என் மலர்
புதுச்சேரி
காரை விட்டு இறங்காமல் மழை சேதத்தை பார்வையிடுவதா?- முதலமைச்சர் ரங்கசாமி மீது நாராயணசாமி குற்றச்சாட்டு
- அமைச்சர்கள் யாரும் கிராமத்திற்கு செல்லவில்லை.
- பிரதமரை முதலமைச்சர் நேரில் சந்தித்து நிவாரண நிதியை கேட்க வேண்டும்.
புதுச்சேரி:
புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் ரங்கசாமி தனது வாகனத்தை விட்டு இறங்காமல் பார்வையிட்டார். காரை விட்டு ஏன் இறங்கவில்லை? உள்துறை அமைச்சர் வெளிநாடு சென்று விட்டார். முதலமைச்சர் கிராமப்புற பகுதிக்கு சென்றால் மக்கள் கேள்வி கேட்பார்கள் என்பதால் செல்லவில்லை.
அமைச்சர்கள் யாரும் கிராமத்திற்கு செல்லவில்லை. அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.5 ஆயிரம் நிவாரணம் என்பது கண்துடைப்பு. இது வெறும் அறிவிப்பு மட்டும்தான். மத்திய அரசு நிதி தரவில்லை என்றால் பிரதமர் மீது பழி போடுவார். இதுதான் முதலமைச்சர் ரங்கசாமியின் வேலை.
ஒட்டுமொத்தமாக புதுவை அரசு இந்த புயலை எதிர்கொள்ள தவறிவிட்டது. நிவாரண பணிகள் திருப்திகரமாக இல்லை. இதற்கு மக்கள் உரிய பாடம் புகட்டுவார்கள்.
மத்திய அரசுக்கு கடிதம் எழுதினால் மட்டும் போதாது. பிரதமரை முதலமைச்சர் நேரில் சந்தித்து நிவாரண நிதியை கேட்க வேண்டும். அதிகாரிகள் சொல்வதை கேட்காமல் முழு கணக்கெடுப்பை நடத்தி நிவாரணத்தை முறையாக வழங்க வேண்டும். புதுவையில் உட்கார்ந்து கொண்டு நிதி கேட்கக்கூடாது, டெல்லி சென்று கேட்க வேண்டும்.
அப்படி கேட்காமல், பிரதமர் நிதி தரவில்லை என ரங்கசாமி கூறுவார். பிரதமர் மோடி பணம் தரவில்லை என பழி போடுவார். இந்த பழி போடும் காலமெல்லாம் முடிந்து விட்டது. இந்த இரட்டை என்ஜின் ஆட்சி ஆளுக்கு ஒரு பக்கம் இழுக்கிறது. எதுவும் நடக்கவில்லை.
உண்மையில் இந்த இரட்டை என்ஜின் ஆட்சி என்றால், உடனடியாக மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.