என் மலர்
இந்தியா

ஹனி டிராப் வலையில் 48 அரசியல்வாதிகள்.. கர்நாடக சட்டமன்றத்தில் பரபரப்பை கிளப்பிய அமைச்சர்
- இந்த விவகாரம் தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
- ஹனி டிராப் வலையில் வீழ்த்த முயற்சி செய்யப்பட்டதாக கூறினார்.
அழகான பெண்களை பேச வைத்து படுக்கையில் நெருக்கமாக இருக்க வைத்து பின்னர் அதனை வீடியோ, புகைப்படமாக எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டி பணம் பறிப்பது ஹனி டிராப் என அழைக்கப்படுகிறது. கர்நாடகாவில் தனக்கு எதிராக ஹனி டிராப் வலை வீசப்பட்டு தோல்வி அடைந்தாக அம்மாநில அமைச்சர் கே.என். ராஜண்ணா தெரிவித்துள்ளார்.
இதேபோல் கர்நாடக மாநிலத்தில் கிட்டத்தட்ட 48 அரசியல் தலைவர்களுக்கு எதிராக ஹனி டிராப் மோசடிக்கு இலக்காகி இருப்பதாக அம்மாநில கூட்டுறவத் துறை அமைச்சர் கே.என். ராஜண்ணா பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். அமைச்சர் குற்றச்சாட்டை தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
கர்நாட மாநில சட்டமன்றத்தில் பட்ஜெட் விவாதத்தின் போது பேசிய பா.ஜ.க. எம்.எல்.ஏ. பசனகௌடா பாட்டீல் யத்னல், கூட்டுறவுத் துறை அமைச்சரை ஹனி டிராப் வலையில் வீழ்த்த முயற்சி செய்யப்பட்டதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இது குறித்து பேசிய அமைச்சர் ராஜண்ணா, "பலர் கர்நாடகா சிடி மற்றும் பென் டிரைவ் ஆலையாக மாறிவிட்டதாக கூறுகின்றனர். இது மிகமுக்கிய பிரச்சனை. தும்குருவை சேர்ந்த அமைச்சர் ஹனி டிராப்பில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. தும்குருவை சேர்ந்தவர்கள் நானும், பரமேஷ்வராவும் தான். இது தொடர்பாக நான் குற்றச்சாட்டு சமர்பிக்க இருக்கிறேன். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்," என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், ஹனி டிராப் விவகாரத்தில் கிட்டத்தட்ட பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த 48 பேர் சிக்கியுள்ளனர் என்று தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் கர்நாடகா மட்டுமின்றி தேசிய அளவில் நீள்கிறது. நாடு முழுக்க பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் இதில் சிக்கியுள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தன்மீதான குற்றச்சாட்டுகள் குறித்து தான் இங்கு விளக்கம் அளிக்க முடியாது என்றும் உள்துறை அமைச்சருக்கு இது தொடர்பாக தான் புகார் அளித்துள்ளதாக தெரிவித்தார். இந்த விவகாரத்தில் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் யார் யார் என்பது வெளிவரட்டும். பொதுமக்கள் இதனை அறிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.