search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    துபாயில் நண்பருடன் சேர்ந்து நகைக்கடை நடத்திய ரன்யா ராவ்
    X

    துபாயில் நண்பருடன் சேர்ந்து நகைக்கடை நடத்திய ரன்யா ராவ்

    • துபாயில் சில வியாபாரிகளிடம் வாங்கும் தங்கத்திற்காக வெளிநாட்டு பணத்தை ரன்யா ராவ் பயன்படுத்தி உள்ளார்.
    • கடந்த 2023-ம் ஆண்டில் இருந்து பெங்களூரு, கோவா, மும்பையில் இருந்து 52 முறை துபாய்க்கு சென்றுள்ளார்.

    கன்னட நடிகையான ரன்யா ராவ் தங்கம் கடத்தல் வழக்கில் டெல்லி வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த தங்கம் கடத்தல் வழக்கில் ரன்யா ராவின் நண்பரும், தெலுங்கு நடிகருமான தருண் ராஜும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    அதே நேரத்தில் ரன்யா ராவின் வளர்ப்பு தந்தையும், மூத்த ஐ.பி.எஸ். அதிகாரியுமான ராமசந்திர ராவை, கர்நாடக அரசு கட்டாய விடுப்பில் அனுப்பி வைத்துள்ளது. அவருக்கு எந்த பதவியும் வழங்காமல் காத்திருப்போர் பட்டியலில் வைத்துள்ளது. தங்கம் கடத்தல் வழக்கு தொடர்பாக சி.பி.ஐ., அமலாக்கத்துறை அதிகாரிகள் தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மறுபுறம் தங்கம் கடத்தலுக்கு பின்னணியில் இருப்பவர்களை பிடிக்க வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். அந்த கோணத்தில் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் சில பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

    அதாவது துபாயில் இருந்து தங்கம் கடத்துவதற்காக, அங்கு ஒரு நகைக்கடையை நடத்தி வந்த அதிர்ச்சி தகவலும் வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. அதாவது அந்த நகைக்கடையில் ரன்யா ராவ், தருண் ராஜு தலா 50 சதவீத பணத்தை முதலீடு செய்து நடத்தி வந்துள்ளனர். துபாயில் சில வியாபாரிகளிடம் வாங்கும் தங்கத்திற்காக வெளிநாட்டு பணத்தை ரன்யா ராவ் பயன்படுத்தி உள்ளார்.

    இவ்வாறு தங்கம் வாங்கிய போது, ஒரு வியாபாரி ரன்யா ராவிடம் ரூ.1.70 கோடியை பெற்று விட்டு, தங்கத்தை கொடுக்காமல் மோசடி செய்திருந்தார். இந்த ரூ.1.70 கோடியை ஹவாலா மூலமாக துபாய்க்கு ரன்யா ராவ் கொண்டு சென்றிருந்ததாக நடிகர் தருண் ராஜ் வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளிடம் கூறியுள்ளார். அதே நேரத்தில் ரன்யா ராவ், தருண் ராஜு ஆகியோருக்கு துபாய் மட்டும் இன்றி ஜெனிவா, பாங்காக்கை சேர்ந்த நகை வியாபாரிகளுடனும் தொடர்பு இருந்துள்ளது.

    அவர்கள் மூலமாகவும் தங்கத்தை வாங்கியதையும் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இதற்காக தான் துபாயில் நகைக்கடையை 2 பேரும் நடத்தி வந்துள்ளனர். துபாயில் இருந்து தங்கத்தை கடத்தி வரும் போது, தான் நடத்தி வரும் நிறுவனம் பற்றியும், சுவிட்சர்லாந்து, ஜெனிவாவுக்கு செல்வதாக துபாய் அதிகாரிகளை ரன்யா ராவ் ஏமாற்றி வந்துள்ளார். இதற்காக அவரிடம் அமெரிக்க நாட்டு விசாவும் இருந்துள்ளது.

    கடந்த 2023-ம் ஆண்டில் இருந்து அவர் பெங்களூரு, கோவா, மும்பையில் இருந்து 52 முறை துபாய்க்கு சென்றுள்ளார். பெரும்பாலும் ஒரே நாளில் இந்தியாவில் இருந்து துபாய்க்கு சென்றுவிட்டு, திரும்பி வந்திருப்பதையும் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இதன்மூலமாக அவர் தங்கம் கடத்தலில் தொடர்ந்து ஈடுபட்டு இருப்பதும், அவருக்கு பின்னணியில் பெரிய கடத்தல் கும்பல் இருப்பதையும் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

    அதே நேரத்தில் ரன்யா ராவ், தருண் ராஜு வங்கி கணக்குகளை அதிகாரிகள் ஆய்வு செய்ததில், பல கோடி ரூபாய் வங்கி கணக்குகளுக்கு வந்திருப்பதும், அது உடனடியாக மற்ற வங்கி கணக்குகளுக்கு மாற்றப்பட்டு இருப்பதும் தெரியவந்துள்ளது. ரன்யா ராவ் தங்கம் கடத்தலுக்கு பின்னணியில் சர்வதேச அளவில் பெரிய கடத்தல் கும்பல் இருக்கலாம் என்ற கோணத்திலும் சி.பி.ஐ. மற்றும் வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

    இதையடுத்து, ரன்யா ராவ், தருண் ராஜுக்கு வந்திருந்த வெளிநாட்டு செல்போன், தொலைபேசி அழைப்புகள் குறித்தும் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். அத்துடன் தங்கம் கடத்தல் விவகாரம் தொடர்பாக 50-க்கும் மேற்பட்ட நபர்களை பிடித்து வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி தகவல்களை பெற்றுள்ளனர்.

    இதனால் கூடிய விரைவில் தங்கம் கடத்தலுக்கு பின்னணியில் இருக்கும் முக்கிய நபர்கள் சிக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

    Next Story
    ×