என் மலர்
புதுச்சேரி
ஆய்வின் போது திடீரென உடைந்த பாலம்- அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய அமைச்சர்
- டெல்டா மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது.
- புதுச்சேரி அமைச்சர் திருமுருகன் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தார்.
புதுச்சேரி:
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் கடந்த 3 நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது.
அதேபோல் டெல்டா மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் காவிரியின் கடைமடை பகுதியான காரைக்கால் கடலை நோக்கி மழைநீர் வெள்ளம் போல் சீறிப்பாய்ந்து வருகிறது.
இந்த நிலையில் காரைக்கால் திருநள்ளாறு அரசலாறு கரையோர பகுதியில் விரிசல் ஏற்பட்டு குடியிருப்பு பகுதியில் நள்ளிரவில் மழைநீர் சூழ்ந்தது.
இதனை அறிந்த புதுச்சேரி அமைச்சர் திருமுருகன் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தார்.
தொடர்ந்து தாழ்வான பகுதியில் வசிக்கும் பொது மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பும் பணியிலும் ஈடுபட்டார்.
பின்னர் அமைச்சர் திருமுருகன் அந்த பகுதியில் உள்ள சிறிய பாலம் வழியாக நடந்து சென்றார். அமைச்சர் திருமுருகன் கடந்து சென்ற சில விநாடிகளில் திடீரென அந்த இணைப்பு பாலம் இடிந்து வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. அதிர்ஷ்டவசமாக அமைச்சர் திருமுருகன் மயிரிழையில் உயிர் தப்பினர்.
இதனைக் கண்ட அமைச்சரின் ஆதரவாளர்கள் திகைத்து போய் நின்றனர். உடனடியாக அமைச்சர் திருமுருகனை அங்கிருந்து விரைந்து அழைத்து சென்றனர்.
மழை நீர் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த அமைச்சர் திருமுருகன் மயிரிழையில் உயிர் தப்பியது காரைக்காலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.