என் மலர்
இந்தியா
திருப்பதியில் சாமி தரிசனத்துக்கு ரூ.10,500 கேட்பதாக நடிகை பரபரப்பு புகார்
- நடிகை அர்ச்சனா செல்பி வீடியோ எடுப்பதும் அதனை தேவஸ்தான ஊழியர்கள் தடுக்க முயல்கின்றனர். அவர்களிடம் ஆவேசமாக நடிகை பேசுகிறார்.
- நடிகை அர்ச்சனா கவுதம் சிபாரிசு கடிதத்தில் அளிக்கப்பட்டிருந்த குறிப்பிட்ட நேரத்தில் வராமல் தாமதமாக வந்ததாக திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
திருப்பதி:
பாலிவுட் நடிகை அர்ச்சனா கவுதம். இவர் உத்தரபிரதேச மாநிலம் அஸ்தினாபூர் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளராக நிறுத்தப்பட்டவர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக கடந்த 1-ந்தேதி அர்ச்சனா கவுதம் திருப்பதி வந்தார்.
அங்குள்ள தலைமை செயல் அதிகாரி அலுவலகத்தில் தனது சிபாரிசு கடிதம் மூலம் விஐபி தரிசன டிக்கெட் பெற முயன்றார். அவரிடம் அங்கிருந்த ஊழியர்கள் அநாகரிகமாக பேசியதாக கூறப்படுகிறது.
மேலும் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு ரூ.10ஆயிரம் நன்கொடை வழங்கி பிறகு ரூ.500 விஐபி டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம் என ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அங்கிருந்த ஊழியர்களிடம் நடிகை அர்ச்சனா கவுதம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
மேலும் ஊழியர்கள் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறி அங்கிருந்தே செல்பி வீடியோ எடுத்துள்ளார்.
இந்த வீடியோவை நடிகை அர்ச்சனா கவுதம் நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்தார்.
அதில் நடிகை அர்ச்சனா செல்பி வீடியோ எடுப்பதும் அதனை தேவஸ்தான ஊழியர்கள் தடுக்க முயல்கின்றனர். அவர்களிடம் ஆவேசமாக நடிகை பேசுகிறார்.
பின்னர் தேவஸ்தான ஊழியர்கள் மீது கண்ணீர் மல்க குற்றச்சாட்டு அளிக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன. இந்து மத தலங்கள் கொள்ளை அடிக்கும் கூடாரமாக மாறிவிட்டது. மதத்தின் பெயரால் பெண்களிடம் அநாகரிகமாக நடந்து கொள்ளும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். விஐபி தரிசனம் என்ற பெயரில் ரூ.10,500 கேட்கின்றனர் என கூறியுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கு திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். நடிகை அர்ச்சனா கவுதம் சிபாரிசு கடிதத்தில் அளிக்கப்பட்டிருந்த குறிப்பிட்ட நேரத்தில் வராமல் தாமதமாக வந்தார்.
எனவே அவரை ஊழியர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கவில்லை. அவருக்கு தேவைப்பட்டால் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு ரூ.10 ஆயிரம் நன்கொடையாக வழங்கிவிட்டு விஜபி தரிசன டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்தனர். அதை அவர் தவறாக புரிந்து கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார் என தெரிவித்துள்ளனர்.