என் மலர்
இந்தியா
தமிழகத்திற்கு No... தெலுங்கானாவிற்கு Yes... தீவிர பிரசாரத்தில் குஷ்பு
- தெலுங்கானா மாநிலத்தில் பா.ஜ.க வேட்பாளர்களை ஆதரித்து குஷ்பு பிரசாரத்தில் குதித்துள்ளார்.
- தேர்தல் பிரசாரத்தில் திறந்த வேனில் நின்றபடி குஷ்பு உற்சாகமாக பேசினார்.
பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலின் போது பா.ஜ.க கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் தொடங்கினார்.
வேலூரில் பாஜக கூட்டணி கட்சி வேட்பாளர் ஏசி சண்முகத்தை ஆதரித்து நடிகர் குஷ்பூ பிரசாரம் செய்த அவர் திடீரென்று பிரசாரத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
உடல் நிலை பாதிப்பு காரணமாக நீண்ட நேரம் நிற்க முடியவில்லை. டாக்டர்கள் பிரசாரம் செய்ய வேண்டாம் என கூறியதால் பிரசாரத்தில் இருந்து கனத்த இதயத்துடன் விலகுவதாக பா.ஜனதா தலைவர் நட்டாவுக்கு கடிதம் மூலம் தகவல் தெரிவித்தார். குஷ்புவுக்கு பதிலாக அவரது கணவர் நடிகரும் இயக்குனருமான சுந்தர்.சி பிரசார களத்தில் இறங்கினார். வேலூர் தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து தொகுதி முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.
இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் பா.ஜ.க வேட்பாளர்களை ஆதரித்து குஷ்பு பிரசாரத்தில் குதித்துள்ளார். செகந்திராபாத் தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிடும் கிஷன் ரெட்டியை ஆதரித்து நேற்று குஷ்பு பிரசாரம் செய்தார்.
அவரை காண உள்ளூர் தலைவர்களுடன் ஏராளமான ரசிகர்கள் கலந்து கொண்டனர். தேர்தல் பிரசாரத்தில் திறந்த வேனில் நின்றபடி குஷ்பு உற்சாகமாக பேசினார். அவர் தனது ரசிகர்களை வாழ்த்தி உற்சாகப்படுத்தினார்.
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 17 பாராளுமன்ற தொகுதியில் பாஜக தனித்து போட்டியிடுகிறது. தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நடிகை குஷ்பு நடித்து பிரபலமானார்.
இதனால் குஷ்புவை பாஜக மேலிடம் பிரசார களத்தில் இறக்கி உள்ளது. தமிழகத்தில் பிரசாரத்திற்கு மறுத்த குஷ்பு தெலுங்கானா மாநிலத்தில் திறந்த வேனில் நின்றபடி பிரசாரம் செய்வது பரபரப்பை ஏற்படுத்தியது.