என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    தூக்கமின்மைக்கு தீர்வு தரும் கசகசா
    X

    தூக்கமின்மைக்கு தீர்வு தரும் 'கசகசா'

    • தூக்கமின்மைக்கு கசகசா வீட்டு வைத்தியமாக மிகச்சிறந்த நன்மை பயக்கும்.
    • கசகசா விதைகளுக்கு சிறு துவர்ப்பு சுவை இருப்பதாக சித்த மருத்துவம் கூறுகின்றது.

    தமிழர்களின் பாயாசம் முதல் வெளிநாட்டினரின் பீட்சா, பர்கர், ரொட்டி வரை பலவகை உணவுகளில் பயன்படுத்தப்படும் அஞ்சறைப்பெட்டி கடைச்சரக்கு 'கசகசா'. இது தனித்துவமான குணமும், மணமும் கொண்டது. அதிலும் தமிழர்களின் பாரம்பரிய உணவு முறைகளில், இனிப்பு மற்றும் கார வகை உணவுப்பொருட்கள் இரண்டிலும் பயன்படுத்தப்படக்கூடிய சிறப்பு மிக்கது 'கசகசா'.

    கசகசாவின் பயன்பாடு இன்று, நேற்று துவங்கியது அல்ல. இது கிட்டத்தட்ட 3000 ஆண்டுகளுக்கு முன்னதாகவே எகிப்தியர்கள், சுமேரியர்களால் பயன்படுத்தப்பட்ட சிறப்புமிக்கது. கசகசா செடியானது பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே, மேற்கு ஆசியாவின் வெப்பமான பகுதிகளைப் பூர்வீகமாகக் கொண்ட மூலிகைத் தாவரம். அதன் பின்னர் அங்கிருந்து கிரேக்கத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. ஆசியா மைனரிலிருந்து அரேபிய வர்த்தகர்கள், அதன் மருத்துவக் குணத்திற்காக அதை சீனா, இந்தியா போன்ற பல நாடுகளுக்கு கொண்டு வந்ததாக வரலாற்று நூல்கள் தெரிவிக்கின்றன.

    சுரம், உடல் வெப்பம், அதிக தாகம், உடல் நமைச்சல், மலச்சிக்கல், வயிற்றுவலி, உடல் வலி, மூட்டு வலி, நாட்பட்ட அழற்சி (வீக்கம்) ஆகிய பல்வேறு நோய் நிலைகளில், பல நாடுகளின் பாரம்பரிய மருத்துவ முறைகளில் கசகசா பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், இந்த மூலிகைத் தாவரம் சில நாடுகளில் தடைசெய்யப்பட்டுள்ளது. காரணம் இதில் உள்ள 'ஓபியேட்' வகை வேதிப்பொருட்கள் தான்.

    கசகசா என்பது 'போஸ்தக்காய்' எனப்படும் மரத்தில் உண்டாகும் காயின் உள்ளிருக்கும் விதைகள். இந்த காயில் இருந்து வடியும் பால் தான் 'அபினி'. இது போதையைத் தரும் பொருள் என்பதால் பல நாடுகளில் அபினிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதன் விதைகளில் அத்தகைய கொடிய தன்மை இல்லாததால், அவை மருந்தாகவும், உணவுப்பொருட்களில் நறுமணமூட்டியாகவும் பயன்படுத்தப்படுகிறது.

    கசகசா விதைகள் இனிப்பு சுவையும், வெப்பத் தன்மையும் உடையது. சித்த மருத்துவத் தத்துவத்தின் நோய்க்கு அடிப்படைகளான வாதம், பித்தம், கபம் இவை மூன்றில், வாதம் மற்றும் கபம் இவை இரண்டையும் சீர் செய்து, குறைத்து நோய்களை நீக்கக்கூடியது. ஆனால், அதிக அளவில் எடுத்துக்கொண்டால் பித்தத்தை அதிகரிக்கும். ஆதலால் இதனை அளவோடு பயன்படுத்துவது நல்லது.

