search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்- சேதமான பொருட்களுடன் கூடுதல் நிவாரணம் கேட்டு பொதுமக்கள் மறியல்
    X

    வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்- சேதமான பொருட்களுடன் கூடுதல் நிவாரணம் கேட்டு பொதுமக்கள் மறியல்

    • பல பகுதிகளில் வீட்டுக்குள் தண்ணீர் புகுந்து பொருட்களும் சேதமடைந்தன.
    • மறியலால் நகர பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் புயல் மழையால் பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டது.

    முதல்-அமைச்சர் ரங்கசாமி அனைத்து ரேசன் கார்டுதாரர்களுக்கும் மழை நிவாரணமாக ரூ. 5 ஆயிரம் நிவாரணம் அறிவித்தார். இது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

    வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்து பொருட்கள் சேதமானவர்களுக்கும், மழையை வேடிக்கை பார்த்தவர்களுக்கும் ஒரே நிவாரணமா? என்ற கேள்வியை அரசியல் கட்சிகளும், சமூக அமைப்புகளும், பொதுமக்களும் எழுப்பி வருகின்றனர். உப்பனாறு வாய்க்காலில் அதிக நீர் வந்ததால் கரையோரம் இருந்த உருளையன்பேட்டை தொகுதி கடும் பாதிப்புக்கு ஆளானது. குறிப்பாக இளங்கோ நகர், சாரதி நகர், சாந்தி நகர் உட்பட பல பகுதிகளில் வீட்டுக்குள் தண்ணீர் புகுந்து பொருட்களும் சேதமடைந்தன.

    இந்த பொருட்களை மினி லாரியில் கொண்டு வந்த நேரு எம்.எல்.ஏ., தொகுதி மக்கள், மனிதநேய மக்கள் சேவை இயக்க நிர்வாகிகளுடன், காமராஜர் சாலை நேரு வீதி சந்திப்பில் மறியலில் ஈடுபட்டனர். மறியலால் நகர பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார், எம்.எல்.ஏ, பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிட செய்தனர்.

    மறியலில் ஈடுபட்ட நேரு எம்.எல்.ஏ. கூறியதாவது:-

    புதுவையில் மழை நீர் வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டனர். ரேசன் கார்டுக்கு ரூ. 5 ஆயிரம் நிவாரணத்தை முதல்வர் அறிவித்தார். ஆனால் எங்கள் தொகுதியில் மழைநீர் வீடுகளில் புகுந்து பொருட்கள் பல நாசமாகி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    வருவாய்த்துறை அதிகாரிகள் வெள்ளம் புகுந்த பகுதிகளில் வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு நடத்தவேண்டும். இழப்புகளுக்கு தகுந்த நிவாரணம் தர வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×