என் மலர்
புதுச்சேரி

புதுச்சேரி-விழுப்புரம் 4 வழிச் சாலையில் துப்புரவு தொழிலாளர்கள் திடீர் மறியல்

- 4 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
- 4 வழிச் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
திருபுவனை:
புதுச்சேரி மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்ட கிராமங்களில் தனியார் நிறுவனம் மூலம் 50-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் துப்புரவு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த தொழிலாளர்களுக்கு கடந்த 4 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் தொழிலாளர்கள் பலமுறை அந்த நிறுவனத்திடம் சம்பள பாக்கி கேட்டு முறையிட்டனர். ஆனாலும் சம்பளம் வழங்கப்படவில்லை.
இந்த நிலையில் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் துப்புரவு தொழிலாளர்கள் உடனடியாக சம்பளம் வழங்கக் கோரியும் இ.எஸ்.ஐ., பி.எப். பிடிப்பு மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க கோரி திருபுவனை 4 வழி சாலையில் குப்பை வண்டிகள், குப்பை கூடைகளுடன் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை அறிந்த திருபுவனை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட துப்புரவு தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதனை துப்புரவு தொழிலாளர்கள் ஏற்க வில்லை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து திருபுவனை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. கோபிகா சாலை மறியலில் ஈடுபட்ட துப்புரவு தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
மேலும் குப்பை வாரும் பணியை மேற்கொண்டு வரும் தனியார் நிறுவன பொதுமேலாளர் நரேன்னிடம் தொலைபேசியில் பேசி 4 மாத சம்பள பாக்கியை உடனடியாக ஊழிகளுக்கு வழங்க அவர் கேட்டுக்கொண்டார்.
அதற்கு தனியார் குப்பை வாரும் நிறுவன பொதுமேலாளர் சம்பளம் உள்ளிட்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுவதாக உறுதியளித்தார். இதனை ஏற்றுக் துப்புரவு தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தினால் புதுவை-விழுப்புரம் 4 வழிச் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.