search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    கீழ்ப்படிதல் என்னும் அருங்குணம்
    X

    கீழ்ப்படிதல் என்னும் அருங்குணம்

    • இயற்கைச் சூழலுக்குக் கீழ்ப்படிந்து வாழக் கற்றுக் கொள்வதில் தான் மனித இனம் வெற்றியடைந்ததாகப் போற்றப்படுகிறது.
    • சமூக நடைமுறைகளுக்கு ஏற்ப மக்கள் நடந்துகொள்ள வேண்டிய விதிமுறைகளை அவ்வப்போது பெரியவர்கள் தீர்மானித்துச் சட்டம் ஆக்குகின்றனர்.

    கீழ்ப்படிதல் என்னும் பண்புக்குணம் நிறைந்த அன்பின் வாசகர்களே!

    வணக்கம்.

    குடும்பத்தில், வளரும் பிள்ளைகளிடத்திலும், கல்விக்கூடங்களில், பயிலும் மாணவர்களிடத்திலும், அலுவலகங்களில், பணிபுரியும் பணியாளர்களிடத்திலும் நாம் அதிகம் எதிர்பார்க்கக் கூடிய அருங்குணம் 'கீழ்ப்படிதல்' ஆகும். நாட்டில் ஆட்சியாளர்களால் வகுக்கப்பட்டுள்ள சட்ட நடைமுறைகளுக்குக் கட்டுப்பட்டுக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டியது ஒவ்வொரு சமூக மனிதனின் கடமையுமாகும்.

    கீழ்ப்படிதல் என்பதே மரபைப் பேணுகிற, மரபைக் கடைப்பிடிக்கிற, மரபுவழி நடக்கின்ற நேர்மையான வழியாகும். "மரபு நிலை திரியின் பிறிது பிறிது ஆகும்!" என்கிற தொல்காப்பிய நூற்பா, மனிதன் மரபைப் பின்பற்றி வாழவில்லையென்றால், வாழ்க்கைமுறையே கந்தர கோலம் ஆகிப்போகும் என எச்சரிக்கிறது; மரபைப் பேண வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது.

    காட்டுமிராண்டி வாழ்வில் இருந்து மனிதன் படிப்படியாக மீளத்தொடங்கி, நாகரிக வாழ்வியலுக்குள் புகுந்து சிறப்படைந்ததற்குக் கீழ்ப்படிதலே முக்கியக் காரணம். இயற்கைக்குக் கட்டுப்பட்டு உலகம் சுழன்று கொண்டிருக்கிறது. உலகச் சுழற்சிக்கேற்பக் காலநிலை மாற்றங்கள் ஏற்படுகின்றன. பருவநிலைக்கு ஏற்றவாறு மனித வாழ்க்கைச் சூழ்நிலைகள் மாற்றம் பெறுகின்றன.

    இரவு, பகல், மழை, வெய்யில், காற்று, புயல், மேடு, பள்ளம், மலை, கடல், வயல், பாலைவனம், ஆறு-வெள்ளம் என நடைமுறை வாழ்வியலில் தாம் காணும் முரண்பட்ட தன்மைகளுக்கு ஏற்ப, இயற்கைச் சூழலுக்குக் கீழ்ப்படிந்து வாழக் கற்றுக் கொள்வதில் தான் மனித இனம் வெற்றியடைந்ததாகப் போற்றப்படுகிறது.

    காலை எழுவதில் தொடங்கி இரவு துயில்வது வரை, நேரத்திற்குக் கீழ்ப்படியக் கற்றுக் கொள்பவர்களே உழைப்பில் சிறந்த வெற்றியாளர்கள். சாலையில் வாகனம் ஓட்டிச் செல்லும்போது, போக்குவரத்து விதிகளுக்குக் கீழ்ப்படிந்து செல்பவர்களால் மட்டுமே சரியான இலக்கைச் சரியான நேரத்தில் சென்று அடைய முடியும். அலுவலகத்திலும் அவ்வப்போது மேலதிகாரிகளும் முதலாளிகளும் விதிக்கும் விதிமுறைகளுக்குக் கீழ்ப்படிந்து நடந்தால் மட்டுமே உற்பத்தியும் பணியும் எதிர்பார்த்த சிறந்த நிலையை எட்டும்.

    கீழ்ப்படிதல் என்பது ஒருவகை ஒழுக்கம். ஒரு நிறுவனத்தின் அல்லது ஒரு செயலின் வெற்றிக்கு நிர்வாகம் விதிக்கிற விதிமுறைகளுக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டியது அனைவரின் கடமையாகும். ஆனாலும் அதனைக் கடைப்பிடிப்பதில் ஓர் இலகுத் தன்மை இருக்க வேண்டும்.

