search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சர்வதேச விமான கண்காட்சி இந்தியாவின் புதிய பலத்தையும் திறமையையும் பிரதிபலிக்கிறது- பிரதமர் மோடி பேச்சு
    X

    சர்வதேச விமான கண்காட்சி இந்தியாவின் புதிய பலத்தையும் திறமையையும் பிரதிபலிக்கிறது- பிரதமர் மோடி பேச்சு

    • தனியார் நிறுவனங்களை இந்தியாவின் பாதுகாப்பு துறையில் முடிந்தவரை முதலீடு செய்ய அழைக்கிறேன்.
    • 5 நாட்கள் நடைபெறும் கண்காட்சியில் 700-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மற்றும் 98 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

    பெங்களூரு:

    பெங்களூரு எலகங்கா விமானப்படை தளத்தில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை சர்வதேச விமான கண்காட்சி நடைபெற்று வருகிறது.

    அதன்படி, 14-வது சர்வதேச விமான தொழில் கண்காட்சி எலகங்கா விமானப்படை தளத்தில் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி வருகிற 17-ந் தேதி வரை 5 நாட்கள் நடைபெற உள்ளது.

    ஆசியாவின் மிகப்பெரிய விமான கண்காட்சி நிகழ்வான ஏரோஇந்தியா கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

    ஏரோ இந்தியா கண்காட்சி இந்தியாவின் புதிய பலத்தையும், திறமையையும் பிரதிபலிக்கிறது. இந்த சர்வதேச விமான கண்காட்சி ஒரு நிகழ்ச்சி மட்டுமல்ல. இந்தியாவின் தன்னம்பிக்கையின் பிரதிபலிப்பதாகவும் உள்ளது. பல நாடுகளுக்கு பாதுகாப்பு பங்காளியாக இருக்கிறது.

    இந்த ஏரோ இந்தியா கண்காட்சி இந்தியாவின் புதிய அணுகு முறையை வெளிப்படுத்துகிறது.

    புதிய இந்தியாவின் திறமைக்கு பெங்களூருவின் இன்றைய வான்வெளி சாட்சியாகி கொண்டு இருக்கிறது. புதிய உயரங்களே புதிய இந்தியாவின் முகம் என்பதற்கு சாட்சியாகி கொண்டு இருக்கிறது. நாடு புதிய உயரங்களை தொட்டு அதனை கடந்து செல்லும்.

    பெருகிவரும் இந்தியாவின் திறமைக்கு 'ஏரோ இந்தியா 2023' ஒரு சான்றாகும். தேஜஸ் விமானம் அதற்கு உதாரணம்.

    இந்த கண்காட்சியில் 100 நாடுகள் பங்கேற்று இருப்பது உலக நாடுகள் மத்தியில் இந்தியாவின் மதிப்பு அதி கரித்து இருப்பதை காட்டுகிறது. இந்தியா மற்றும் உலக நாடுகளில் இருந்து 700-க்கும் அதிகமானவர்கள் கண் காட்சியில் பங்கேற்றுள்ளனர். இது கடந்த காலத்தின் அனைத்து சாதனைகளையும் முறியடித்துள்ளது.

    21-ம் நூற்றாண்டின் புதிய இந்தியா எந்த வாய்ப்பையும் இழக்காது. ஒவ்வொரு துறையிலும் புரட்சியை கொண்டு வருகிறோம். பல ஆண்டுகளாக மிகப்பெரிய பாதுகாப்பு இறக்குமதியாளராக இருந்த நாடு தற்போது உலகின் 75 நாடுகளுக்கு பாதுகாப்பு உபகரணங்களை ஏற்றுமதி செய்கிறது.

    கடந்த 5 ஆண்டுகளில் நாட்டின் பாதுகாப்பு ஏற்றுமதி 6 மடங்கு அதிகரித்து உள்ளது. 2021-22-ம் ஆண்டில் இதுவரை ரூ.12 ஆயிரம் கோடிக்கு மேல் ஏற்றுமதி செய்துள்ளோம்.

    உலகின் மிகப்பெரிய பாதுகாப்பு உற்பத்தி நாடுகளில் இந்தியாவும் வேகமாக இணையும். தனியார் துறை யும், முதலீட்டாளர்களும் இதில் முக்கிய பங்கு வகிக்க போகிறார்கள். தனியார் நிறுவனங்களை இந்தியாவின் பாதுகாப்பு துறையில் முடிந்தவரை முதலீடு செய்ய அழைக்கிறேன்.

    பாதுகாப்பு துறையில் உள்ள ஒவ்வொரு முதலீடும், உலகின் பல நாடுகளில் உங்கள் வர்த்தகத்திற்கான புதிய வழிகளை உருவாக்கும். புதிய வாய்ப்புகள் காத்திருக்கின்றன. தனியார் துறை இந்த நேரத்தை விடக்கூடாது.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    அதைத் தொடர்ந்து விமானப்படை வீரர்களின் சாகச நிகழ்ச்சிகள் நடை பெற்றது. ஏராளமான விமானங்கள் வானில் பல்வேறு சாகசங்களை நிகழ்த்தின. விமானப்படை வீரர்களும் பல்வேறு சாகசங்களையும் செய்து காட்டினார்கள். இதை ஏராளமான பொது மக்கள் கண்டு ரசித்தனர். இந்த சாகச நிகழ்ச்சி மெய்சிலிர்க்கும் வகையில் அமைந்தது.

    இந்த சாகசத்தை பிரதமர் நரேந்திரமோடி வெகுவாக ரசித்து பார்த்தார். 2 மணி நேரம் விமான சாகசங்கள் நடந்தது. இதில் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மற்றும் தலைவர்கள் பங்கேற்றனர்.

    5 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் 700-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மற்றும் 98 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர். அமெரிக்காவின் அதிநவீன எப்18, எப்16 ரக விமானங்கள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் விமானங்களும் இடம் பெற்றுள்ளன.

    Next Story
    ×