என் மலர்
புதுச்சேரி
புதுச்சேரியில் மதுபானம் விலை உயருகிறது- அரசின் வருவாயை பெருக்க முடிவு
- அரசின் வருமானத்தை உயர்த்தி, செலவினை சமாளிக்கவும் முடிவு செய்யப்பட்டது.
- அடுத்த நிதி ஆண்டிற்கான பட்ஜெட் முன் தயாரிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரி சட்டசபையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் கூடியது.
கூட்டத்தில் அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், தேனீ. ஜெயக்குமார், திருமுருகன், சாய் ஜெ சரவணன்குமார், தலைமைச் செயலர் சரத் சவுகான், அரசு செயலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் புதுச்சேரியில் நலத்திட்டங்களுக்கு அதிகரித்து வரும் நிதி சுமை, அதனை சமாளிப்பதற்கான வழிமுறைகள் குறித்து நீண்ட நேரமாக விவாதிக்கப்பட்டது.
அதை தொடர்ந்து அரசின் வருமானத்தை உயர்த்தி, செலவினை சமாளிக்கவும் முடிவு செய்யப்பட்டது.
குறிப்பாக புதிதாக மதுபானக்கடைகள் உரிமம் தருவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. மதுபான உரிம கட்டணத்தையும், கலால் வரியையும் உயர்த்துவது குறித்தும் முடிவு செய்யப்பட்டது.
மேலும் 10 ஆண்டுகளுக்கு மேலாக உய்ர்த்தப்படாத நில வழிகாட்டி மதிப்பையும் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது. அதேபோல் கூட்டுறவு சர்க்கரை ஆலை பள்ளியை கல்வித்துறையுடன் இணைத்தல் உள்ளிட்ட விஷயங்களும் விவாதித்து முடிவு எடுக்கப்பட்டது.
அடுத்த நிதி ஆண்டிற்கான பட்ஜெட் முன் தயாரிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ரூ.13 ஆயிரம் கோடிக்கு மேல் புதுச்சேரி அரசு பட்ஜெட் தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது. இருப்பினும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த கூடுதல் நிதி தேவைப்படுகிறது.
எனவே சொந்த வருவாயை அதிகரிக்க முடிவு செய்து, அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் 3-வது வாரத்தில் மாநில திட்ட குழு கூட்டம் கூட உள்ள சூழ்நிலையில் மாநில வருவாயை பொறுத்து, பட்ஜெட்டிற்கு இறுதி வடிவம் கொடுத்து, மத்திய அரசின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட உள்ளது.