search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    புத ஆதித்ய யோகம் என்ன செய்யும்?
    X

    புத ஆதித்ய யோகம் என்ன செய்யும்?

    • ஜோதிட உலகில் பிரமாண்டமாக பேசப்படும் யோகத்தில் ஒன்று புத ஆதித்திய யோகம்.
    • குழந்தையின் கல்வி ஞானத்திற்கும் தாய், தந்தையின் கல்வி ஞானத்திற்கும் சம்பந்தம் இருக்காது.

    ஜோதிட உலகில் பிரமாண்டமாக பேசப்படும் யோகத்தில் ஒன்று புத ஆதித்திய யோகம். பல விதமான கிரகச் சேர்க்கைகள் இருந்தாலும் சூரியன் மற்றும் புதன் இணைவினால் உருவாகும் இந்த யோகம் பலருக்கு கல்வியில், தொழிலில், உத்தியோகத்தில் பொருளாதாரத்தில் மிகப் பெரிய திருப்பு முனையைத் தந்து உள்ளது.

    ஜாதக கட்டத்தில் சூரியனும் புதனும் சேர்ந்து இருந்தால் புத ஆதித்திய யோகம் என்று கூறுவார்கள். சூரியன், புதன், சுக்கிரன் இந்த மூன்றும் முக் கூட்டு கிரகங்கள். எந்த ஜாதகத்தை எடுத்தாலும் சூரியன், புதன், சுக்கிரன் இந்த 3 கிரகங்களும் அடுத்தடுத்த கட்டங்களிலேயே இருக்கும். அதனால் இவை முக்கூட்டு கிரகங்கள் என்று அழைக்கப்படும். புதன் சூரியனை விட்டு 29 பாகைக்கு மேல் விலகுவதில்லை. இதை வைத்தே ஒருவரின் ஜாதகம் சரியாக கணிக்கப்பட்டுள்ளதா என்பதை எளிமையாக கண்டறிய முடியும். ஒருவர் ஜாதகத்தில் சூரியனும் புதனும் சேர்ந்து இருந்தால் புத ஆதித்திய யோக அடிப்படையில் ஜாதகர் கல்வி கேள்வியில் சிறந்து விளங்க வேண்டுமல்லவா? ஜாதகத்தில் புதனும் சூரியனும் சேர்ந்து இருக்கும் பலர் பள்ளி இறுதிப் படிப்பை கூட முழுமையாக முடிக்காதவர்கள். 30 வருடத்திற்கு முன்பு இந்த யோகம் அமையப் பெற்றவர்களில் பலர் மழைக்காக கூட பள்ளிக்கூடத்தில் ஒதுங்கியதில்லை. சில குழந்தைகளுடைய பெற்றோர்கள் நல்ல கல்வி பயின்று உயர்ந்த உத்தியோகம், பதவியில் இருப்பார்கள். ஆனால் குழந்தைகள் பெற்றோருக்கு எதிர் மறையாக இருப்பார்கள். சில பெற்றோர்களுக்கு அடிப்படை கல்வி ஞானம் கூட இருக்காது. ஆனால் பிள்ளைகள் படிப்பில் படு சுட்டியாக கெட்டியாக இருப்பார்கள்.

    குழந்தையின் கல்வி ஞானத்திற்கும் தாய், தந்தையின் கல்வி ஞானத்திற்கும் சம்பந்தம் இருக்காது. அதே போல் எந்த படிப்பு அறிவும் இல்லாத பலர் பன்னாட்டு வணிகத்தில் ஈடுபட்டு சாதனையாளராக வலம் வருகிறார்கள். ஆங்கில பள்ளிக் கூடத்தில் படித்த பலர் அரை குறை ஆங்கிலம் பேசுகிறார்கள். பள்ளிப் படிப்பைக் கூட முடிக்காத பலர் இலக்கணப் பிழையே இல்லாமல் தெளிவாக ஆங்கிலம் எழுதுவார்கள், பேசுவார்கள். இது போன்ற அனைத்திற்கும் ஒருவரின் ஜாதகத்தில் உள்ள புத ஆதித்ய யோகம் மட்டுமே காரணம்.இந்த கிரகச் சேர்க்கை பற்றிய பல அரிய தகவல்களை இந்த கட்டுரையில் பார்க்களாம் வாங்க.

