என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்
செவ்வாய் தோஷமும் பரிகார ஆலயங்களும்
செவ்வாய் தோஷம் என்றதும் எல்லோரும் அலறும் நிலைதான் உள்ளது. செவ்வாய் தோஷம் இருந்தால் திருமணம் தாமதம் ஆகும் என்பது போல பலரும் பேசுவது மரபு போலவே ஆகிவிட்டது. ஆனால் செவ்வாய் கிரகம் எல்லோரும் நினைப்பது போல மோசமான கிரகம் அல்ல. அதனுடைய தோற்றத்தை தெரிந்து கொண்டாலே அது நமக்கு புரிந்து விடும்.
சப்தரிஷிகளில் ஒருவரான பரத்வாஜ் முனிவர் நர்மதை ஆற்றங்கரையில் ஆசிரமம் அமைத்து வாழ்ந்து வந்தார். ஒருநாள் அதிகாலையில் நர்மதை ஆற்றில் நீராட சென்றார். அப்போது அங்கு தேவலோக பெண் ஒருத்தி நீராடிக் கொண்டிருந்தாள். அவளை கண்டதும் அவளது அழகில் பரத்வாஜ் முனிவர் மயங்கினார்.
அவளிடம் பேசி மயக்கி இரண்டற கலந்து விட்டார். இதன் காரணமாக அந்த தேவலோக பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையுடன் பரத்வாஜ் முனிவர் ஆசிரமத்துக்கு செல்ல முடியாது. அந்த பெண்ணும் அந்த குழந்தையை தேவலோகத்துக்கு கொண்டு செல்ல இயலாது. எனவே இருவரும் நர்மதை நதிக்கரையிலேயே அந்த குழந்தையை விட்டு சென்றனர்.
இதை கண்ட பூமாதேவி அந்த குழந்தையை எடுத்து வளர்த்தாள். குறிப்பிட்ட வயது வந்ததும் அந்த குழந்தை தன் தந்தை யார் என்று கேட்டாள். பூமாதேவி நடந்தது அனைத்தையும் அந்த பையனிடம் சொல்லி அவனை பரத்வாஜ் முனிவரிடம் அழைத்துச் சென்று ஒப்படைத்தாள். பரத்வாஜ் முனிவரும் தன் மகனை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டார். அந்த சிறுவனுக்கு செவ்வாய் என்று பெயர் சூட்டி வளர்த்தார்.
தாய் அரவணைப்பு இல்லாமல் வளர்ந்ததால் செவ்வாய்க்கு குடும்பம், தாய், மனைவி போன்ற விவகாரங்களில் வெறுப்பு ஏற்பட்டு போனது. இதனால்தான் ஜாதகத்தில் செவ்வாய் நிற்கும் இடங்களில் குடும்ப ரீதியாக பாதிப்பை ஏற்படுத்துகிறார் என்று ஜோதிடர்கள் சொல்கிறார்கள். குறிப்பாக ஜாதகத்தில் 2, 4, 7, 8, 12 ஆகிய கட்டங்களில் செவ்வாய் இருந்தால் அந்த ஜாதகக்காரருக்கு செவ்வாய் தோஷம் என்று சொல்லி விடுகிறார்கள்.
இதே போல சந்திரன் நின்ற இடத்தில் இருந்து 2, 4, 7, 8, 12 இடங்களில் செவ்வாய் இருப்பதும் செவ்வாய் தோஷம் என்கிறார்கள். இப்படி சொல்வதால் தமிழகத்தில் லட்சக்கணக்கானவர்கள் தற்போது பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். குடும்பத்தில் நிம்மதி இல்லாமல், திருமணம் கை கூடாமல் பரிதாப நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.
ஆனால் ஜாதகத்தில் 2, 4, 7, 8, 12 இடங்களில் செவ்வாய் இருந்தால் கண்ணை மூடிக்கொண்டு அதை செவ்வாய் தோஷம் என்று சொல்லவே முடியாது என்பதுதான் உண்மை. ஜாதக கட்டங்களில் மற்ற கிரக அமைப்புகளுடன் செவ்வாய் இருப்பதை ஒப்பிட்டு பார்க்கும் சமயத்தில் செவ்வாய் தோஷம் இல்லை என்பது நிதர்சனமான உண்மையாகும்.
பொதுவாக ஜாதகத்தில் 7, 8 இடங்களில் செவ்வாய் இருந்தால் கடுமையான தோஷம் என்பார்கள். 2, 4, 12 இடங்களில் இருந்தால் தோஷம் சற்று குறைவாக இருக்கும் என்று சொல்வார்கள். ஆனால் மற்ற கிரக அமைப்புகள் சரியாக இருக்கும் பட்சத்தில் செவ்வாய் தோஷம் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. எனவே 2, 4, 7, 8, 12 கட்டங்களில் செவ்வாய் இருந்து விட்டாலே கண்ணை மூடிக்கொண்டு செவ்வாய் தோஷம் என்று சொல்லக்கூடாது.
