என் மலர்
இந்தியா
சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் வீட்டோடு எரிப்பு
- வாலிபர் பலாத்காரம் செய்தது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.
- தாக்குதலில் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 5 போலீசார் படுகாயம் அடைந்தனர்.
தெலுங்கானா மாநிலம் அடிலாபாத் மாவட்டம் குடிஹத்னூரை சேர்ந்தவர் 17 வயது சிறுமி.
அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் சிறுமியை ஆசைவார்த்தை கூறி கடத்திச் சென்றார். அவரது வீட்டில் அடைத்து வைத்து பலாத்காரம் செய்தார்.
3 மணி நேரம் கழித்து தனது பிடியிலிருந்து வாலிபர் சிறுமியை விடுவித்தார். சீரழிக்கப்பட்ட சிறுமி அழுது கொண்டே வீட்டிற்குச் சென்றார்.
வாலிபர் பலாத்காரம் செய்தது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இந்த தகவல் கிராமம் முழுவதும் பரவியது. இந்த தகவல் அறிந்த கிராம மக்கள் ஆத்திரமடைந்தனர்.
ஆக்ரோஷத்துடன் வாலிபரின் வீட்டிற்கு சென்றனர். வீட்டில் இருந்த வாலிபரை சரமாரியாக தாக்கினர்.
அவர்களிடமிருந்து தப்பிய வாலிபர் வீட்டுக்குள் சென்று கதவை பூட்டி கொண்டார். வெளியே இருந்த சிறுமியின் உறவினர்கள் வாலிபரை வெளியே வருமாறு கத்தி கூச்சலிட்டனர்.
அவர் வெளியே வராததால் ஆத்திரமடைந்து வாலிபர் உள்ளே இருக்கும்போதே வீட்டுக்கு தீ வைத்தனர். தீ வீடு முழுவதும் பரவியது.
தாக்குதலில் படுகாயம் அடைந்த வாலிபர் வீட்டில் மயங்கி விழுந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
அவர்கள் சிறுமியின் உறவினர்களை தடுத்து நிறுத்தினர். ஆனால் அவர்கள் வாலிபர் வீடு மீது கற்களை வீச தொடங்கினர். இதனால் அந்த இடம் போர்க்களம் போல காட்சி அளித்தது. போலீசார் மயங்கி கிடந்த வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
இதனை கண்ட கிராம மக்கள் மேலும் ஆத்திரம் அடைந்தனர். அவர்கள் போலீசார் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 5 போலீசார் படுகாயம் அடைந்தனர். மேலும் போலீசாரின் 2 வாகனங்களை தாக்கி தீ வைத்தனர். அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.
இதனையடுத்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு கிராம மக்களை கட்டுப்படுத்தினர். மேலும் தீயணைப்பு வாகனங்கள் மூலம் வீடு மற்றும் போலீஸ் வாகனங்கள் மீது பற்றிய தீயை அணைத்தனர்.
தொடர்ந்து அந்த பகுதியில் பதற்றம் நிலவியதால ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். போலீசார் தாக்குதலில் ஈடுபட்ட கிராம மக்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தெலுங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.