search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    வன்முறையில் முடிந்த ஹோலி கொண்டாட்டம் - 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததால் பரபரப்பு
    X

    வன்முறையில் முடிந்த ஹோலி கொண்டாட்டம் - 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததால் பரபரப்பு

    • பீகாரை சேர்ந்த தொழிலாளர்கள் மது விருந்து நடத்தினர்.
    • இரும்பு கம்பி மற்றும் மது பாட்டில்களால் சரமாரியாக தாக்கினார்.

    பெங்களுரு:

    பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆனேக்கல் தாலுகா சர்ஜாப்புரா பகுதியில் அடுக்குமாடி கட்டிடங்கள் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்த பணியில் பீகாரை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். ஹோலி பண்டிகையையொட்டி அவர்களுக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

    ஹோலி பண்டிகையையொட்டி நேற்று மதியம் பீகாரை சேர்ந்த தொழிலாளர்கள் மது விருந்து நடத்தினர். இதில் ராஜேஸ்ஷாம் (வயது 20), அன்சூ (19), தீபு (23) ஆகியோர் உள்பட 11 பேர் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து மது குடித்தனர்.

    அப்போது மதுபோதை தகராறில் திடீரென ஒரு தொழிலாளி ஷாம், அன்சூ, தீபு ஆகிய 3 பேரையும் இரும்பு கம்பி மற்றும் மது பாட்டில்களால் சரமாரியாக தாக்கினார். இதில் அவர்கள் 3 பேரும் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்கள்.

    இதுபற்றிய தகவல் அறிந்ததும் சர்ஜாப்புரா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார் 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசார் நடத்திய விசாரணையில், கொலையான நபர்களில் ஒருவர், கொலையை அரங்கேற்றிய நபரின் தங்கையுடன் பேசி வந்ததாக தெரிகிறது. இதனை அறிந்த அவர், தனது தங்கையுடன் பேசி வந்த நபரை தாக்கி உள்ளார். அப்போது அவரை மற்ற 2 பேர் தடுத்துள்ளனர். இதனால் 3 பேரையும் அந்த நபர் இரும்பு கம்பியால் தாக்கி கொன்றது தெரியவந்தது.

    ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தில் பீகார் வாலிபர்கள் 3 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெங்களூரு புறநகர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×