என் மலர்
இந்தியா
மங்களூரு குக்கர் குண்டுவெடிப்பு: ஐ.எஸ். பயங்கரவாதிகள் 2 பேர் கைது
- நாசவேலையில் ஈடுபட குக்கர் குண்டை ஷாரிக் ஆட்டோவில் எடுத்து சென்றபோது அது வெடித்தது தெரியவந்தது.
- ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பிடம் இருந்து கிரிப்டோ கரன்சி மூலம் பணம் பெற்று வந்ததும் தெரியவந்தது.
பெங்களூர்:
கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு டவுன் நாகுரி பகுதியில் கடந்த நவம்பர் 19-ந்தேதி ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்தது. இதில், பயங்கரவாதி ஷாரிக் மற்றும் ஆட்டோ டிரைவர் புருஷோத்தம் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். நாசவேலையில் ஈடுபட குக்கர் குண்டை ஷாரிக் ஆட்டோவில் எடுத்து சென்றபோது அது வெடித்தது தெரியவந்தது. இதுதொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஷாரிக்கிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றுள்ளனர். அவர் அளித்த வாக்குமூலத்தில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. மேலும் ஷாரிக் அளித்த தகவலின்படி பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். தற்போது ஷாரிக் பெங்களூர் விக்டோரியா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் ஷாரிக்கின் நண்பர்கள் மாஸ் முனீர், சையது யாசின் ஆகிய 2 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கைது செய்திருந்தனர். இவர்கள் மங்களூருவில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் விடுதியில் தங்கி படித்ததும், மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு வழக்கில் அந்த கல்லூரியில் படித்து வரும் மாணவர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பதும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து 7 பேர் கொண்ட என்.ஐ.ஏ. அதிகாரிகள் குழுவினர் மங்களூரு என்ஜினீயரிங் கல்லூரியில் சோதனை நடத்தினர். இதையடுத்து ரிகான் ஷேக் (வயது 23) என்ற மாணவரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்து பெங்களூருவுக்கு விசாரணைக்காக அழைத்து சென்றனர். அவருக்கும், மங்களூரு குண்டு வெடிப்பில் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இதனிடையே சிவமொக்கா துங்கா ஆற்றங்கரையோரத்தில் குண்டுவெடிப்பு ஒத்திகையில் ஈடுபட்டது தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் சிவமொக்கா, தாவணகெரே, உடுப்பி, பெங்களூரு உள்பட 6 இடங்களில் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். இதில், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த உடுப்பி பிரம்மாவர் அருகே வரம்பள்ளியை சேர்ந்த ரோஷன் தாஜூதீன் ஷேக் (23), சிவமொக்கா திப்பு சுல்தான் நகரை சேர்ந்த ஹுசர் பர்ஹான் (25) ஆகிய 2 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இவர்கள், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பிடம் இருந்து கிரிப்டோ கரன்சி மூலம் பணம் பெற்று வந்ததும் தெரியவந்தது. கைதாகி சிறையில் உள்ள மாஸ் முனீர் கொடுத்த தகவலின்பேரில் இவர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ரோஷன் தாஜூதீன் ஷேக், மாஸ் முனீரின் நெருங்கிய நண்பர் ஆவார். கைதான 2 பேரிடமும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.