என் மலர்
புதுச்சேரி
புதுச்சேரியில் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்
- பள்ளியின் இ-மெயிலுக்கு மர்ம மெயில் ஒன்று வந்தது.
- புதுவையில் இருந்து வெடிகுண்டு செயலழப்பு நிபுணர்களும் வந்தனர்.
பாகூர்:
புதுச்சேரி எல்லைப்பகுதியான முள்ளோடையில் தனியார் பள்ளி உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படிக்கின்றனர். நேற்று மாலை 4 மணியளவில் பள்ளி முடிந்து மாணவர்கள் வீட்டுக்கு புறப்பட்டு சென்றனர்.
இந்தநிலையில் பள்ளியின் இ-மெயிலுக்கு மர்ம மெயில் ஒன்று வந்தது. அதில் நீதிமன்றத்தால் பல்வேறு வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்டவர்களை விடுவிக்கவேண்டும், இல்லை யென்றால் வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறப்பட்டு இருந்தது.
இதை பார்த்து பள்ளி நிர்வாகத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இந்த மெயில் காலையில் வந்திருந்த நிலையில், மாலை 5 மணிக்கே பார்க்கப்பட்டது.
இது குறித்து உடனடியாக கிருமாம்பாக்கம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சஜித், சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையில் போலீசார் பள்ளிக்கு விரைந்து வந்தனர்.
மேலும் தகவல் தெரிவித்து புதுவையில் இருந்து வெடிகுண்டு செயலழப்பு நிபுணர்களும் வந்தனர்.
அவர்கள் பள்ளியில் வெடி குண்டு ஏதேனும் மறைத்து வைக்கப்பட்டுள்ளதா? என்று மெட்டல் டிடெக்டர் கருவி மற்றும் மோப்பநாய் உதவியு டன் சோதனை செய்தனர். பள்ளி வளாகம், வகுப்பறை, விளையாட்டு மைதானம், ஆசிரியர்கள் ஓய்வறை என அங்குலம் அங்குலமாக சோதனையிட்டனர். ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்க வில்லை. வெடிகுண்டு மிரட்டல் என்பது வெறும் புரளி என்பது சோதனையின் முடி வில் தெரியவந்தது.
பள்ளிக்கு வந்த இ-மெயில் முகவரியை வைத்து, மிரட்டல் விடுத்த மர்மநபர் யார்? என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி, தேடி வருகின்றனர்.தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவத்தால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.