என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்
ரகசியங்களில் நான் மவுனம்- பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்
- பழனியில் இருந்து 7 கி.மீ. தொலைவில் இருக்கும் கணக்கம்பட்டி சென்று இருக்கின்றீர்களா?
- வருபவர்களின் குறைகளை அவர்களே அறியாமல் தீர்த்து வைப்பவர்கள்தான் மகான்கள்.
சென்ற வாரம் 5 நிமிடமாவது அன்றாடம் மவுனமாய் இருப்போம் என்று படித்தோம். செய்திருப்போம் என நம்புவோம். இதனை செய்பவர்கள் சிறிது சிறிதாக 5 நிமிடத்தில் இருந்து 20 நிமிடங்களாக கூட்டிக் கொள்ளலாம். முதலில் மவுனம் என்பதில் அசையாது ஓர் இடத்தில் 5 நிமிடங்கள் அமர்ந்து பாருங்கள். நாற்காலியில் அமர்ந்தும் இதனைச் செய்யலாம். உடல் அசையாது இருக்க வேண்டும். ஆரம்பத்தில் ஒரு நிமிடம் கூட அசையாது அமர்வது கடினமாக இருக்கும். பழக வேண்டும். விடா முயற்சி வேண்டும். அவ்வளவுதான். சாப்பிடுவதற்கு முன் அதாவது வயிறு காலியாக இருக்கும் போது இதனைச் செய்யலாம். இப்படி கண்களை மூடி அமர்ந்தாலும் மனம் பல எண்ண ஓட்டங்களை கொண்டு வரும் அது வந்து விட்டு போகட்டும். எந்த எண்ணத்தின் பின்னாலும் நாம் தொடர்ந்து செல்லக் கூடாது. இதற்கு என்ன செய்வது? உங்கள் மூச்சு எவ்வளவு தூரம் உள்ளே செல்கின்றது? எவ்வளவு தூரம் வெளியே வருகின்றது என்று கவனியுங்கள். இதற்காக எஞ்சின் போன்ற இரைச்சல், பாம்பு போன்ற புஸ், புஸ் என்ற சத்தம் வேண்டாம். சாதாரண, இயல்பான மூச்சு நிகழட்டும். இதனை கவனிக்கும் போது எண்ண ஓட்டங்கள் தடைபடும். மூச்சை கவனிப்பதும் விலகும். ஓர் அமைதி நிலைக்கு வர முடியும். இதெல்லாம் ஒரு நொடியில் நிகழாது. ஆனால் பயிற்சி செய்ய செய்ய கண்டிப்பாய் நிகழும். இனி போன வார தொடர்ச்சியான நான் பார்த்த மகான்களைப் பற்றி பகிர்ந்து கொள்வோம். இவை அவரவர் வாழ்வில் நிகழ்ந்த பல அதிசயங்கள், அனுபங்கள் இவற்றினை ஞாபகத்திற்கு கொண்டு வரலாம்.
இனி அன்றாடம் கத்தி கத்தி பேசுவதனை தவிர்க்க வேண்டும். அதுவும் மற்றவர்களை குறை கூறுவதனை தவிர்க்க வேண்டும். வாயில் இருந்து வரும் சொற்களில் அதிக கவனம் தேவை.
பழனியில் இருந்து 7 கி.மீ. தொலைவில் இருக்கும் கணக்கம்பட்டி சென்று இருக்கின்றீர்களா? இன்று கணக்கம்பட்டி சுவாமிகள் ரூப நிலையில் இல்லை. ஆனால் அவரது ஜீவ சமாதியில் அவர் பலருக்கு காட்சி தந்துள்ளார். அவர் சரீரத்தோடு வாழ்ந்த காலத்திலும் சரி, இப்போதும் சரி பல அற்புதங்களை நிகழ்த்தி வருகின்றார்.
இவர் காலத்தில் என் கணவரும், நானும் சில முறை அவரை சென்று தரிசித்துள்ளோம். ஒரு முறை எங்களுடன் எங்களது மகளும் வந்திருந்தாள். மறுநாள் பழனி செல்ல முடிவு செய்து விடுதியில் தங்கினோம். கடும் மழை காரணமாக அங்கும் மின்சாரம் இல்லை. வைத்திருந்த மெழுகுவர்த்தி கூட தீர்ந்து விட்டது. திடீரென அறையின் விட்டத்தில் மிகப்பெரிய ஒளி வட்டம் ஏற்பட்டது. டார்ச்லைட் கூட இல்லை. செல்போன்கள் இல்லாத காலம் அது. ஓரிரு நிமிடங்களில் அந்த ஒளி வட்டம் மறைந்தது.
