search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    இஸ்ரேல் பெண் உள்பட 2 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை- தலைமறைவாக இருந்த வாலிபர் தமிழகத்தில் கைது
    X

    இஸ்ரேல் பெண் உள்பட 2 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை- தலைமறைவாக இருந்த வாலிபர் தமிழகத்தில் கைது

    • கர்நாடகாவில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    • பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 2 பெண்களும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை முடிந்து திரும்பினர்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் விஜயநகரா மாவட்டம் ஹம்பி நகர் உலகப்புகழ் பெற்ற சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. இங்கு தினமும் பல்வேறு நாடுகளில் இருந்தும், பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள்.

    இந்த நிலையில் கடந்த வாரம் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த 27 வயது இளம் பெண் ஒருவர் சுற்றுலாவுக்ககாக ஹம்பி நகருக்கு வந்தார். அதே போல் அமெரிக்காவை சேர்ந்த டேனியல், மகாராஷ்டிராவை சேர்ந்த பங்கஜ், ஒடிசாவை சேர்ந்த பிபாஸ் ஆகியோரும் அங்கு சுற்றுலாவுக்கு வந்தனர். சம்பவத்தன்று இரவு இஸ்ரேல் பெண் உள்பட 4 சுற்றுலா பயணிகள் மற்றும் ஹம்பியில் தங்கும் விடுதி நடத்தி வரும் 29 வயதான இளம்பெண் ஆகிய 5 பேரும் துங்கபத்ரா நதியின் இடதுகரையில் இசையை ரசித்தப்படி, இயற்கையை கண்டு ரசித்து கொண்டு இருந்தனர்.

    அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் சுற்றுலா பயணிகளிடம் பணம் கேட்டு தகராறு செய்தனர்.

    பின்னர் அவர்கள் இஸ்ரேல் பெண் சுற்றுலா பயணி, தங்கும் விடுதி நடத்தி வந்த இளம்பெண் ஆகியோரை கூட்டுபாலியல் வன்கொடுமை செய்தனர். இதை தடுக்க முயன்ற டேனியல், பங்கஜ், பிபாஸ் ஆகிய 3 பேரையும் அடித்து கால்வாயில் வீசினர். இதில் டேனியல், பங்கஜ் ஆகியோர் தப்பினர். ஆனால் ஒடிசாவை சேர்ந்த சுற்றுலா பயணி பிபாஸ் பிணமாக மீட்கப்பட்டார்.

    கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தையடுத்து போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். அதன்படி கண்காணிப்பு கேமரா காட்சிகள் உதவியுடன் இந்த வழக்கு தொடர்பாக ஹண்டி மல்லேஷ் (22), சேதன் சாய் சில்லேக்யதர் (21) ஆகிய 2 வாலிபர்களை அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தினர். மேலும் சம்பவம் நடந்த இடத்துக்கு அவர்களை அழைத்து சென்றும் விசாரணை நடத்தினர். மேலும் தலைமறைவானவர் குறித்து நடத்திய விசாரணையில் அவரது பெயர் ஷரணப்பா என்பதும் அவர் தமிழ்நாட்டில் பதுங்கி இருப்பதாகவும் தெரியவந்தது. இதையடுத்து கர்நாடகா தனிப்படை போலீசார் அவரை தமிழகத்தில் கைது செய்து கர்நாடகாவுக்கு அழைத்து சென்றனர். அவர் தமிழகத்தில் எங்கு கைது செய்யப்பட்டார் என்ற விபரத்தை போலீசார் வெளியிடவில்லை். தற்போது 3 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவத்தையடுத்து கர்நாடகாவில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இதற்கிடையே ஆற்றில் தள்ளிவிட்டு கொலை செய்யப்பட்ட ஒடிசா சுற்றுலா பயணி பிபாஸ் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு நேற்று அவரது சொந்த கிராமத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அதே போல் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 2 பெண்களும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை முடிந்து திரும்பினர்.

    Next Story
    ×