என் மலர்
புதுச்சேரி
புதுச்சேரி சட்டசபை வளாகத்தில் உலா வந்த பிரபல ரவுடிகள்- அதிகாரிகள் கலக்கம்
- புதுச்சேரி சட்டசபையின் பாதுகாப்பை பலப்படுத்த வளாகத்தை சுற்றிலும் சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கப்படுகிறது.
- சட்டசபைக்குள் ரவுடிகள் எதற்காக வந்தனர், யாரை சந்தித்தனர் என்ற விபரம் தெரியவில்லை.
புதுச்சேரி:
ஒரு மாநில நிர்வாகத்தின் ஒட்டு மொத்த இதயம் சட்டசபை ஆகும். இங்கு உச்சபட்ச பாதுகாப்பு நிறைந்த இடமாகவும் திகழும். புதுச்சேரி சட்டசபையில் முதலமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் அலுவலகங்கள் இயங்கி வருகிறது.
இத்தகைய சட்டசபைக்குள் சர்வ சாதாரணமாக யாரும் நுழைந்து விட முடியாது. புதுச்சேரி சட்டசபையின் பாதுகாப்பை பலப்படுத்த வளாகத்தை சுற்றிலும் சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கப்படுகிறது. இதுதவிர, சட்டசபைக்குள் வரும் அனைவரையும் சபை காவலர்கள் பரிசோதித்து, யாரை சந்திக்க செல்கின்றனர் என்ற விபரங்களை கேட்டு, கையெழுத்து வாங்கிய பின்னரே அனுமதிக்கின்றனர்.
இத்தகைய கட்டுப்பாடுகள் நிறைந்த சட்டசபைக்குள், முகமூடியுடன் (மாஸ்க் அணிந்து) வரும் ரவுடிகள் சர்வ சாதாரணமாக உலா வருகின்றனர். சட்டசபை காவலர்களுக்கு, முகமூடி அணிந்த நபர்கள் ரவுடிகளா, பொதுமக்களா என தெரிவது இல்லை. அமைச்சர், எம்.எல்.ஏ.க்கள் அலுவலகத்திற்கு செல்வதாக கூறினால் உடனே அனுமதிக்கின்றனர்.
இதனை பயன்படுத்தி கடந்த 2 நாட்களுக்கு முன்பு பிரபல ரவுடிகள் 2 பேர் முகமூடி அணிந்து கொண்டு சர்வ சாதாரணமாக சட்டசபைக்குள் சென்றனர். 30 நிமிடங்கள் கழித்து சட்டசபையை விட்டு வெளியேறி புறப்பட்டு சென்றனர். சட்டசபைக்குள் ரவுடிகள் எதற்காக வந்தனர், யாரை சந்தித்தனர் என்ற விபரம் தெரியவில்லை.
சட்டசபை வளாகத்தில் பிரபல ரவுடிகள் சர்வசாதாரணமாக உலா வந்த சம்பவம் அதிகாரிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.