என் மலர்
இந்தியா
கர்நாடகாவில் தனியார் பஸ் கவிழ்ந்து 4 பேர் பலி
- பஸ் அந்த பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்தானது.
- இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் பெயர் விபரம் உடனடியாக தெரியவில்லை.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து 50 பயணிகளுடன் கோகர்ணாவுக்கு தனியார் பஸ் புறப்பட்டது. இந்த பஸ் சித்ரதுர்கா மாவட்டம் ஹோலல்கெரே தாலுகா அருகே இன்று அதிகாலை 4 மணியளவில் சென்று கொண்டிருந்தது.
அப்போது பஸ் அந்த பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்தானது. இதில் சம்பவ இடத்திலேயே 4 பேர் பலியானார்கள். 38 பேர் காயமடைந்தனர்.
இவர்களில் 8 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. விபத்து பற்றி தெரியவந்ததும், சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்களை மீட்டு ஹோலல்கெரே தாலுகா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விபத்தான பஸ்சை கிரேன் மூலம் மீட்டனர்.
இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் பெயர் விபரம் உடனடியாக தெரியவில்லை. இந்த விபத்து குறித்து ஹோலல்கெரே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருவதாகவும் அறிவியல் பூர்வமற்ற முறையில் இந்த சாலை அமைக்கப்பட்டதே தொடர் விபத்துக்கான காரணம் என்று பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.