செவ்வாய் தோஷம் இருந்தால் அதே மாதிரி செவ்வாய் தோஷம் உள்ள பெண்ணைதான் திருமணம் செய்ய வேண்டும் என்பது பலமொழி போல ஆகி விட்டது. செவ்வாய் கிரகம் வெப்பம் மிகுந்த கிரகமாகும். இந்த கிரக அமைப்பில் இருப்பவர்கள் ஆர்.எச். நெகடிவ் என்ற ரத்த வகை கொண்டவர்களாக இருப்பார்கள். மற்ற ரத்த வகை உடையவர்களுடன் இவர்கள் திருமணம் செய்தால் அவர்களது இல்லற இன்பம் திருப்தியாக இருக்காது என்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டு உள்ளது.
இதை வைத்துக் கொண்டுதான் ஜோதிடர்கள் ஆண்-பெண் இருவரின் ஜாதகத்திலும் செவ்வாய் தோஷம் இருக்க வேண்டும் என்று பொதுப்படையாக சொல்லி விட்டார்கள். செவ்வாய் பகவானை சகோதர காரகன், பூமி காரகன் என்று சொல்வார்கள். எனவே ஜாதகத்தில் செவ்வாய் அமைப்பை பொறுத்து சகோதரர்களால் நல்லது-கெட்டது தீர்மானிக்கப்படும்.
அதுபோல பூமி, விவசாயம் போன்றவற்றில் ஏற்படும் லாப-நஷ்டங்களிலும் செவ்வாய் ஆதிக்கத்தை காண முடியும். ஜாதகத்தில் செவ்வாய் நிற்கும் இடம் மற்றும் அதன் திசை உள்ளிட்டவற்றை நுட்பமாக ஆய்வு செய்தால் மட்டுமே செவ்வாய் தோஷம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை கணிக்க முடியும். எனவே வெறுமனே செவ்வாய் தோஷம் என்றால் நம்பாதீர்கள்.
தோஷம் எந்த அளவுக்கு இருக்கிறது என்று கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். அதற்கு ஏற்ப உரிய தலங்களுக்கு சென்று பரிகார பூஜை செய்தால் செவ்வாய் தோஷ பாதிப்பில் இருந்து நிவர்த்தி பெற முடியும். எனவே செவ்வாய் தோஷம் என்று சொல்லப்படுவது எந்த அளவுக்கு எப்படி இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள வேண்டியது மிக மிக அவசியம்.
பொதுவாக விநாயகர் வழிபாடு ஒன்றே செவ்வாய் தோஷத்தை நிவர்த்தி செய்ய போதுமானது என்று சொல்வார்கள். செவ்வாய் கிரகத்துக்கு விநாயகர் ஒரு செவ்வாய்க்கிழமை காட்சி அளித்தார். அதனால் செவ்வாய்க்கிழமை மங்களவாரம் என்று சொல்வார்கள். இதில் இருந்து செவ்வாய் கிரகத்துக்கு மங்களன் என்ற பெயர் வந்தது.
எனவே விநாயகரை செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருந்து வழிபட்டால் செவ்வாய் தோஷத்தை தடுத்து நிறுத்த முடியும். செவ்வாய்க்கி ழமைகளில் சதுர்த்தி திதி வந்தால் அன்று விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வழிபட்டு பாருங்கள். செவ்வாய் தோஷம் ஓடியே போய் விடும்.
செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருப்பதும் மற்றொரு பரிகாரம் ஆகும். 41 செவ்வாய்க்கிழமை விரதம் இருந்து சிவப்பு நிற ஆடை அணிந்து செவ்வாய் கிரகத்துக்கு செண்பக பூ, சிவப்பு நிற அரளி பூ கொண்டு பூஜை செய்தால் நல்ல பலன் கிடைக்கும். 5 பேருக்கு சிவப்பு வஸ்திரங்களும் உணவும் கொடுப்பது இன்னும் நல்லது.
செவ்வாய் தோஷத்தால்தான் திருமணம் தடைப்படுகிறது என்று உறுதியாக தெரிய வந்தால் வளர்பிறை செவ்வாய்க்கிழமை வீட்டிலேயே செவ்வாய் பகவானுக்கு பூஜைகள் செய்தால் சரியாகி விடும். பூஜை செய்யும்போது செவ்வாய் கிரகத்தை மனதில் நினைத்துக் கொண்டு சூடம், சாம்பிராணி காட்டினால் நிச்சயம் பலன் உண்டு.
செவ்வாய்க்கிழமைகளில் செவ்வாய் ஓரையில் தெற்கு திசையில் செவ்வாய்க்குரிய கோலம் வரைந்து அதன் மீது செவ்வாய் எந்திரத்தை வைத்து 108 தடவை செவ்வாய் காயத்ரியை சொன்னால் எவ்வளவு பெரிய செவ்வாய் தோஷமும் கட்டுப்பட்டு விடும். தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகாவில் இலந்துறையில் அமைந்துள்ள சுந்தரேஸ்வரர் கோவிலில் வழிபடுவதும் செவ்வாய் தோஷத்தை போக்க உதவும்.
