என் மலர்
இந்தியா
ஆந்திராவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்- சந்திரபாபு நாயுடுவுக்கு ரேவந்த் ரெட்டி பதிலடி
- ஆந்திர மாநிலத்தில் உண்மையான எதிர்க்கட்சி இல்லை.
- இரு மாநிலங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பதி:
ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களுக்கு இடையே நிலவும் பிரச்சனைகள் குறித்து முதல் மந்திரிகள் சந்திரபாபு நாயுடு, மற்றும் ரேவந்த் ரெட்டி இருவரும் கடந்த 6-ந்தேதி சந்தித்து பேசினர்.
இதனையடுத்து பேட்டி அளித்த சந்திரபாபு நாயுடு தெலுங்கானா மாநிலத்தில் தெலுங்கு தேசம் கட்சி மீண்டும் தனது பழைய பெருமையை மீட்டெடுக்கும். தெலுங்கானா மாநிலத்திலும் தெலுங்கு தேசம் கட்சிக்கு பொதுமக்கள் ஆதரவு அளிப்பார்கள் என்றார்.
இந்த நிலையில் ஆந்திர மாநிலத்தில் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் பிறந்த நாள் விழாவில் தெலுங்கானா முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி கலந்து கொண்டார்.
ஆந்திர மாநிலத்தில் உண்மையான எதிர்க்கட்சி இல்லை. ஆந்திர மாநிலத்தில் வருகிற 2029-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வரும். கடப்பாவில் இடைத்தேர்தல் நடக்க வாய்ப்பு உள்ளது. அதில் தீவிர பிரசாரம் செய்து காங்கிரஸ் வெற்றி பெறுவதை உறுதி செய்வேன்.
ஓய்.எஸ். ராஜசேகர ரெட்டி, ராகுல் காந்தியை பிரதமராக பார்க்க நினைத்தார். அதனை நிறைவேற்ற பாடுபடுவோம். ஆந்திர மாநிலத்தில் தற்போது உண்மையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெறுகிறது.
சந்திரபாபு நாயுடு, ஜெகன் மோகன் ரெட்டி, பவன் கல்யாண் ஆகியோர் நரேந்திர மோடியின் ஆதரவாளர்கள்.
ஆந்திராவில் தற்போது எதிர்க்கட்சியே இல்லை. ஒய்.எஸ். சர்மிளா மக்களின் குறலாக இருப்பார். சர்மிளாவை முதல் மந்திரி ஆக்குவதுடன் ராஜசேகர ரெட்டி ஆசையை நிறைவேற்ற காங்கிரஸ் தொண்டர்கள் பாடுபட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆந்திர தெலுங்கானா மாநில பிரச்சனைகள் குறித்த சந்திப்புக்கு பிறகு சந்திரபாபு நாயுடு மற்றும் ரேவந்த் ரெட்டி இருவரும் மோதும் விதத்தில் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். இது இரு மாநிலங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.