search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    காதலிக்கு ரூ.3 கோடி மதிப்புள்ள பங்களாவை பரிசளித்த கொள்ளையன்
    X

    காதலிக்கு ரூ.3 கோடி மதிப்புள்ள பங்களாவை பரிசளித்த கொள்ளையன்

    • கைதான பஞ்சாரி சங்கய்யா சுவாமி கிக் பாஸ்சர் ஆவார்.
    • திருட்டை 18 வருடமாக அரங்கேற்றி வந்துள்ளார்.

    பெங்களூரு:

    கர்நாடகா மாநிலம் பெங்களூரு மடிவாளாவை சேர்ந்த தொழில் அதிபர் வீட்டில் கடந்த ஜனவரி 9-ந் தேதி வீடு புகுந்து மர்மநபர்கள் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

    மேலும் கண்காணிப்பு கேமிராவில் மர்மநபர்கள் வந்து சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. அதை வைத்து மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த வழக்கில் தொடர்புடைய மர்மநபர்கள் கோரமங்களா வெங்கடரெட்டி லே-அவுட்டில் தலைமறைவாக இருப்பதாக தகவல் கிடைத்தது .

    இதையடுத்து அங்கு சென்ற போலீசார் குஜராத் மாநிலம் சோலாப்பூர் மாவட்டம் மங்கல்வார்பேட்டையை சேர்ந்த பஞ்சாரி சங்கய்யா சுவாமி (வயது 37) என்பவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். மற்றவர்கள் தப்பியோடிவிட்டனர்.

    கைதான பஞ்சாரி சங்கய்யா சுவாமி மாநில அளவிலான கிக் பாஸ்சர் ஆவார். மேலும் இவர் கராத்தேவில் கருப்பு பெல்ட் பெற்றவர்.

    திருமணமான இவருக்கு ஒரு மகள் இருப்பது விசாரணையில் தெரியவந்தது. சொகுசு வாழ்க்கை வாழ்வதற்காக பஞ்சாரி சுவாமி கடந்த 2003-ம் ஆண்டில் இருந்து தொடர் திருட்டில் ஈடுபட்டார்.

    இவர் மேலும் சிலருடன் சேர்ந்து கைவரிசை காட்டி வந்தார். கிடைக்கும் பணத்தில் சில திரைப்பட நடிகைகள், சின்னத்திரை நடிகைகளுடன் உல்லாசமாக இருப்பது, நண்பர்களுடன் சேர்ந்து மது குடிப்பது என்று சொகுசாக வாழ்ந்து வந்தார்.

    இந்தநிலையில் 2016-ம் ஆண்டு மும்பையை சேர்ந்த பாலிவுட் நடிகையான, பார் நடன அழகி ஒருவருடன் பஞ்சாரி சுவாமிக்கு பழக்கம் ஏற்பட்டது. அவருடன் திருமணம் செய்து கொள்ளாமல் உல்லாச வாழ்க்கை வாழ்ந்த பஞ்சாரி, அந்த பெண்ணுக்கு தான் திருடிய பணத்தில் ரூ.3 கோடியில் பங்களா வீடு கட்டி கொடுத்தார். மேலும் பிறந்த நாள் அன்று அந்த பெண்ணுக்கு ரூ.22 லட்சத்தில் மீன் காட்சியகத்தை பரிசாக அளித்துள்ளார்.

    ஆனால் இந்த நடிகையின் பெயர் விபரங்களை வெளியிட போலீசார் மறுத்து விட்டனர்.கைதான பஞ்சாரி சங்கய்யா சுவாமி குறித்து போலீசார் கூறியதாவது:-

    இவரது அம்மா சோலாப்பூர் பகுதியில் அரசு ஊழியராக பணிபுரிந்து வருகிறார். அப்பா ரெயில்வேயில் பணியாற்றி வந்தார். பணியின் போது அப்பா இறந்து விட்டதால் கருணை அடிப்படையில் அவரது தாய்க்கு அரசு வேலை கிடைத்தது.