மனம் கணக்கம்பட்டி சாமிதான் இப்படி காட்சி அளிக்கிறார் என எங்களுக்கு அடித்து கூறியது. மறுநாள் காலையில் அடித்து, பிடித்துக் கொண்டு கணக்கம்பட்டி ஓடினோம். குடிசை போன்ற வீடு சுற்றுபுறம் படு சுத்தமாய் இருந்தது. ஆனால் நாங்கள் அங்கு சென்ற போது சற்று தூரம் தள்ளி சென்றிருப்பதாக சொன்னார்கள். அங்கு சென்றோம். காய்ந்த நிலப்பகுதி. வெயில், வெட்ட வெளி, ஆண்கள் பெண்கள் தனித்தனியாக அமர்ந்திருந்தனர். நாங்களும் அவ்வாறே அமர்ந்து இருந்தோம்.
பச்சை வேட்டி, பச்சை தலைப்பா என சுவாமிகள் மடித்து கட்டிய வேட்டியுடன் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தார். ஏதோ செய்து கொண்டிருந்தார். அவர் ஒரு சிலருக்கு வேலை சொன்னார். அவர்கள் தானே செய்தனர். ஓர் அம்மா, நீண்ட கட்டைகளை தூக்கி மற்றொரு புறம் அடுக்கி வைத்துக் கொண்டிருந்தார். நான் மெதுவாக அவரிடம், 'நான் உதவி செய்யவா?' என்று கேட்டேன். அவர் வேண்டாம், வேண்டாம் யாருக்கு என்ன வேலை சாமி சொல்கின்றாரோ அவர்கள் தான் அதனை செய்ய வேண்டும். நானே செய்கிறேன் என்று பதறியபடி கூறினார்.
காரில் வந்தவர்களும் சரி, நடந்து வந்த வர்களும் சரி, அடக்கத்தோடு எளிமையாய் அங்கு இருந்தனர். திடீரென எங்களைப் பார்த்து கிழக்கால போய், வடக்கால போ தாயி என்றார். சாமி எது கிழக்கு எது வடக்கு என புரியவில்லை. உடன் இருந்தவர்கள் சத்தம் இல்லாமல் திசையினை சைகையாய் காட்ட கிளம்பினோம்.
வருபவர்களின் குறைகளை அவர்களே அறியாமல் தீர்த்து வைப்பவர்கள்தான் மகான்கள். எல்லா மகான்களிடமும் வெளியில் கண்டிப்பும், உள்ளத்தில் கருணையும் இருக்கும். ஆகவேதான் மகான்கள், ஜீவ சமாதிகள் உள்ள இடங்களை தரிசனம் செய்வது நல்லது.
மகான்கள் ஆண்களாக இருக்க வேண்டும் என்பதில்லை. பெண்களும் இருக்கின்றனர். என் கணவருக்கு வெகு காலமாக தெரிந்த, அறிந்த ஒரு அம்மையார். நாங்கள் அறிந்து அவர் எத்தனையோ வருடங்களாக உணவாக திட உணவு எடுத்துக் கொண்டது இல்லை. திரவ உணவும் மிகக் குறைந்த அளவே இருக்கும். பல நாட்கள் அதுவும் இருக்காது. எப்பேர்பட்ட பிரச்சினை என்று ஒருவர் கூறினாலும் 'கலகல'வென சிரிப்பார். வெள்ளி மணி ஓசை போல் அந்த சிரிப்பு இருக்கும். அந்த சிரிப்பு நம் கண்களில் பரவசத்தால் நீர் வரவழைத்து விடும். பிறகு எல்லாம் சரியாகி விடும் என்பார். ஒரே ஒருமுறைதான் அந்த பதில் பின் அந்த பிரச்சினை எப்படி சரியானது என்று ஒருவர் ஆச்சரியப்படும் அளவுக்கு அது சரியாகும். அந்த பிரச்சினையின் வலி, வேதனை எல்லாம் இருந்தாலும் முடிவு நன்கு இருக்கும். இவர்கள் எல்லாம் உலகத்தின் கண்களுக்கு தெரியாமல் இருப்பவர்கள். இத்தகு மகான்கள் பூமிக்கு வருவது அவர்கள் மட்டுமே அறிந்த ரகசியம்.
இப்படி எத்தனையோ அற்புதங்களை சந்திக்கும், பழகும், பேசும் வாய்ப்பு கிடைப்பது நமது நாட்டிற்க்கு கூடுதலாக கிடைத்த பலன் என்றே கூறலாம்.
இப்படி பல மகான்களை சந்திப்பதும், ஆசி பெறுவதும், அமைதியினை அதிகம் கிரகிப்பதும் எங்களுக்கு வாழ்வில் ஒரு அங்கமாகி விட்டது எனலாம்.