    சூரியன்

    நவகிரகங்களில் சூரியன் முதன்மையான கிரகமாகும். பிரபஞ்ச சக்தி உண்மையா? என நாத்திகம் பேசுபவருக்கு நெத்தியடி கொடுக்கும் கண் கண்ட தெய்வம் சூரியன். ஒன்பது கிரகங்களில் நம் கண்ணுக்குத் தெளிவாக புலப்படுபவர் சூரியபகவான். கால புருஷ 5-ம் அதிபதியான சூரியன் ஆத்ம காரகன் என்பதால் சூரியன் பலம் பெற வேண்டும்.

    ஆன்மா பலம் பெற்றால் மட்டுமே நிம்மதியாக தைரியமாக எதையும் செய்து முடிக்க முடியும். ஒருவரது ஜாதகத்தில் சூரியன் பலம் பெற்றிருந்தால் அந்த ஜாதகர் தனது சுய சிந்தனையுடன் சுயமாக முடிவு எடுக்கக் கூடிய நபராக இருப்பார். வாழ்க்கை ஒலிமயமாகும். அடைய முடியாத வெற்றிகளே கிடையாது. இவருக்கு எப்படியும் நிறைந்த கல்வி உணவு,உடை, இருப்பிடம், திருமணம், குழந்தை பாக்கியம் போன்ற அடிப்படை தேவைகள் குறித்த காலத்தில் கிடைத்து விடும். அதே போன்று நீண்ட ஆயுள், ஆரோக்கியம் கிடைக்கும். ஜனன கால ஜாதகத்தில் சூரியன் சுப பலத்துடன் இருந்தால் உடல் தேஜஸ் பெறும், நிர்வாக திறமை, தலைமை தாங்கும் இயல்பு, பிரபல மனிதர்களுடன், சமூகத் தொடர்புகள், சமுதாய அங்கீகாரம் அரசு உத்தியோகம், அரச பதவி ஆகியவை கிடைக்கும். எதிலும் அதிகாரத்துடன் இருப்பார்கள் அரசு, அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு சூரிய பலம் மேன்மையை தரும். வாழ்வில் வெற்றி பெற சூரிய பலம் மிக முக்கியம்.

    புதன்

    நவகிரகங்களில் சூரியனுக்கு அடுத்துள்ள முதல் கிரகம் புதனாகும். கிரகங்களில் மிகச் சிறிய கிரகமாக இருப்பதால் சந்திரனுக்கு அடுத்து வேகமாக சுற்றக்கூடிய கிரகம் புதனாகும். சூரியனுக்கு மிக அருகில் உள்ள கிரகம் புதன் என்பதால் புதனுக்கு வெளிச்சம் அதிகமாகக் கிடைக்கும். புத்தி, அறிவு, ஞானம் ஆகியவற்றை வழங்குவதால் புத்திகாரகன் என்று பெயர். ஒரு மனிதனின் ஞானத்திற்கும், புத்திக் கூர்மைக்கும் காரணமான கிரகம் என்பதால் வித்யாகாரகன் என்ற பெயரும் உண்டு. புதன் வலிமை பெற்றவர்கள் மட்டுமே புத்திசாலியாக இருப்பார்கள்.

    ஜனன ஜாதகத்தில் புதன் பலம் பெற்றவர்கள் இளமைப் பொழிவுடன் சுறுசுறுப்பாக செயல்படுவார்கள். கணக்கியல், மறைமுகமான, நுணுக்கமான பிரச்சினைகளை தீர்ப்பதில் நிபுணராக இருப்பார்கள். வியாபார தந்திரம் மிக்கவராகவும், மதிநுட்பத்தை பயன்படுத்தி இருந்த இடத்திலேயே தொழில் செய்து வருமானம் செய்பவராக இருப்பர். ஒயிட் காலர் ஜாப் செய்பவர் என்றும் கூறலாம்.

