என் மலர்tooltip icon

    இந்தியா

    பாராளுமன்ற தேர்தலுக்கு காங்கிரஸ் தயார் ஆகிறது- கார்கே தலைமையில் இன்று முக்கிய ஆலோசனை
    X

    மல்லிகார்ஜூன கார்கே

    பாராளுமன்ற தேர்தலுக்கு காங்கிரஸ் தயார் ஆகிறது- கார்கே தலைமையில் இன்று முக்கிய ஆலோசனை

    • ராகுல்காந்தி தற்போது நாடு முழுவதும் ஒற்றுமை பாத யாத்திரையை நடத்தி வருகிறார்.
    • 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கான காங்கிரஸ் பணிக்குழு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் இன்று முதல்முறையாக கூடுகிறது.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு வருகிற 2024-ம் ஆண்டு தேர்தல் நடக்கிறது.

    கடந்த 2014-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியை தழுவியதால் மத்தியில் ஆட்சியை இழந்தது. அதன்பிறகு 2019-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் காங்கிரஸ் கட்சியால் வெற்றி பெற முடியவில்லை.

    பா.ஜனதா தொடர்ந்து ஆட்சியை தக்கவைத்தது. வருகிற 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைப்பதற்கான முயற்சிகளில் பா.ஜனதா ஈடுபட்டுள்ளது.

    இந்த நிலையில் வருகிற 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சியும் தயாராகி வருகிறது. இந்த முறை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் வியூகம் வகுத்து வருகிறது.

    ராகுல்காந்தி தற்போது நாடு முழுவதும் ஒற்றுமை பாத யாத்திரையை நடத்தி வருகிறார். கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த 150 நாள் பாதயாத்திரை காஷ்மீரில் முடிவடைகிறது. இதன்மூலம் ராகுல்காந்தி மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.

    மேலும் காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவராக மல்லிகார்ஜூன கார்கே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்காக காங்கிரஸ் கட்சியில் தேர்தல் பணிக்குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

    தேர்தல் பணிக்குழுவில் ப.சிதம்பரம், முகுல் வாஸ்னிக், ஜெய்ராம் ரமேஷ், கே.சி.வேணுகோபால், அஜய் மக்கானி, ரந்தீப் சுர்ஜேவாலா, பிரியங்கா காந்தி, சுனில்கனு கோலு ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த 8 பேர் கொண்ட பணிக்குழுவை சோனியா காந்தி அமைத்துள்ளார்.

    இந்த நிலையில் 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கான காங்கிரஸ் பணிக்குழு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் இன்று முதல்முறையாக கூடுகிறது.

    அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக மல்லிகார்ஜூன கார்கே பொறுப்பேற்ற பிறகு, தேர்தல் பணிக்குழுவுடன் நடைபெற உள்ள முதல் கூட்டம் இதுவாகும்.

    இதில் பணிக்குழு உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்கிறார்கள். மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தல் வியூகம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து முக்கிய ஆலோசனைகள் நடத்தப்படுகிறது.

    தேர்தல் பணிக்குழு உறுப்பினர்கள், பணிக்குழுவின் பணிகள் மற்றும் பாராளுமன்ற தேர்தலை சந்திப்பதற்கான திட்டம் ஆகியவை குறித்து மல்லிகார்ஜூன கார்கேயிடம் விளக்கம் அளிக்க உள்ளனர்.

    Next Story
    ×