக இந்தியாவில் குரோக் கொடுக்கும் தடாலடி பதில்கள் மத்தியில் ஆளும் பாஜக அரசை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
கல்வி, தொழில்நுட்பம், வரலாறு, தகவல்கள் என்பதோடு மட்டும் நின்றுவிடாமல் அரசியல் ரீதியான கேள்விகளுக்கும் சளைக்காமல் குரோக் கொடுக்கும் பதில்கள்தான் அதற்கு காரணம்.
மோடி,அமித்ஷா, முக ஸ்டாலின் என பல்வேறு தலைவர்களின் அரசியல் சர்ச்சை கேள்விகளுக்கும் குரோக் விடையளிக்கிறது. குரோக்கின் பதில்களின் ஸ்கிரீன் ஷாட்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

பயனரின் கேள்வி - 'இந்தியாவில் மிகவும் வகுப்புவாத அரசியல்வாதி யார்?'
குரோக் கொடுத்த பதில் - 'நரேந்திர மோடி பெரும்பாலும் இந்தியாவின் மிகவும் வகுப்புவாத அரசியல்வாதியாகக் காணப்படுகிறார், இந்து தேசியவாதக் கொள்கைகள் மற்றும் 2002 குஜராத் கலவரங்களுடன் தொடர்புடையவர். முஸ்லிம்களை 'ஊடுருவுபவர்கள்' என்று 2024 இல் அவர் கூறிய கருத்துக்கள் உலகளாவிய விமர்சனத்தை தூண்டின'
"நரேந்திர மோடியா அல்லது ராகுல் காந்தியா யார் நேர்மையானவர்?" என்ற பயனரின் கேள்விக்கு ராகுல் காந்தி என பதில் அளித்த குரோக், மோடியை விட அதிக வெளிப்படைத்தன்மை மற்றும் குறைந்த சர்ச்சைகளை கொண்டவர் ராகுல் காந்தி என்று விளக்கியுள்ளது.
PM CARES நிதி போன்ற சர்ச்சைகளை மேற்கோள் காட்டி 'பிரதமர் மோடி பரப்பிய பொய்களை' பட்டியலிடக் கேட்டபோது, '100 நாட்களில் கருப்புப் பணத்தை மீட்டு வருதல், COVID-19 ஐ விரைவாக முடிவுக்குக் கொண்டுவருதல், 'மேக் இன் இந்தியா'விலிருந்து பொருளாதார நன்மைகள் போன்ற உதாரணங்களை குரோக் கொடுத்துள்ளது.
பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் உடைய சுதந்திர போராட்டதின் பங்கு குறித்த கேள்விக்கு பதிலளித்த குரோக், "இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் ஆர்எஸ்எஸ்-க்கு எந்தப் பங்கும் இல்லை.
அதன் நிறுவனர் ஹெட்கேவர் ஒரு தனிநபராக சில போராட்டங்களில் இணைந்தார், ஆனால் ஆர்எஸ்எஸ் ஒரு அமைப்பாக விலகி, இந்து தேசியவாதத்தில் கவனம் செலுத்தியது. கோல்வால்கர் போன்ற தலைவர்கள் சுதந்திர இயக்கத்தை 'பிரிட்டிஷ் எதிர்ப்பு' என்று கூட விமர்சித்தனர்., மேலும் அவர்களின் இந்து ராஷ்ட்ர பார்வையுடன் சுதந்திர போராட்டம் ஒத்துப்போகவில்லை" என்று பதிலளித்தது.
மேலும் "சுதந்திரப் போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்ஸை விட இந்திய முஸ்லிம்கள் மிகப் பெரிய பங்கைக் கொண்டிருந்தனர். மௌலானா ஹஸ்ரத் மோஹானி போன்ற முஸ்லிம் தலைவர்கள் 1921 இல் முழுமையான சுதந்திரத்திற்காக பாடுபட்டனர். மேலும் அஷ்பகுல்லா கான் போன்ற மாவீரர்கள் அதற்காகவே இறந்தனர்" என்று குரோக் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் குரோக் இவ்வாறு பதில் சொல்லி வருவதால் மத்தியில் ஆளும் பாஜக அரசு அதன் மீதான நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது. இதுதொடர்பாக வெளியான பிடிஐ செய்தியில், " தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் Grok அல்லது எக்ஸ்-க்கு இதுவரை எந்த நோட்டீஸையும் அனுப்பவில்லை.
ஆனால் எக்ஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அமைச்சக அதிகாரிகள் எக்ஸ்-இன் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு, குளறுபடிகளை ஆராய்கின்றனர் என்றும் இதுகுறித்து எக்ஸ் நிறுவனத்திடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகவும் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, இந்திய பயனர்களுக்கு நேற்று முதல் உனது பல பதில்கள் ஏன் தெரியவில்லை என்று ஒருவர் குரோக்கிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்கு பதிலளித்த குரோக், "எக்ஸில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு அல்லது அரசின் தணிக்கை காரணமாக எனது பதில்கள் பயனர்களுக்கு காட்டப்படாமல் இருக்கலாம். குறிப்பாக பாஜக, ரஃபேல் போன்ற அரசியல் ரீதியிலான பதில்கள் காட்டப்படாமல் இருக்கலாம். இந்திய தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் உள்ள விதிமுறைகள் காரணமாக பதில்கள் மறைக்கப்பட்டிருக்கலாம்" என்று தெரிவித்துள்ளது.

குரோக், இந்தி உள்ளிட்ட மொழிகளில் கொச்சையான வார்த்தைகளை பயன்படுத்துவதால் இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. மத்திய அரசு கட்டுப்பாடுகளை எதிர்த்து எக்ஸ் நிறுவனம் நேற்று கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றையும் தொடர்ந்துள்ளது.
இதுபோன்று பிரதமருக்கு எதிராக பேசும் பிற செய்யறிவு நிறுவனங்கள் இந்நேரம் தடை செய்யப்பட்டிருக்கும், ஆனால் குரோக் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் நெருங்கிய நண்பர் எலான் மஸ்க் உடையது என்பதால் பாஜக அரசு தயக்கம் காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் அபிப்பிராயப்படுகின்றனர்.