என் மலர்
இந்தியா

உணவில் போதை மருந்தை கலந்துகொடுத்து பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை- 5 ஆண்டாக சீரழித்த வாலிபர் கைது
- ஓட்டலில் தங்கியிருந்த போது மாணவிக்கு உணவில் போதை மருந்தை கலந்து கொடுத்திருக்கிறார்.
- போதை பழக்கத்தில் இருந்து விடுபட சிகிச்சையில் இருந்தபோது மாணவிக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டது.
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் வெங்கரசேரூர் பகுதியை சேர்ந்தவர் அப்துல் கபூர்(வயது23). இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக கோட்டக்கல் பகுதியை சேர்ந்த பிளஸ்-1 மாணவி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
வசதி படைத்தவர் போன்று காட்டிக் கொண்டதால் அப்துல் கபூருடன் அந்த மாணவி நெருங்கி பழகி வந்துள்ளார். அதனை பயன்படுத்தி பல இடங்களுக்கு மாணவியை அப்துல் கபூர் அழைத்துச் சென்றுள்ளார்.
ஓட்டலில் தங்கியிருந்த போது மாணவிக்கு உணவில் போதை மருந்தை கலந்து கொடுத்திருக்கிறார். இதனால் அந்த மாணவி போதை பழக்கத்துக்கு அடிமையாகியிருக்கிறார். அதனை பயன்படுத்தி பல்வேறு இடங்களுக்கு மாணவியை அழைத்துச் சென்ற அப்துல்கபூர், மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
அந்த நேரத்தில் மாணவியை நிர்வாணமாக வீடியோவும் எடுத்திருக்கிறார். மாணவி பிளஸ்-1 படித்த கடந்த 2020-ம் ஆண்டில் இருந்து தற்போது வரையிலான 5 ஆண்டுகளாக அப்துல் கபூரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டபடி இருந்திருக்கிறார்.
இந்தநிலையில் போதை பழக்கத்தில் இருந்து விடுபட சிகிச்சையில் இருந்தபோது மாணவிக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டது. அப்போது தன்னை வாலிபர் ஒருவர், கடந்த 5 ஆண்டுகளாக பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கி வரும் அதிர்ச்சி தகவலை தெரிவித்தார்.
மேலும் தன்னை அந்த வாலிபர் நிர்வாணமாக்கி வீடியோ எடுத்திருப்பதாகவும் கூறினார். அதனையறிந்த மாணவியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் அதுபற்றி கோட்டக்கல் போலீஸ் நியைத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வழக்குப்பதிந்தனர்.
மாணவிக்கு போதை மருந்து கொடுத்து சீரழித்த அப்துல் கபூர் மீது போக்சோ பிரிவில் வழக்கு பதியப்பட்டது. அதன்பேரில் அவரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அப்துல் கபூரின் செல்போனை போலீசார் பறிமுதல் செய்து ஆய்வு செய்கின்றனர்.