என் மலர்
இந்தியா

மணிப்பூரில் வன்முறை பாதித்த பகுதிகளில் கொடி அணிவகுப்பு நடத்திய ராணுவத்தினர்.
மணிப்பூர் கலவரம்- வருமான வரித்துறை அதிகாரியை அடித்து கொன்ற வன்முறை கும்பல்
- மணிப்பூரில் வன்முறை பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து சுமார் 13 ஆயிரம் பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
- மலைப்பகுதிகளில் இருப்போர் ராணுவ விமானங்கள் மூலம் மீட்கப்பட்டு பாதுகாப்பு மையங்களுக்கு அழைத்து வரப்படுகிறார்கள்.
இம்பால்:
மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியினர் மற்றும் மைதேயி சமூகத்தினருக்கும் இடையே பயங்கர கலவரம் மூண்டது. மைதேயி சமூகத்தினர் தங்களையும் பழங்குடியின பட்டியலில் சேர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை ஏற்க கூடாது என ஏற்கனவே உள்ள பழங்குடி இன மக்கள் கூறிவந்தனர். இப்பிரச்சினை நீறுபூத்த நெருப்பாக புகைந்து கொண்டிருந்த நிலையில் திடீரென இரு சமூகத்தினருக்கும் இடையே வன்முறை வெடித்தது.
இதில் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதோடு வீடுகளுக்கும் தீவைக்கப்பட்டது. தகவல் அறிந்து அங்கு ராணுவத்தினர் விரைந்து சென்று நிலைமையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தனர்.
3200 மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் மற்றும் ராணுவத்தின் விமான படையினர் அங்கு முகாமிட்டு அமைதி திரும்ப ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள். இதற்கிடையே மணிப்பூர் வன்முறையில் பலியானவர்கள் பற்றிய விபரங்கள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
இதில் இம்பாலில் உள்ள அரசு குடியிருப்பில் வசித்து வந்த இந்திய வருவாய்துறை அதிகாரி லெட்மின்தாங் ஹாக்கிப்பின் என்பவர் வன்முறையாளர்களால் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் வெளியாகி உயர் அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதுபற்றி ஐ.ஆர்.எஸ். அதிகாரிகள் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள விபரம் வருமாறு:-
இம்பாலில் உதவி வரித்துறை அதிகாரியாக பணியாற்றி வந்தவர் லெட்மின்தாங் ஹாக்கிப்பின். அங்குள்ள அரசு குடியிருப்பில் வசித்து வந்தார். கலவரத்தின் போது ஒரு கும்பல் அவரது வீட்டுக்குள் புகுந்து அவரை வெளியே இழுத்து வந்துள்ளது.
பின்னர் அவர்கள் அவரை சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அதிகாரி லெட்மின்தாங் ஹாக்கிப்பின் பரிதாபமாக இறந்துள்ளார். இவரது இறப்பை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. குரூரமாக நடந்த இந்த சம்பவத்தின் மூலம் அதிகாரி லெட்மின்தாங் ஹாக்கிப்பின் குடும்பத்தினர் பெரும் துயரத்திற்கு ஆளாகி உள்ளனர். அவர்களுக்கு என்ன ஆறுதல் கூறமுடியும் என தெரியவில்லை.
இந்த சம்பவத்திற்கு எங்கள் அமைப்பு சார்பில் கடும் கண்டனத்தை பதிவு செய்கிறோம்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளனர்.
இதற்கிடையே மணிப்பூர் கலவரத்தில் 54 பேர் வரை கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. வன்முறை கும்பல் தாக்கியதில் அவர்கள் இறந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக மாநில அரசும், போலீசாரும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் இம்பால் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தீவைக்கப்பட்ட கடைகள், வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் பற்றிய கணக்கெடுப்பு பணியும் நடந்து வருகிறது.
இதற்கிடையே மணிப்பூரில் வன்முறை பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து சுமார் 13 ஆயிரம் பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். மலைப்பகுதிகளில் இருப்போர் ராணுவ விமானங்கள் மூலம் மீட்கப்பட்டு பாதுகாப்பு மையங்களுக்கு அழைத்து வரப்படுகிறார்கள். அவர்களுக்கு தேவையான அடிப்படை உதவிகளை மாநில அரசு செய்துள்ளது. தற்போது அங்கு நிலைமை கட்டுக்குள் இருப்பதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
மணிப்பூரில் தற்போது வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் அங்கு பாதுகாப்பு பணிக்கு சென்ற ராணுவத்தினர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.