என் மலர்
இந்தியா
முஸ்லீம் மாணவர் தாக்கப்பட்ட விவகாரம்- பள்ளியை இழுத்து மூட அரசு உத்தரவு!
- இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
- இந்த சம்பவம் தேவையில்லாமல் பெரிய பிரச்சினையாக மாற்றப்படுவதாக ஆசிரியை விளக்கம்.
உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டம் ஹக்பர்பூர் கிராமத்தில் உள்ள பள்ளிக்கூடத்தில் 2-ம் வகுப்பு மாணவன் கணக்கு வாய்ப்பாடை மனப்பாடம் செய்து தவறாக கூறியதாலும், வீட்டுப் பாடத்தை எழுதாமல் வந்ததாலும் ஆசிரியை திருப்தி தியாகி சக மாணவர்களை அழைத்து மாணவன் கன்னத்தில் அறையும் படி கூறியுள்ளார். மேலும் மத ரீதியிலும் அந்த மாணவரை விமர்சித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிகழ்வை மாணவனின் உறவினர் தனது செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. வீட்டுப்பாடம் எழுதி வராத மாணவனை மதரீதியிலாக விமர்சித்து சக மாணவர்களை கொண்டு தாக்குதல் நடத்தியதாக ஆசிரியை திருப்தி தியாகி மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மாணவனை தாக்கிய சம்பவம் தொடர்பாக சர்ச்சையில் சிக்கிய ஆசிரியை, "எனது தவறை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் இதற்காக நான் வெட்கப்பட மாட்டேன். அந்த மாணவனை மத ரீதியில் துன்புறுத்த வேண்டும் என்பது என் நோக்கம் இல்லை. இந்த சம்பவம் தேவையில்லாமல் பெரிய பிரச்சினையாக மாற்றப்பட்டு இருக்கிறது," என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், மாணவன் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக பள்ளி மீது விசாரணை நடத்தப்பட இருக்கிறது. இதன் காரணமாக பள்ளியை தற்காலிகமாக மூடுவதற்கு அம்மாநில பள்ளிக் கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கிறது. பள்ளி மூடப்படுவதை தொடர்ந்து, அப்பள்ளியில் பயின்று வரும் மாணவர்கள் வேறு பள்ளியில் அனுமதிக்கப்படுவார்கள் என்று பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.