    கசகசா வாதக் குற்றத்தை சீராக்கும் தன்மை உடையது என்பதால் வாதம் போக்கும், வலியை போக்கும் மருந்தாக பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. நரம்பு சார்ந்த நோய்களான மன அழுத்தம், மன பதட்டம், நரம்பு வலி மற்றும் தசை வலி, தசைப் பிடிப்பு ஆகிய நிலைகளில் பலன் தருவதாக பல நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.

    கசகசா விதைகளில் உடலுக்கு நன்மை பயக்கும் நார்ச்சத்தும், எலும்புகளுக்கு வன்மை பயக்கும் கால்சியம் சத்தும் கணிசமான அளவு உள்ளது. மேலும் உடலுக்கு நன்மை தரும் வைட்டமின்களான - பி 1, பி-2, பி-6, நியாசின், போலிக் அமிலம், பான்டோதெனிக் அமிலம், வைட்டமின்- ஈ மற்றும் வைட்டமின்-சி போன்ற சத்துக்களும், இரும்புச் சத்து, செம்புச் சத்து, பொட்டாசியம், மக்னீசியம், மாங்கனீசு, துத்தநாகச் சத்து, பாஸ்பரஸ், செலினியம் ஆகிய முக்கிய தாது உப்புக்களும் உள்ளன.

    கசகசா விதைகளில் அத்தியாவசிய சத்துக்கள் மட்டுமின்றி, மருத்துவ குணம் தரும் வேதிப்பொருட்களான அல்கலாய்டுகள், இயற்கை நிறமிகள் (பிளவனாய்டுகள்) ஆகியவற்றை கொண்டுள்ளது கூடுதல் சிறப்பு. கசகசாவில் மிக மிக குறைந்த அளவு மார்பின், கோடைன், பெபாவரின், தபைன், நார்கோட்டின் ஆகிய வேதிமூலக்கூறுகள் உள்ளன. அவை கசகசாவின் நரம்பியல் சார்ந்த மருத்துவக் குணங்களுக்கு காரணமாக உள்ளன.

    கசகசா விதைகள் 40 முதல் 60 சதவீதம் எண்ணெய் பொருளைக் கொண்டுள்ளது. கசகசா விதைகளில் கிடைக்கும் எண்ணெயில், உடலுக்கு நன்மை தரும் லினோலியிக் அமிலம், பால்மிடிக் அமிலம், ஒலியிக் அமிலம், லினோலெனிக் அமிலம் ஆகிய கொழுப்பு அமிலங்களைக் கொண்டுள்ளது. கசகசா எண்ணெய் பல நாடுகளில் உணவுப் பொருளாக சமையலுக்கு பயன்படுத்தப்படுகிறது. இது சுவைக்கு மட்டுமின்றி, இதயத்தின் ஆரோக்கியத்திற்கும் வித்திடும் என்கின்றன நவீன ஆய்வுகள்.

    கசகசா விதைகளோடு, தோல் நீக்கிய பாதாம் பருப்பு சேர்த்து பாலுடன் கொதிக்க வைத்து கஞ்சியாக செய்து, புதிதாக திருமணமான ஆண்களுக்கு கொடுப்பது இன்றளவும் பல கிராமங்களில் உள்ள வழக்குமுறை. இது உடலுக்கு வன்மையைத் தந்து, வம்ச விருத்திக்கு வழிவகுக்கும். அதே போல் கசகசாவிற்கு உடம்பின் உள்ளே இருக்கக்கூடிய வெப்பத்தை தணிக்கும் தன்மை இருப்பதால் அடிக்கடி வயிற்றுப்புண்ணால் அவதிப்படுபவர்களும் மேற்கூறிய கஞ்சியை எடுத்துக்கொள்வது நன்மை பயக்கும். இதனால் உடலுக்கு வன்மையும், அழகும் உண்டாகும் என்றும் சித்த மருத்துவம் கூறுகின்றது.