    சிறு வயதில் இருக்கும்போது மகன் பஞ்சாரி சுவாமிக்கு குத்துசண்டை, கராத்தே போட்டி மீது ஆர்வம் ஏற்பட்டது. இதனால் மகனை இந்த தற்காப்பு கலைகளில் அவரது தாய் சேர்த்து விட்டார். இதில் சிறந்து விளங்கிய அவர் பல மாநிலங்களில் நடந்த குத்து சண்டை போட்டியில் பங்கேற்று பல பரிசுகள் வென்றுள்ளார். இதில் நிறைய பணம் கிடைத்தது.

    இதனால் பஞ்சாரி சுவாமியின் போக்கு மாறியது. மதுவுக்கு அடிமையான இவர் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு, குத்து சண்டையை விட்டு திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த திருட்டை 18 வருடமாக அரங்கேற்றி வந்தார்.

    2003-ம் ஆண்டு அவருக்கு 15 வயது இருக்கும் போதே திருட தொடங்கினார். அவர் முதல் முதலாக ஒரு மடிக்கணினியை திருடினார். பின்னர் 2009-ம் ஆண்டு முழு நேர கொள்ளையனாக மாறினார். கொள்ளை செயலுக்கு தலைவனாக இருந்து செயல்பட்டு வந்தார். கொள்ளையை முழு நேர தொழிலாக மாற்றிய பஞ்சாரி சுவாமிக்கு கோடிக் கணக்கில் பணம் குவிந்தது.

    24 வயதில் மும்பையில் நடன கிளப்பில் மது குடித்து கொண்டிருந்தபோது அதில் நடமானடி கொண்டிருந்த பாலிவுட் நடிகையுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அவரை காதலித்து வந்தார். மேலும் கொள்ளையடித்த பணத்தில் துணை நடிகைகளுடன் உல்லாசமாக இருந்தார்.

    இந்தநிலையில் 2012-ம் ஆண்டு பஞ்சாரி சுவாமி நவி மும்பையில் குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். மேலும் 2016-ம் ஆண்டு குஜராத்தில் நடந்த திருட்டு வழக்கில் அவர் கைதாகினார்.

    குஜராத் சிறையில் 6 ஆண்டுகள் அடைக்கப்பட்ட அவர் பின்னர் ஜாமீனில் விடுதலையானார். இதையடுத்து மராட்டிய மாநிலத்துக்கு சென்று அங்கு திருடி வந்தார்.

    2024-ம் ஆண்டு அம்மாநில போலீசார் பஞ்சாரியை கைது செய்து சிறையில் அடைத்தனர். அங்கிருந்து கடந்த மாதம் (ஜனவரி) 9-ந்தேதி ஜாமீனில் விடுதலையானார்.

    இதையடுத்து குஜராத், மகாராஷ்டிரா, தெலுங்கானா ஆகியவற்றை விட்டு பெங்களூருவுக்கு இருப்பிடத்தை மாற்றினார். பிரபல கொள்ளையன் என போலீசாருக்கு தெரியாமல் இருக்க வேண்டி பெங்களூருவில் சாதாரண ஒரு டீ ஸ்டால் ஒன்றை நடத்தி வந்தார்.

    பின்னர் கூட்டாளிகளுடன் பெங்களூரு வந்த அவர், இங்கு பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிட்டு திருடி வந்தார். இந்த நிலையில் பல நாள் திருடன் ஒரு நாள் சிக்குவான் என்பது போல் பெங்களூரு மடிவாளாவை சேர்ந்த தொழில் அதிபர் வீட்டில் கைவரிசை காட்டிய அவர் போலீசாரிடம் சிக்கிக்கொண்டார்.

    அவரிடம் இருந்து 181 கிராம் தங்க நகைகள், 334 கிராம் வெள்ளி பொருட்களை போலீசார் மீட்டுள்ளனர். கைதான பஞ்சாாி சுவாமி மீது தெலுங்கானா, குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் 180 திருட்டு வழக்குகள் பதிவாகி உள்ளன.

    இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசாா் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×