search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    சபாநாயகர் மீது மேலும் ஒரு எம்.எல்.ஏ. நம்பிக்கையில்லா தீர்மானம்
    X

    சபாநாயகர் மீது மேலும் ஒரு எம்.எல்.ஏ. நம்பிக்கையில்லா தீர்மானம்

    • மரபுகளை மீறி செயல்படுவதாக தி.மு.க., காங்கிரஸ், அ.தி.மு.க., கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
    • பலமுறை சபாநாயகரை கண்டித்து எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் வெளிநடப்பு செய்த சம்பவங்களும் நிகழ்ந்துள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர். காங்கிரஸ், பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

    பாஜகவை சேர்ந்த மணவெளி தொகுதி எம்.எல்.ஏ. ஏம்பலம் செல்வம் சபாநாயகராக இருந்து வருகிறார். இவர் சபாநாயகர் பதவிக்கான விதி, மரபுகளை மீறி செயல்படுவதாக தி.மு.க., காங்கிரஸ், அ.தி.மு.க., கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

    இந்த நிலையில் புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதியை சேர்ந்த சுயேட்சை எம்.எல்.ஏ. நேரு நேற்று முன்தினம் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர கோரி சட்ட சபைசெயலர் தயாளனிடம் மனு அளித்தார். இந்த தீர்மானம் சட்டசபையில் விவாதிக்கப்படும் என சபாநாயகர் ஏம்பலம் செல்வம் அறிவித்திருந்தார்.

    இதனிடையே பாஜகவை ஆதரிக்கும் திருபுவனை தனி தொகுதி சுயேட்சை எம்.எல்.ஏ. அங்காளன், சட்டசபை செயலர் தயாளனிடம் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கோரி மனு அளித்தார்.


    அந்த மனுவில், சபாநாயகர் பதவிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உறுப்பினர் செல்வம் செயல்படுகிறார். அவர் பாரபட்சமாக செயல்படுவது அரசியலமைப்பு மீறலாக உள்ளது. அவர் நிழல் முதலமைச்சராகவும் செயல்படுகிறார். இதனால் சபாநாயகர் பதவி மதிப்பிழந்துள்ளது.

    எனவே செல்வத்தை சபாநாயகர் பதவியிலிருந்து நீக்கம் செய்ய சட்டமன்ற விதிகளின்படி பிரேரணை அறிவிப்பை முன்வைக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

    புதுச்சேரி சட்டசபையில் மொத்தம் உள்ள 6 சுயேட்சை எம்.எல்.ஏ.க்களில் 3 பேர் பா.ஜனதாவை ஆதரித்து வருகின்றனர். இதில் மீதமுள்ள சிவசங்கரன், ஸ்ரீனிவாஸ் அசோக் ஆகியோர் என்ன நிலைப்பாடு? எடுக்க உள்ளனர் என தெரியவில்லை.

    அதேநேரத்தில் சபாநாயகருக்கு எதிராக மேலும் சில எம்.எல்.ஏ.க்களையும் திரட்டி நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு வலு சேர்க்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.

    புதுச்சேரி சட்டமன்ற வரலாற்றில் கண்ணன் சபாநாயகராக இருந்தபோது, முதலமைச்சர் வைத்திலிங்கம் தலைமையில் ஆளும்கட்சியான காங்கிரசார் வெளிநடப்பு செய்தனர். பலமுறை சபாநாயகரை கண்டித்து எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் வெளிநடப்பு செய்த சம்பவங்களும் நிகழ்ந்துள்ளது.

    ஆனால் சபாநாயகருக்கு எதிராக முதன் முதலாக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்திருப்பது புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×