    ஒரு தனியார் தொழிற்சாலை. உள்ளே வாசலைத் தாண்டிக் கொஞ்ச தூரத்தில் இருந்த ஒரு மரத்தடியில் ஓர் இளைஞர் நின்று தம் அடித்துக்கொண்டிருந்தார். அப்போது தொழிற்சாலைக்குள் காரில் நுழைந்த ஆலையின் முதலாளி, இளைஞர் தம் அடித்துக் கொண்டிருப்பதைக் காரின் கண்ணாடிக் கதவை இறக்கிப் பார்த்தார். இளைஞர் இவரைக் கண்டுகொண்டதாய்த் தெரியவில்லை. கடும்கோபத்தோடு தொழிற்சாலையின் தன் அறைக்குள் நுழைந்து, உள் தொலைபேசி மூலமாக மேனேஜரை அழைத்தார்.


    "கேட்டைத் தாண்டி உள்ளே வரும் வழியில் உள்ள வேப்ப மரத்தடியில் ஒருவன் தம் அடித்துக் கொண்டிருக்கிறான்.

    தொழிற்சாலை வளாகத்திற்குள் புகைபிடிக்கக் கூடாது என்று எத்தனைமுறை சொல்வது?.நம் தொழிற்சாலையில் விதியும் இருக்கிறது!. நீங்கள் நேராகச் சென்று, அவனிடம் எந்த அறிவுரையும் கூறாமல், அவனது பேரை மட்டும் கேட்டு, உடனடியாக அவனது கணக்கை முடித்து, வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டு என்னை வந்து பாருங்கள்!" என்றார்.

    சரி எனச் சொல்லிவிட்டு வெளியே சென்ற மேனேஜர் அடுத்த பதினைந்து நிமிட நேரத்தில், முதலாளி அறைக்குள் வந்து, "நீங்கள் சொன்னதைச் செய்துவிட்டேன் முதலாளி!" என்று பணிவாகச் சொன்னார். "ரொம்பச் சரி!. கீழ்ப்படிதல் இல்லையென்றால் இதுதான் நடக்கும் என்று மற்ற தொழிலாளர்களுக்கு இது படிப்பினையாக இருக்க வேண்டும்!" என்றார் முதலாளி.

    ஆரம்பத்தில் நாம் பார்த்த அந்த மரத்தடி இளைஞர், இப்போது கேட்டில் இருந்த செக்யூரிட்டியிடம் பேசிக்கொண்டிருந்தார், " என்னங்க தொழிற்சாலை இது?; நான் என்னோட நண்பர் இங்க வேலை பார்க்கிறவரைப் பார்த்திட்டுப் போகலாம்னு வந்து ஒரு ஓரமா நின்னு தம் அடிச்சுட்டு இருந்தேன்.

    அப்ப, யாரோ ஒருத்தர் வந்து என்னோட பேரு என்ன?ன்னு கேட்டார். கூட வா!ன்னு கூட்டிட்டுப் போயி! ஏதோ ஒரு பெரிய நோட்டுல கணக்குப் போட்டு, அதில ஒரு கையெழுத்தையும் வாங்கிட்டுக், கையில் ஒரு கவரையும் குடுத்து அனுப்பிச்சு விட்டுட்டாரு. வெளியில் வந்து பார்த்தா கவர்ல 52 ஆயிரம் ரூபாய் பணம் இருக்குது!. எனக்கு ஒன்னும் புரியலிங்களே?" என்றார். செக்யூரிட்டியோ அவரை விடப் புரியாமல் குழம்பிப்போய் நின்றார்.

    இப்போது உங்களுக்குக் கொஞ்சம் புரிந்திருக்கும். தொழிற்சாலைக்குள் வந்து விதிமீறல் செய்திருப்பது வெளிஆள் என்பது தெரியாமல் முதலாளிக்குக் கோபம் வந்திருக்கிறது. ஆனாலும் ஆலை மேலாளரின் கண்மண்தெரியாத கீழ்ப்படிதல் தன்மை, இளைஞர் ஆலைத் தொழிலாளிதானா? என்பதைப் பரிசீலிக்காமலேயே, அந்தப்பெயரில் உள்ள யாரோ ஒருவரின் கணக்கை முடிக்க வைத்திருக்கிறது. பணத்தைப் பெற்றுக்கொண்டவர் காரணம் தெரியாமல் விழிப்பதற்கு இதுதான் காரணம்.