    வயிற்றுப்புண் நோய்நிலையானது இன்றைய துரித உணவு முறைகளால் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மருந்து மாத்திரைகளை நாடாமல் கசகசாவை நாடுவது இயற்கையாக நலம் பயக்கும். வயிற்றில் அல்சர் எனும் நாட்பட்ட வயிற்றுப்புண்ணால் இரவில் தூக்கம் கெட்டவர்கள், கசகசாவுடன் பித்தம் தணிக்கும் பிற அஞ்சறைப்பெட்டி கடைச்சரக்குகளான ஏலக்காய், சீரகம், தனியா இவற்றை சேர்த்து பாலுடன் கொதிக்க வைத்து, இரவு நேரங்களில் எடுத்துக் கொண்டால் வயிற்றுப்புண் ஆறும். வயிற்றுவலியைப் போக்கும். நிம்மதியான தூக்கமும் வரும்.

    தூக்கமின்மைக்கு கசகசா வீட்டு வைத்தியமாக மிகச்சிறந்த நன்மை பயக்கும். கசகசா விதைகளை ஒரு தேக்கரண்டி அளவுக்கு பொடித்து அத்துடன், கால் தேக்கரண்டி அளவுக்கு சாதிக்காய் பொடி சேர்த்து பாலில் கலந்து எடுத்துக்கொள்ள தூக்கம் இயல்பாக வரும். உடலுக்கும் மனத்திற்கும் புத்துணர்ச்சி கிடைக்கும். மேலும் மனபதட்டமும், மன அழுத்தமும் குறையும் என்கிறது சித்த மருத்துவம். தூக்கமின்மைக்கு கசகசா விதை எண்ணெயை இரவில் எடுத்துக்கொள்வதும் நன்மை பயக்கும் என்கிறது மேற்கத்திய வழக்கு முறை.

    கசகசா விதைகளுக்கு சிறு துவர்ப்பு சுவை இருப்பதாக சித்த மருத்துவம் கூறுகின்றது. துவர்ப்பு சுவை மலத்தை கட்டும் தன்மை உடையது. ஆகையால் கழிச்சல் (பேதிக்கு) நிறுத்த தயாரிக்கப்படும் சில சித்த மருந்துகளில் கசகசா சேர்க்கப்படுகிறது. வீட்டு வைத்தியமாக, கசகசாவை தேனுடன் சேர்த்து லேசாக வறுத்து எடுத்துக்கொள்ள பேதியை நிறுத்தும். ஆனால் ஒருநாளைக்கு இரண்டு, மூன்று முறைக்கு மேல் எடுப்பது உகந்ததல்ல.

    அதே போல், கசகசாவை உணவில் சேர்த்துக்கொள்ள குடலில் உள்ள புழுக்களை கொல்லும் என்றும் சித்த மருத்துவம் கூறுகின்றது. உணவில் கசகசாவை சேர்ப்பது உணவில் உள்ள பாக்டீரியா கிருமிகளைக் கொல்லும் என்று சமீபத்திய நவீன ஆய்வுகள் கூறுவது கூடுதல் சிறப்பு.

    கசகசா விதைகளுடன் வால்மிளகு, பாதாம் பருப்பு, கற்கண்டு இவை சம எடை எடுத்துக்கொண்டு அதனுடன் தேன் மற்றும் நெய் சேர்த்து லேகியமாக்கி வைத்துக் கொள்ளலாம். இதனை 'கசகசா லேகியம்' என்று சித்த மருத்துவம் கூறுகின்றது. அவ்வப்போது இதை அரை முதல் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்துக்கொள்ள உடல் வன்மை அடையும். ஆண்மை பெருகும். தூக்கமின்மையை போக்கி நல்ல உறக்கத்தைத் தரும்.

