என் மலர்
புதுச்சேரி

அரசு பஸ்சில் போதைப்பொருட்கள் கடத்திய கண்டக்டர் சஸ்பெண்டு

- பஸ்சில் பொருட்கள் வைக்கும் பகுதியில் பெரிய பார்சல் ஒன்று இருந்தது.
- பஸ் புதுச்சேரி பஸ் நிலையம் வந்தபோது அதை சக ஊழியர்கள் முன்னிலையில் பிரித்து பார்த்தனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி- பெங்களூரு இடையே அரசு (பி.ஆர்.டி.சி.) பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதுபோல் சம்பவத்தன்று புதுச்சேரி அரசு பஸ் பெங்களூருலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு புதுச்சேரிக்கு புறப்பட்டு வந்தது.
அந்த பஸ்சை டிரைவர் அரிதாஸ் ஓட்டி வந்தார். கண்டக்டராக வெங்கடாசலபதி (வயது 53) பணியில் இருந்தார். இந்த பஸ் திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் வந்தபோது பி.ஆர்.டி.சி. பறக்கும் படையினர் பஸ்சில் ஏறி திடீர் சோதனை நடத்தினார்கள்.
அப்போது பஸ்சில் பொருட்கள் வைக்கும் பகுதியில் பெரிய பார்சல் ஒன்று இருந்தது. அந்த பார்சல் யாருடையது? என்ற விவரமும் இல்லை. இந்த பார்சல் சம்பந்தமாக பறக்கும் படையினர் கண்டக்டர் வெங்கடாசலபதியிடம் விசாரணை நடத்தினர். ஆனால் அவர் முறையாக பதில் அளிக்கவில்லை.
இதனிடையே பஸ் புதுச்சேரி பஸ் நிலையம் வந்தபோது அதை சக ஊழியர்கள் முன்னிலையில் பிரித்து பார்த்தனர். அப்போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த பார்சலில் ஹான்ஸ் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் இருந்தது.
இதுகுறித்து மேலாண் இயக்குனர் சிவகுமாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து பஸ் கண்டக்டர் வெங்கடாசலபதியை பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்து உத்தரவிட்டார்.
இந்த போதைப்பொருட்களை புதுச்சேரிக்கு அனுப்பியவர்கள் யார்? போதைப்பொருள் கும்பலுக்கும் பஸ் ஊழியர்களுக்கும் தொடர்பு உள்ளதா? இதுபோன்று பெங்களூருரில் இருந்து புதுச்சேரிக்கு போதைப்பொருட்கள் தொடர்ந்து கடத்தப்பட்டு வந்ததா? என்பது குறித்து துறை ரீதியாக விசாரணை நடந்து வருகிறது.