இவை நம்மை நாமே புதிதாக மாற்றிக் கொள்ள உதவும். மனதின் எண்ண ஓட்டங்களோடு ஐக்கியம் ஆகாமல் இருப்ேபாம். நல்ல நிகழ்வுகள், அனுபவங்கள் நினைவில் வந்து நம்மை மகிழ்விக்கும். வாயின் உள்ளே செல்லும் உணவிலும், வெளியில் வரும் வார்த்தையிலும் கவனம் அதிகம் ஏற்படும். எதனை நினைக்க வேண்டுமோ, அதனையே மனம் எண்ணும். அதுவே தியான முறைக்கு ஒரு முதல் படிக்கட்டாக அமையும். மனம், வாக்கு இரண்டிலும் மவுனம் ஏற்படும்.
நெல்லிகாய் ஜூஸ், பூசணி சாறு, கொ.மல்லிசாறு என இவையெல்லாம் தானே மனமுவந்து எடுத்துக் கொள்வர். பெரும் தீணி என்பதே நினைவுக்கு வராது.
பிறரை சதா குறை கூறி பாவத்தினை சேர்த்துக் கொள்வது குறையும். பிறரும் நம்மை விமர்சனம் செய்வது இருக்காது.
நெருப்பு தன்னை சேருபவற்றை நெருப்பாகவே மாற்றி விடும். அது போல மகான்கள் தன்னிடம் வருபவர்களை தன்னை போலவே மாற்றி விடுவார்கள்.
இப்படி ஏற்படும் மாற்றங்கள் நமது அசுத்த உடலை சுத்த உடலாக மாற்றும். இதனைப் பற்றி வேதார்த்த மகரிஷி கூறுபவற்றை பின் வரும் கட்டுரையில் பார்ப்போம்.
பிரபஞ்ச சக்தி வேகமாய் உடலில் இறங்கும். புருவ மத்தியில் பிரபஞ்சத்தை உணர முடியும். நம்முள் ஆன்மா என்ற பெயரில் இறை சக்தி இருப்பது புரியும்.
சிறு சிறு ஒழுக்கங்களை அடைய படாதபாடு படுகின்றோம். ஆனால் இந்த சித்தர்கள் எத்தனை சாதனைகளை எளிதாக செய்து விடுகின்றனர். 4000, 5000 ஆண்டுகளுக்கு முன்பு 1008 அண்டங்களுக்கு பயணம் செய்து வந்தவர். தன் உடலை ஒளி உடலாக்கி ஒளியின் வேகம் போல் நொடியில் பல ஆயிரம் மைல்களை கடந்து சென்று மீண்டும் பூமிக்கு வந்தவர். நந்தி பகவான் இவரது குரு. பல அண்டங்களில் தான் கண்டதினை பதிவு செய்துள்ளார். இவர் எழுதியுள்ள திருமந்திரம் அனைவரும் படிக்க வேண்டிய ஒரு நூல். எனது கணவர் அடிக்கடி 'திருமூலரின் திருமந்திரம்' பற்றி சைவ சித்தாந்த அன்பர்கள் கூட்டத்தில் உரையாற்றுவார்.
அவரது பிரபஞ்ச பயணம் கேட்டு கேட்டு நான் எவ்வளவு பீல் பண்ணியிருக்கேன் தெரியுமா? 10 அடி நடப்பதற்குள் எத்தனை பேருக்கு மூச்சு வாங்குகிறது, முட்டி வலிக்குது. நடைபயிற்சி என்ற பெயரில் வேர்த்து விறுவிறுத்து சோர்ந்து போகின்றவர்கள் நம்மில் எத்தனை பேர் உள்ளோம். அண்ட சராசரங்களுக்கு செல்ல வேண்டாம். அடுத்த தெருவுக்கு அடிபடாமல் சென்று வருவதே இந்த கால கட்டத்தில் மிக கடினமாக செல்கின்றோம். ஒளி வேகத்தில் என்று திருமூலரைக் குறிப்பிடு கின்றனர். இங்கு பைக் வேகத்தில் கட்டுப் பாடில்லாமல் சென்று தானும் மண்டையை உடைத்துக் கொண்டு, கூட இருப்பவர், எதிரில் வருபவர், மண்டையை உடைப்ப வர்கள் எத்தனை நபர்கள்? பலரின் உயிர் கூட போகும் அளவு மூர்க்கமான வேகம். இந்த வேகம் எங்கே? உடலை ஒளியாக்கி நொடிகளில் சென்று 1008 அண்டங்களை சுற்றி வந்த திருமூலர் வாழ்க்கை கூறும் உயரிய தத்துவம் எங்கே?
அதற்காக எல்லோரும் திருமூலரும், அகத்தியரும் ஆக முடியாதுதான். ஆனால் நம்முன் இருக்கும் அரக்க குணங்கள், விகார எண்ணங்களை நீக்க, ஐம்புலன்களை அடக்க யோகாவும், தியானமும் பெரிதும் உதவுமே. சிறியவரோ, முதியவரோ தகுந்த பயிற்சியாளர் மூலம் இன்றே ஆரம்பிக்கலாமே.
-தொடரும்