பொதுவாக செவ்வாய் கிரகத்தை வழிபடும்போது, "பூமித்தாய் பெற்ற தவப்பு தல்வனே, மின்னல் போன்ற ஒளி கொண்டவனே, சக்தி ஆயுதத்தை ஏந்தி இருப்பவனே, மங்களம் என்ற பெயர் கொண்டவனே உன்னை வணங்குகிறேன். என்னை பாதுகாத்துக் கொள்" என்று சொன்னாலே போதும். செவ்வாய் பகவான் மனம் இறங்கி நிச்சயம் அருள்வார்.
செவ்வாயின் அதிபதி முருகப்பெருமான். எனவே முருகன் வீற்றிருக்கும் ஆலயங்களில் வழிபடுவது நல்லது. குறிப்பாக வைத்தீஸ்வரன் ஆலயத்துக்கு செவ்வாய்க்கிழமைகளில் சென்று வழிபாடு செய்வதால் செவ்வாய் தோஷ பாதிப்பில் இருந்து விடுபட முடியும். வைத்தீஸ்வரன் கோவில் மிக சிறந்த செவ்வாய் பரிகார தலமாக அனைவராலும் போற்றப்படுகிறது.
இந்த தலத்தில் செவ்வாய் பகவான் தெற்கு பார்த்த நிலையில் உள்ளார். செல்வமுத்துக்குமாரர் சன்னதிக்கு பின்புறம் இவரது சன்னதி அமைந்துள்ளது. நான்கு கைகள் அவற்றில் ஆயுதங்கள் ஏந்தி அபயம் தருவபராக செவ்வாய் காட்சி அளிக்கிறார். செவ்வாய்க்கிழமைகளில் வைத்தீஸ்வரன் ஆலயத்தில் ஆட்டுகிடா வாகனத்தில் செவ்வாய் வீதி உலா வருவார்.
செவ்வாயும், முருகனும் முன்னும்பின்னு மாக உலா வருவார்கள். அப்போது வழிபட்டால் மிகவும் நல்லது. இந்த பரிகாரத்தை செய்ய இயலாதவர்கள் தங்கள் ஊர் எல்லையில் உள்ள காவல் தெய்வங்களுக்கு செம்பருத்தி பூ அல்லது சிவப்பு நிற பூவை அணிவித்து வழிபட்டால் பலன்கள் கிடைக்கும்.
செவ்வாய் தோஷம் உள்ள பெண்கள் செவ்வாய் காயத்ரி மந்திரத்தை நேரம் கிடைக்கும் போதெல்லாம் சொல்லிக் கொண்டே இருக்கலாம்.
வீர துவஜாய வித்மஹே, விக்ன ஹஸ்தாய தீமஹி, தந்நோ பவும: ரசோதயாத் என்ற இந்த மந்திரத்தை தினமும் காலையில் குளித்து விட்டு சுத்த ஆடைகளை உடுத்தி நெற்றியில் குங்குமம் இட்டுக் கொண்டு ஓர் அமைதியான இடத்தில் அமர்ந்து 108 முறை சொன்னால் செவ்வாய்க் கிரகத்தால் அஷ்ட ஐஸ்வரியங்களும் பெருகும்.
பூந்தமல்லி, திருப்போரூரில் உள்ள வைத்தீஸ்வரன் கோவில்கள், வில்லிவாக்கம் அகதீஸ்வரர் கோவில், நெல்லை கோடகநல்லூர் கைலாசநாதர் கோவில், நவதிருப்பதிகளில் ஒன்றான திருக்கோளூர் வைத்தமாநி பெருமாள் கோவில், திண்டுக்கல் தண்டாயுதபாணி கோவில், சின்னாளபட்டி சதுர்முகன் கோவில், மதுரை மன்னாடிமங்களம் நரசிங்க பெருமாள் கோவில், சோழவந்தான் பிரளயநாதர் கோவில், தேனி கோடங்கிபட்டி ஆறுமுக நயினார் கோவில், மதுரை செல்லூர் திருவாப்புடையார் கோவில், திருப்புனவாசல் விருத்தக்கீஸ்வரர் கோவில், சென்னை அனுமந்தபுரம் வீரமந்திரர் கோவில், காங்கேயநல்லூர் சுப்பிரமணியசாமி கோவில், பவானி சங்கமேஸ்வரர் கோவில், சென்னிமலை சுப்பிரமணியசுவாமி கோவில், பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோவில், திருப்பணந்தாள் அருணசடேஸ்வரர் கோவில், திருவாரூர் வீரா வாடி அகோரவீர பத்திரர் கோவில் ஆகியவையும் செவ்வாய் தோஷத்தை விரட்டும் மிக சிறந்த தலங்களாக திகழ்கின்றன. பயன்படுத்தி செவ்வாய் தோஷத்தில் இருந்து விடுபடுங்கள்.