என் மலர்
இந்தியா
ராஜஸ்தானில் கொடூரம்: மனைவியை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்து சென்ற கணவர்
- நிர்வாண ஊர்வலத்தை ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.
- வீடியோக்களை யாரும் சமூக வலைதளங்களில் பரப்ப வேண்டாம் என போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பிரதாப்கர்:
ராஜஸ்தான் மாநிலம் பிரதாப்கர் மாவட்டத்தை சேர்ந்தவர் கானா மீனா. இவருக்கும் பழங்குடியின பெண்ணுக்கும் இடையே கடந்த ஆண்டு திருமணம் நடந்தது.
இந்த நிலையில் அந்த பெண்ணுக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதை அறிந்த கணவர் மனைவியை கண்டித்தார். ஆனால் அதை அவர் கேட்கவில்லை. தொடர்ந்து அந்த வாலிபருடன் பழகி வந்தார். இதனால் கானா மீனா ஆத்திரம் அடைந்தார்.
சம்பவத்தன்று அவர் மனைவியை அடித்து உதைத்தார். பின்னர் வீட்டுக்கு வெளியே மனைவியை இழுத்து வந்து அவரது ஆடையை களைந்தார். அந்த பெண் எவ்வளவோ கெஞ்சியும் அவர் விடவில்லை. வலுக்கட்டாயமாக மனைவியை நிர்வாணமாக்கினார். உறவினர்களும் இதற்கு உடந்தையாக இருந்தனர். நிர்வாணமாக்கப்பட்ட பெண்ணை அவர்கள் கிராமத்துக்குள் ஊர்வலமாக அழைத்து சென்றனர்.
அந்த பெண் யாராவது காப்பாற்றுங்கள் என கதறினார். ஆனாலும் இதனை வேடிக்கை பார்த்தார்களே ஒழிய அவருக்கு உதவி செய்ய யாரும் முன்வரவில்லை.
இந்த நிர்வாண ஊர்வலத்தை ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இந்த வீடியோ வைரலாக பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது பற்றி அறிந்ததும் போலீசார் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். இது தொடர்பாக அந்த பெண்ணின் கணவர் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இச்சம்பவத்தில் கணவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் 7 பேரை தேடி வருகின்றனர். இது தொடர்பான வீடியோக்களை யாரும் சமூக வலைதளங்களில் பரப்ப வேண்டாம் என போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக ராஜஸ்தான் மாநில முதல்-மந்திரி அசோக் கெலாட் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ஒரு நாகரீக சமூகத்தில் இது போன்ற குற்றங்களுக்கு இடம் கிடையாது. சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.