என் மலர்
இந்தியா
ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு
- ஆற்றில் மூழ்கி பலியான 4 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
- ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் ஆற்றில் மூழ்கி பலியான சம்பவம் திருச்சூரில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள செறுதுருத்தி பகுதியை சேர்ந்தவர் கபீர் (வயது47). பேக்கரி உரிமையாளர். இவரது மனைவி ஷாஹினா(35). இவர்களது மகள் சாரா(10). இவர்கள் 3 பேரும் பாரதப்புழா ஆற்றுக்கு சென்றனர்.
அவர்களுடன் ஷாஹினாவின் தங்கை மகன் புவாத் சனின்(12) என்ற சிறுவனும் சென்றான். கணவன்-மனைவி இருவரும் ஆற்றங்கரையில் நின்று பேசிக் கொண்டிருந்த போது, சிறுமி மற்றும் சிறுவன் ஆகிய இருவரும் ஆற்றங்கரையில் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது சிறுமி சாரா எதிர்பாராதவிதமாக ஆற்றுக்குள் விழுந்தாள். இதனைப்பார்த்த சிறுவன் புவாத் சனின், சிறுமியை காப்பாற்ற முயன்றான். ஆனால் இருவரும் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த கபீர், அவரது மனைவி ஷாஹினா ஆகியோரும் ஆற்றுக்குள் இறங்கினர்.
அப்போது அவர்களும் ஆற்று தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார்கள். 4 பேர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதை பார்த்த அந்த பகுதி பொதுமக்கள், ஆற்றுக்குள் இறங்கி அவர்களை காப்பாற்ற முயன்றனர். அப்போது ஷாஹினாவை மட்டுமே மீட்க முடிந்தது.
அவர் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மற்ற 3 பேரையும் தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.
நீண்ட தேடுதல் வேட்டைக்கு பிறகு கபீர், சிறுமி சாரா, சிறுவன் புவாத் சனின் ஆகிய 3 பேரும் பிணமாக மீட்கப்பட்டனர். ஆற்றில் மூழ்கி பலியான 4 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக திருச்சூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இந்த சம்பவம் குறித்து செறுதுருத்தி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் ஆற்றில் மூழ்கி பலியான சம்பவம் திருச்சூரில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.