    கசகசா விதைகளுடன் தேங்காய் துருவல் மற்றும் நாட்டுசர்க்கரை சேர்த்து அத்துடன் சிறிது பால் அல்லது தேங்காய்ப்பால் கூட்டி, உருண்டைகளாக செய்து எடுத்துக்கொள்ள, வாயில் அடிக்கடி உண்டாகும் அச்சரம் எனும் வாய்ப்புண்ணிற்கு நன்மை பயக்கும்.

    மேலும் இது உடலுக்கு வலிமையைத் (போஷாக்கினைத்) தரும். கசகசா விதைகளை நீரில் அல்லது தயிரில் ஊற வைத்து அரைத்து பசையாக்கி வாய்ப்புண்ணிற்கு பூசி வருவதும் நல்லது. இதனை உள்ளுக்கு எடுத்துக்கொள்வதும் நல்லது.

    இன்று மருத்துவத்தில் இருமலைப் போக்கும் பல்வேறு மருந்துகளில் பயன்படுத்தப்படும் 'கோடைன்' எனும் வேதிப்பொருளுக்கு முதன்மை ஆதாரம் இந்த கசகசா என்பது பலருக்கு தெரிய வாய்ப்பில்லை. இந்த 'கோடைன்' மூலக்கூறு உடலுக்குள் கல்லீரலை அடைந்து 'மார்பின்' எனும் வேதிப்பொருளாக மாறுவதால், இது சேரும் இருமல் மருந்துகளை அதிக அளவில் எடுத்துக்கொள்ள அதிக தூக்கத்தையும் மயக்கத்தையும் உண்டாக்கக்கூடியது.

    நாட்பட்ட வலி நோயிலும், புற்றுநோய் சார்ந்த வலியிலும் கசகசா நல்ல பலன் தருவதாக நவீன அறிவியல் கூறுகின்றது. புற்றுநோய் சார்ந்த அதிதீவிர வலியுடன் கூடிய நோய்நிலையில் கசகசா செடியின் மூலக்கூறுகள் மகத்தான பலன் தருவது குறிப்பிடத்தக்கது.

    மேலும், கசகசா விதைகளை பாலுடன் சேர்த்து அரைத்து பூசிவர தலையில் உள்ள பொடுகு போக்க உதவும். அதே போல் கசகசாவை பாலில் ஊறவைத்து அரைத்து பசையாக்கி முகப்பருக்களுக்கும், தோல் வறட்சிக்கு பூசி வர சிறந்த நன்மை பயக்கும்.

    பல்வேறு மருத்துவ குணங்கள் இருந்தாலும் கசகசா விதைகள் சிறுவர்களுக்கும், கர்ப்பிணி பெண்களுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும், சிறுநீரக நோயாளிகளுக்கும் ஏற்புடையது அல்ல. அதே போல் வயது மூப்படைந்தோர்கள் மருத்துவர்கள் ஆலோசனைப்படி எடுத்துக்கொள்வது அவசியம். ஒவ்வாமை உள்ளவர்களும் ஆலோசனைப்படி பயன்படுத்துவது நல்லது.

    பொதுவாக வெண்மை நிறத்தில், உற்றுப்பார்த்தால் சிறுநீரக வடிவத்தில், கடுகை விட சிறிய அளவில் இருக்கும் கசகசா விதைகள் கடலளவுக்கு அளப்பரிய மருத்துவ குணங்களை தன்னுள் அடக்கியுள்ளது. நாம் பாரம்பரியமாக காரமான உணவு வகைகளில் குடல் அரிப்பினை தடுக்கவும், இனிப்பான உணவுகளில் சுவைக்காகவும், பலத்திற்காகவும் கசகசா பயன்படுத்தப்படுவது நம் உடல் நலம் நாடத்தான். ஆகவே, இதனை அளவோடு நமது உணவில் பயன்படுத்த, ஆரோக்கியத்தை அள்ளித்தரும்.

    தொடர்புக்கு:

    drthillai.mdsiddha@gmail.com

    Next Story
    ×