என் மலர்
புதுச்சேரி

இலவச மனைபட்டா கேட்டு கலெக்டருக்கு பாசிமணி மாலை அணிவித்து மனு கொடுத்த நரிக்குறவ பெண்கள்

- நரிக்குறவர்கள் கலெக்டருக்கு பாசி மணி மாலைகளை அணிவித்து தங்கள் கோரிக்கை மனுவை அளித்தனர்.
- சாலையோரத்தில் வசிப்பதால் பல்வேறு இன்னல்களை, விபத்துகளை மக்கள் சந்திக்கின்றனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி அருகே வில்லியனூர் மூர்த்தி நகரில் வசிக்கும் 100-க்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர்.
கலெக்டர் அலுவலகம் முன்பு போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது மக்கள் குறை தீர்ப்பு நாள் முகாமையொட்டி கலெக்டரை சந்தித்து மனு அளிக்க வந்துள்ளோம். ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்த வரவில்லை என தெரிவித்தனர்.
இதையடுத்து பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் கலெக்டரை சந்தித்து நரிக்குறவர்கள் வந்திருப்பதை தெரிவித்தனர். கலெக்டரும் அவர்களை உள்ளே அனுமதிக்கும்படி உத்தரவிட்டார்.
இதையடுத்து நரிக்குறவ குடும்பத்தினர் கலெக்டர் அலுவலக வரவேற்பு அறைக்கு வந்தனர்.
கலெக்டர் குலோத்துங்கன் வெளியே வந்து அவர்களை சந்தித்தார். அப்போது நரிக்குறவர்கள் கலெக்டருக்கு பாசிமணி மாலைகளை அணிவித்து தங்கள் கோரிக்கை மனுவை அளித்தனர்.
வில்லியனுார் மூர்த்தி நகர் மெயின்ரோடு, கொம்பாக்கம், திருக்காஞ்சி மெயின்ரோடு பகுதியில் 70 ஆண்டுக்கும் மேலாக சாலை யோரங்களில் 80 குடும்பத்தை சேர்ந்த குருவிக்கார மக்கள் தார்பாய் அமைத்து வசித்து வருகின்றனர். அவர்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்க வேண்டும்.
சாலையோரத்தில் வசிப்பதால் பல்வேறு இன்னல்களை, விபத்துகளை மக்கள் சந்திக்கின்றனர். எனவே அரசு குருவிக்கார மக்களுக்கு இலவச மனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டி ருந்தனர்.
மனுவை பெற்ற கலெக்டர், அதிகாரிகளுடன் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.