    கீழ்ப்படிதல் என்றால், விதி என்று இருந்தால் எந்தக்கேள்வியும் கேட்காமல் அதிகாரத்திற்குக் கட்டுப்படுவதுதான். ஆனால் அதிகாரத்தை உரிய முறையில் பயன்படுத்த முடியாமல் போகும்போது ஏற்படும் இயலாமை, சர்வாதிகார மனப்பான்மையை உருவாக்கி விடுகிறது. அதனால்தான் அந்த ஆலை முதலாளிக்குத் தொடர்பில்லாத நபர் மீது கோபம் வந்துவிட்டது. ஆனாலும், பொறுமையாக நடவடிக்கை எடுக்கவேண்டிய மேலாளர், இங்கு அவசரகதியான கீழ்ப்படிதலோடு நடவடிக்கை எடுத்ததற்கு முதலாளியின் கோபம் காரணமாகிவிட்டது.

    வீட்டிலோ, வெளியிலோ விதிக்கப்பட்டுள்ள விதிகளுக்குக் கீழ்ப்படிந்து நடக்கவேண்டியது அனைவருக்குமே பொருந்தும். இதில் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு விதிவிலக்கு என்பது கிடையவே கிடையாது. கீழ்ப்படிதலே அனைத்தையும் சுமூகமாக்கிவிடும் தாரக மந்திரம்.

    சமூக நடைமுறைகளுக்கு ஏற்ப மக்கள் நடந்துகொள்ள வேண்டிய விதிமுறைகளை அவ்வப்போது பெரியவர்கள் தீர்மானித்துச் சட்டம் ஆக்குகின்றனர். இச்சட்டங்களுக்குக் கீழ்ப்படிய வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமையுமாகும். அப்போதுதான் குடியாட்சித் தத்துவம் சிறப்பாகக் கோலோச்ச முடியும்.

    அலுவலகங்களில், ஒவ்வொருவருக்கும் அவரவரின் பணியளவைப் பொறுத்து அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. பணிபுரியும் தருணங்களில் தத்தமது கடமைத் தகுதிக்கு ஏற்றவாறு விதிகளுக்குக் கட்டுப்பட்டுக் கீழ்ப்படிதலோடு நடந்துகொள்வதே பணியாளருக்கு உரிய நடத்தை விதிகளாகும்.

    நாம் ஓட்டும் வாகனங்களில், கியர், கிளட்ச், ஆக்சிலேட்டர், பிரேக், ஸ்டீயரிங் என ஐந்து வகையான அமைப்புகள் இருக்கின்றன. வண்டியை முன்னே நகர்த்தி ஓட்டுவதற்கும், பின்னே நகர்த்திச் செலுத்துவதற்கும் இந்த ஐந்தையும் எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்கிற விதிமுறை இருக்கிறது. கீழ்ப்படிதல் உணர்வோடு, கைகளையும் கால்களையும் கொண்டு இந்த ஐந்தையும் அவ்வவற்றிற்குரிய விதிமுறைகளோடு பயன்படுத்தினால், வாகனத்தை விரும்பிய இடத்திற்கு, விரும்பிய வேகத்தில், விபத்துகள் ஏதுமின்றி கொண்டு செலுத்தலாம். இல்லையென்றால் விளைவுகள் எதிர்மறையானவையாகவே அமையும்.

    சாலைகள் குறுக்கும் நெடுக்குமாகச் செல்லுகின்ற சந்திப்புகளில், சிவப்பு, மஞ்சள், பச்சை எனும் குறியீடுகள் மாற்றி மாற்றி ஒளிர்கின்றன. இவற்றின் தன்மைகளுக்கேற்ப நாம் சாலைகளைக் கடந்தால் விபத்துகள் ஏற்படாது; போக்குவரத்து நெருக்கடிகளும் உண்டாகாது. எல்லாவற்றிற்கும் அடிப்படைத் தேவை கீழ்ப்படிதல்.

    வீட்டில் கணவன் மனைவி இருவரில் யார் பெரியவர்? என்கிற ஆணவம் தலைதூக்கத் தொடங்கினால் கீழ்ப்படிதல் தொலைந்துபோகும்; இல்லற நெறிமுறைகளும் காணாமல் போகும். பெற்றோர்கள் கூறுவதைப் பிள்ளைகள் கேட்க வேண்டும்; பிள்ளைகள் வளர்ந்துவிட்டால் முக்கியமான தருணங்களில் பிள்ளைகளின் ஆலோசனைகளைப் பெற்றோர்களும் கேட்க வேண்டும். இங்கே கீழ்ப்படிதல் என்பது, அனுபவத்திற்கும் அறிவுக்கும் ஏற்ப நடந்துகொள்வது. அதிகார மமதையோடு நடந்துகொள்ள எண்ணினால் தவறுகளே தாராளமாகிவிடும்.

