என் மலர்
புதுச்சேரி
பேனர் வைத்த சிம்பு ரசிகர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு
- 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
- நடைபாதையில் பொதுமக்களுக்கு இடையூறாக வைக்கப்பட்டதாக புகார்.
புதுச்சேரி:
புதுவை பொதுப்பணித்துறை மத்திய கோட்ட சாலை பிரிவு செயற்பொறியாளர் சீனிவாசன் பொது இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது நெல்லித்தோப்பு சிக்னல் சந்திப்பு, திருவள்ளுவர் சாலை நடைபாதையில் பொதுமக்களுக்கு இடையூறாக கொசப்பாளையம் சிலம்பரசன் ரசிகர் மன்றம் சார்பில், பேனர் வைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து அவர் உருளையன்பேட்டை போலீசில் புகார் அளித்தார்.
ரசிகர் மன்ற நிர்வாகிகள் பசுபதி, அசோக் ராஜா, மற்றும் பாபு ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதேபோல் லாஸ்பேட்டை ஏர்போர்ட் சாலையில் உள்ள கோவில் கும்பாபிஷேகம் கடந்த 2-ந் தேதி நடந்தது. இந்த விழாவில் பங்கேற்க வரும் வி.ஐ.பி.க்கள், அரசியல் கட்சி தலைவர்களை வரவேற்று 60-க்கும் மேற்பட்ட பேனர்கள் சாலை முழுதும் வைக்கப்பட்டிருந்தன.
இதைக்கண்ட பொதுப்பணித்துறை மத்திய கோட்ட சாலை பிரிவு செயற்பொறியாளர் சீனிவாசன், பேனர் வைத்தவர்களின் பெயர்களை குறிப்பிடாமல் லாஸ்பேட்டை போலீசில் புகார் அளித்தார்.
இதன்பேரில் பேனர் வைத்த மர்ம நபர்கள் மீது புதுச்சேரி திறந்தவெளி அழகு சீர்கெடுத்தல் பிரிவின் கீழ் லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.