என் மலர்
இந்தியா
உண்மையை சொன்னதால் இந்தியா கூட்டணி கட்சிகள் அச்சம்- பிரதமர் மோடி மீண்டும் தாக்கு
- உங்களின் சொத்துக்களை பறித்து தனி நபர்களிடம் அளிக்க காங்கிரஸ் சதி செய்கிறது என்ற உண்மையை முன் வைத்தேன்.
- வாக்கு வங்கி அரசியலுக்காக எஸ்.சி.,எஸ்.டி. மற்றும் ஓ.பி.சி.களுக்கு வழங்கப்பட்ட உரிமைகளை பறித்து மற்றவர்களுக்கு வழங்கியது.
ஜெய்ப்பூர்:
பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை ராஜஸ்தான் மாநிலம் டோங்கில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசியதாவது:-
ஒற்றுமையே ராஜஸ்தானின் செல்வம். நாம் பிளவுபடும் போது எல்லாம் நாட்டின் எதிரிகள் அதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டனர். நாட்டின் வளர்ச்சிக்கு நிலையான, நேர்மையான அரசு என்ன செய்ய முடியும் என்பதை கடந்த 10 ஆண்டுகளில் அனைவரும் பார்த்திருக்கிறார்கள்.
2014-ல் மோடிக்கு சேவை செய்ய நீங்கள் வாய்ப்பு கொடுத்த போது யாரும் நினைத்து கூட பார்க்காத முடிவுகளை நாடு எடுத்தது.
காங்கிரஸ் ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ராஜஸ்தான் முதலிடத்தில் இருந்தது. அனுமன் மந்திரம் கேட்பது காங்கிரஸ் ஆட்சியில் குற்றமாகியுள்ளது. காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் கர்நாடகாவில் அனுமன் மந்திரம் கேட்ட கடைக்காரர் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
2 நாட்களுக்கு முன்பு ராஜஸ்தானில் நான் சில உண்மைகளை நாட்டின் முன் வைத்தேன். நான் கூறிய உண்மைகளை கேட்டு காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகள் அச்சம் அடைந்துள்ளன.
உங்களின் சொத்துக்களை பறித்து தனி நபர்களிடம் அளிக்க காங்கிரஸ் சதி செய்கிறது என்ற உண்மையை முன் வைத்தேன்.
காங்கிரசை அம்பலப்படுத்தியதால் என்னை அவமதிக்கிறார்கள். உண்மையை ஏன் மறைக்கிறார்கள். நீங்களே கொள்கைகளை உருவாக்கி விட்டு தற்போது அதை ஏற்க பயப்படுவது ஏன்? தைரியம் இருந்தால் உண்மையை ஒப்புக்கொள்ளுங்கள். உங்களை எதிர்கொள்ள நான் தயார்.
நாட்டின் அரசியல் சாசனத்துடன் காங்கிரஸ் நாடகமாடியுள்ளது. அரசியல் சாசனம் உருவாக்கப்பட்ட போது மத அடிப்படையிலான இட ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் தனது உரையில் நாட்டின் வளங்களில் முஸ்லிம்களுக்கு முதல் உரிமை உள்ளது என்று கூறி இருந்தார்.
காங்கிரசின் சிந்தனை எப்போதுமே சமாதானம் மற்றும் வாக்கு வங்கி அரசியலாகவே இருந்து வருகிறது. 2004-ல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் ஆந்திராவில் எஸ்.சி. எஸ்.டி. இட ஒதுக்கீட்டை குறைத்து முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க முயற்சிப்பதுதான் அதன் முதல் பணியாக இருந்தது.
இது ஒரு முன்னோடி திட்டமாகும். இதை நாடு முழுவதும் முயற்சி செய்ய காங்கிரஸ் விரும்பியது. 2004 மற்றும் 2010-க்கு இடையில் ஆந்திராவில் முஸ்லிம் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த காங்கிரஸ் 4 முறை முயற்சி செய்தது.
ஆனாலும் சட்ட தடைகள் மற்றும் சுப்ரீம் கோர்ட்டின் விழிப்புணர்வு காரணமாக அவர்களால் அந்த திட்டங்களை நிறைவேற்ற முடியவில்லை. வாக்கு வங்கி அரசியலுக்காக எஸ்.சி.,எஸ்.டி. மற்றும் ஓ.பி.சி.களுக்கு வழங்கப்பட்ட உரிமைகளை பறித்து மற்றவர்களுக்கு வழங்கியது.
இவை அனைத்தும் அரசியலமைப்பின் அடிப்படை தன்மைக்கு எதிரானது என்பதை அறிந்துள்ள காங்கிரஸ் இந்த முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் அரசியல் அமைப்பு சட்டத்தை பற்றி காங்கிரஸ் கவலைப்படவில்லை.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
பிரதமர் மோடி கடந்த சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மக்களுடைய சொத்துக்களை பகிர்ந்து அளித்து விடும் என்று முஸ்லிம்கள் குறித்து பேசினார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இது தொடர்பாக அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது. இந்த நிலையில் தான் சொன்னது எல்லாம் உண்மை என்று மீண்டும் காங்கிரஸ் மீது மோடி குற்றம் சாட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.