    வெளிநாட்டில், ஒரு வீட்டில்,சாப்பாட்டு மேசையில் இரவு உணவு பரப்பப் பட்டிருந்தது. வீட்டில் இருந்த தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, சிறுவர்களான மகன், மகள் ஆகியோர் ஆளுக்கொரு தட்டோடு மேசை அருகில் வந்தனர். உணவுக்கு முன் சூப் சாப்பிடுவதற்காக ஆளுக்கொரு கப்பை எடுத்து சூப்பை ஊற்றி நிரப்பிக்கொண்டு கரண்டி மூலம் அருந்தத் தொடங்கினர்.

    அப்பாவுக்கு 'ஹாய்!' சொல்லிக்கொண்டே அருகில் வந்த சிறுவனான மகன், "டாடி! இந்தக் கரப்பான் பூச்சிகளைப் பற்றி உங்களது கருத்து என்ன?" என்று கேட்டான். அப்பாவுக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்து விட்டது." வாயை மூடிக்கொள்! சாப்பிட வந்தால் சாப்பிடும் வேலையை மட்டும் பார்! தேவையற்ற பேச்சுக்களைப் பேசாதே!" எச்சரித்தார் அப்பா. நமக்கேன் வம்பு எனக் கீழ்ப்படிதலோடு வாயை மூடிக்கொண்டான் மகன்.

    டின்னர் முடிந்தது. எல்லாரும் மகிழ்ச்சியாக வரவேற்பறைக்கு வந்து ஐஸ் கிரீம் சுவைத்துக் கொண்டிருந்தனர். இப்போது மகனை அன்போடு அருகில் அழைத்தார் அப்பா. " சாப்பிடும்போது அருவருப்பான கரப்பான் பூச்சி போன்ற விசயங்களைப் பேசக்கூடாது! அதனால் தான் திட்டினேன்!. சரியா?. இப்போது கேள்! கரப்பான் பூச்சி குறித்த உனது கேள்வி என்ன?".

    "அதை விடுங்கள் அப்பா! அது முடிந்துபோய் விட்டது. இப்போது வேண்டாம்!" என்றான் மகன். " சும்மா சொல்! என்ன சொல்ல வந்தாயோ சொல்!" என்று வற்புறுத்தினார் அப்பா!. " அது வேறு ஒன்றுமில்லை அப்பா! நீங்கள் சூப்பைச் சுவைத்துக் கொண்டிருந்த கப்பில் ஒரு இறந்த கரப்பான் பூச்சி மிதந்து கொண்டிருந்தது! அதைச் சாப்பிடுவதால் உடம்புக்கு நல்லதா? என்பதைத்தான் கேட்க முயற்சித்தேன்! வேறு ஒன்றுமில்லை!".

    அவ்வளவுதான் பையன் சொல்லி முடிப்பதற்குள் பாத்ரூமுக்குள் ஓடிய தந்தை சாப்பிட்ட உணவு அனைத்தையும் வாஷ்பேசினில் வாந்தியெடுத்துவிட்டார். அளவுக்கதிகமான அதிகாரத் தன்மையும், நிலைமைக்கு ஒத்துப் போகாத கீழ்ப்படிதலும் எந்த நிலைமைக்குக் கொண்டுபோய் விடும் என்பதற்கு இந்த நிகழ்வே சிறந்த உதாரணம்.

    ஒவ்வொரு கீழ்ப்படிதலிலும் ஓர் அதிகாரம் ஒளிந்திருக்கிறது. அந்த அதிகாரத்தின் நியாயத் தன்மையைப் பொறுத்தே கீழ்ப்படிதலுக்கான பலன் நமக்கு வந்து சேர்கிறது. ஆண்டவனை முழுமையாக நம்புகிறவர்கள் அவனுக்கு எதிர்ப்பில்லாத கீழ்ப்படிதலைச் செய்கிறார்கள்.

    அரசனை மக்கள் நம்புவதும், ஆசிரியரை மாணவர் நம்புவதும், நிர்வாகத்தினரைப் பணியாளர் நம்புவதும், பெற்றோரைப் பிள்ளைகள் நம்புவதும் முழுமையான கீழ்ப்படிதலுக்கு வழி வகுக்கும்.

    ஆம்!

    நாம் யாரை நம்பிக் கீழ்ப்படிகிறோமோ இல்லையோ…

    முதலில் நம்மை நம்பி நமக்கு நாமே கீழ்ப்படியக் கற்றுக் கொள்வோம்!

    தொடர்புக்கு: 9443190098.

    Next Story
    ×