என் மலர்
இந்தியா

திருப்பதி கோவிலில் மாதம் தோறும் ரூ.100 கோடியை தாண்டும் உண்டியல் வருவாய்
- கடந்த மாதம் பிரம்மோற்சவ விழாவையொட்டி இலவச தரிசனத்தில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
- திருப்பதி ஏழுமலையான் கோவில் வரலாற்றில் முதல் முறையாக கடந்த மாதம் 25-ந் தேதி ஒரே நாளில் ரூ.6.31 கோடி உண்டியல் காணிக்கையாக கிடைத்தது.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா தொற்றுக்கு பிறகு கடந்த 8 மாதங்களாக உண்டியல் வருவாய் ரூ.100 கோடியை தாண்டி வசூலாகி வருகிறது.
கொரோனா தொற்று காலத்தில் குறைந்த அளவு பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இதனால் அப்போது குறைந்த அளவாக மாதத்திற்கு ரூ.5 முதல் 6 கோடி வரையே உண்டியலில் வசூலானது.
இந்த நிலையில் தொற்று குறைந்ததால் பக்தர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. கடந்த மார்ச் மாதம் முதல் தினமும் 70 ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதனால் கடந்த 8 மாதங்களாக உண்டியல் வருவாய் ரூ.100 கோடியை தாண்டி வசூலாகி வருகிறது. இந்த ஆண்டு திருப்பதி தேவஸ்தானத்திற்கு சுமார் ரூ.1000 கோடியை தாண்டி வருவாய் கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதிகபட்சமாக கடந்த ஜூலை மாதம் ரூ.139.35 கோடியை பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். திருப்பதி ஏழுமலையான் கோவில் வரலாற்றில் முதல் முறையாக கடந்த மாதம் 25-ந் தேதி ஒரே நாளில் ரூ.6.31 கோடி உண்டியல் காணிக்கையாக கிடைத்தது.
இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் ரூ.122.80 கோடி உண்டியல் வசூலாகியுள்ளது.
கடந்த மாதம் பிரம்மோற்சவ விழாவையொட்டி இலவச தரிசனத்தில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
ரூ.300 ஆன்லைன் தரிசனம் மற்றும் வி.ஐ.பி. பிரேக் தரிசனம், ஸ்ரீ வாணி அறக்கட்டளை உள்ளிட்ட தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டதால் உண்டியல் வருவாய் குறைந்துள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருப்பதியில் நேற்று 72,176 பேர் தரிசனம் செய்தனர். 25,549 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.12 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.