என் மலர்
புதுச்சேரி
சட்டசபை தேர்தலை சந்திக்க தயராகும் புதுச்சேரி பா.ஜ.க.
- புதிதாக 3 பேருக்கு நியமன எம்.எல்.ஏ.,க்கள் பதவியை தர கட்சி மேலிடம் முடிவெடுத்துள்ளது.
- புதுச்சேரி பா.ஜ.க. அலுவலகம் கடந்த சில நாட்களாக பரப்பரப்பாக காணப்படுகிறது.
புதுச்சேரி:
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.
என்.ஆர். காங்கிரஸ் சார்பில் 10 எம்.எல்.ஏ.,க்கள் வெற்றி பெற்றனர். இதில் முதலமைச்சராக ரங்கசாமி, அமைச்சர்களாக தேனீ.ஜெயக்குமார், லட்சுமி நாராயணன், திருமுருகன், துணை சபாநாயகர் ராஜவேலு, அரசு கொறடா ஏ.கே.டி. ஆறுமுகம் ஆகியோர் பதவி வகித்து வருகின்றனர்.
பா.ஜ.க. சார்பில் 6 எம். எல்.ஏ.,க்கள் வெற்றி பெற்றனர். இதில் சபாநாயகராக ஏம்பலம் செல்வம், உள்துறை அமைச்சராக நமச்சிவாயம், ஆதிதிராவிட நலத்துறை அமைச்சராக சாய்ஜெ. சரவணன்குமார், முதலமைச்சரின் பாராளுமன்ற செயலராக ஜான்குமார் ஆகியோர் பதவியில் உள்ளனர்.
மேலும் வி.பி.ராமலிங்கம், வெங்கடேசன், அசோக் பாபு ஆகியோர் நியமன எம்.எல்.ஏ.,க்களாக உள்ளனர்.
இந்நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. கூடுதல் இடங்களில் வெற்றி பெறுவதற்காக மாநிலத்தில் தலைவர் பதவி முதல் அனைத்து அணி தலைவர் பதவிகள் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது.
புதிய மாநில தலைவர் யார் என்பது விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது. இந்நிலையில் பா.ஜ.க. அமைச்சர் ஒருவரை ராஜினாமா செய்ய வைத்து அதிருப்தியில் உள்ள 3 எம். எல்.ஏ.,க்களில் ஒருவருக்கு அமைச்சர் பதவி தர கட்சி தலைமை தயாராகி வருகிறது.
இதுமட்டுமின்றி தற்போது உள்ள நியமன எம்.எல்.ஏ.,க்கள் 3 பேரையும் ராஜினாமா செய்ய வைத்து, புதிதாக 3 பேருக்கு நியமன எம்.எல்.ஏ.,க்கள் பதவியை தர கட்சி மேலிடம் முடிவெடுத்துள்ளது.
இதில் முன்னாள் எம்.எல்.ஏ., தீப்பாய்தான், காரைக்காலை சேர்ந்த ராஜசேகர் மற்றும் மீனவர் அல்லது வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த ஒருவரும் நியமிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இதனால் புதுச்சேரி பா.ஜ.க. அலுவலகம் கடந்த சில நாட்களாக பரப்பரப்பாக காணப்படுகிறது.