search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    விழாக்கோலமான வாரணாசி நகரம்- காசி தமிழ் சங்கமத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
    X

    விழாக்கோலமான வாரணாசி நகரம்- காசி தமிழ் சங்கமத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

    • நிகழ்ச்சியில் தமிழக தலைவர்கள் மத்திய மந்திரி எல்.முருகன், அண்ணாமலை, பொன்.ராதா கிருஷ்ணன், மாநிலங்களவை உறுப்பினர் இளையராஜா உள்ளிட்டோரும் கலந்து கொண்டுள்ளனர்.
    • ஒரு மாதம் நடைபெறும் நிகழ்ச்சியில் 12 குழுக்களாக தமிழகத்தில் இருந்து 2,500 பேர் பங்கேற்றுள்ளனர்.

    பன்னெடுங்காலமாக காசிக்கும் தமிழகத்துக்கும் இடையே கலை, கலாச்சாரம், ஆன்மீக ரீதியாக நெருங்கிய தொடர்பு இருந்து வருகிறது.

    ஏற்கனவே தமிழ் கலாச்சாரத்தையும், தமிழின் பெருமையையும் அடிக்கடி மேற்கோள்காட்டி வரும் பிரதமர் மோடி, இந்த உறவை இரு மாநில மக்களும் அறிந்து கொள்ளவும், பகிர்ந்து கொள்ளவும் 'காசி தமிழ் சங்கமம்' என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார்.

    இந்த நிகழ்ச்சியை மத்திய கல்வி அமைச்சகம், கலாச்சாரம், ரெயில்வே உள்ளிட்ட துறைகளுடன் உத்தரபிரதேச அரசும் இணைந்து பிரமாண்டமாக நடத்துகிறது.

    சென்னை ஐ.ஐ.டி., வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

    மாணவர்கள், இலக்கிய வாதிகள், தமிழறிஞர்கள், தொழில் முனைவோர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள். அவர்கள் தங்கள் துறை சார்ந்தவர்களுடன் கலந்துரையாடவும், உள்ளூர் வாசிகளுடன் கலந்துரையாடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    தமிழ் சங்கமம் நிகழ்ச்சியையொட்டி காசி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. தமிழகத்தில் இருந்து செல்பவர்களை வரவேற்கவும், அவர்களுக்கு தங்குமிடம், உணவு மற்றும் அடிப்படை வசதிகள் அனைத்தையும் எந்த குறையும் இல்லாமல் செய்து கொடுக்க வேண்டும் என்றும் அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டு உள்ளார்.

    பாரதியார் காசியில் சில காலம் வசித்துள்ளார். அங்குள்ள அனுமன்காட் பகுதியில் பாரதியின் இல்லம் உள்ளது. மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் நேற்று வாரணாசி சென்றார். அப்போது பாரதி வாழ்ந்த இல்லத்துக்கு சென்றார். பாரதியின் உறவினரான 96 வயது கே.வி.கிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினரை சந்தித்தார்.

    பின்னர் நிகழ்ச்சி ஏற்பாடுகளையும் பார்வையிட்டார். அப்போது அவர் கூறும் போது, "இரு மாநிலங்களையும் சேர்ந்த அறிஞர்கள், மாணவர்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்களும் ஒன்றிணைந்து அவர்களின் அறிவு, கலாச்சாரம் மற்றும் சிறந்த நடைமுறைகளை பகிர்ந்து கொள்வதற்கும், அனுபவங்களை கற்றுக்கொள்ளவும் வாய்ப்புகளை உருவாக்குவதே இந்த நிகழ்ச்சியின் நோக்கம்" என்றார்.

    இன்று முதல் ஒரு மாதம் நடைபெறும் இந்த நிகழ்ச்சியை பனாரஸ் பல்கலைக்கழகத்தில் இன்று பிற்பகலில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழக தலைவர்கள் மத்திய மந்திரி எல்.முருகன், அண்ணாமலை, பொன்.ராதா கிருஷ்ணன், மாநிலங்களவை உறுப்பினர் இளையராஜா உள்ளிட்டோரும் கலந்து கொண்டுள்ளனர்.

    தொடர்ந்து ஒரு மாதம் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் 12 குழுக்களாக தமிழகத்தில் இருந்து 2,500 பேர் பங்கேற்றுள்ளனர்.

    Next Story
    ×