    பாவ கிரகங்களுடன் சேராமல் இருந்தால் புதன் தனித்தன்மையுள்ள சுபகிரகம். வேறு எந்த கிரகத்துடனும் சேராத புதனுக்கும் அதன் பார்வைக்கும் குருவிற்கு நிகரான சக்தி உண்டு. அதே நேரத்தில் புதன் இரட்டை தன்மையுள்ள கிரகம். தான் சேரும் கிரகத்திற்கு, இடத்திற்க்கு தக்கவாறு பார்க்கும் கிரகத்திற்க்கு தக்கவாறு ஜாதகரை மாற்றிவிடுவார். புதன் பலம் பெற்றவர்கள் நகைச்சுவை உணர்வு மிகுந்தவுர். ஜோதிடம், பேச்சாற்றல், கணிதம், கணினித் துறை, கவிதை எழுதுதல் , சிற்பம் வடித்தல் , சித்திரம் வரைதல், நடிப்பு, நாடகம், சாஸ்திர ஞானம் , நுண்கலைகள் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருப்பார்கள். எழுத்தாளர்கள், கவிஞர்கள், உலகம் போற்றும் நகைச் சுவை நடிகர்கள், பேச்சாளர்கள், பத்திரிக்கை துறையினர், அரசியலை அலசுபவர்கள், விமர்சிப்பவர்கள், மிகச்சிறந்த வியாபாரிகள், ஆலோசகர்கள், கல்வியாளர்கள், ஓவியர்கள் அனைவரும் புதனின் ஆதிக்கத்தில் உள்ளவர்கள்.

    புத ஆதித்ய யோகம்

    சூரியனுக்கு முதல்வட்ட பாதையில் புதன் இருப்பதால் சூரியனின் வெப்பத்திற்கு ஈடு கொடுத்து, அதாவது சூரியனின் ஈர்ப்பு விசை உள்ளிழுக்கப்பட்டு அழிந்து விடாமல் புதன் தன் பாதையில் சுற்றி வரும்படி புதனின் கட்டமைப்பு அமைந்துள்ளது. சூரியனிடமிருந்து வெளிவரும் அனைத்து கதிர்களையும் தன்னகத்தே தேக்கிக் கொள்ளும் தன்மையை புதன் பெற்றுள்ளது. அதனால் தான் மனிதனின் நினைவாற்றலுக்கும் புத்திக் கூர்மைக்கும் பொது அறிவிற்கும் புதனையே காரக கிரகம் என்கிறோம்.

    மனித உடலில் தலைப் பகுதியைக் குறிக்கும் கிரகம் சூரியன். சூரியனுக்கு மிக அருகிலேயே சுற்றும் கிரகம் புதன். தலையின் முக்கிய அங்கமாகவும் உடலியக்கத்திற்கு மிக முக்கிய அங்கமாகவும் உள்ள மூளையை ஆளுமை செய்வதால் அனைத்து விதமான அறிவையும் ஆற்றலையும் கொடுப்பவர் புதனாகும். சூரியனை விட்டு விலகாமல் சுற்றி வருவதால் புதனை வெறும் கண்களால் பார்க்க இயலாது.

    மனித உடல் செயல்பாட்டிற்கு பல உறுப்புகள் காரணமாகிறது. அந்த உறுப்பு செயல்பாட்டிற்கு பல சுரப்பிகள் காரணமாகிறது. மனித மூளையின் அடிப்பகுதியில் சுரக்கும் நாளமில்லா சுரப்பியான "பிட்யூட்டரி'' சுரப்பி தான் நினைவாற்றலையும் சிந்தனை நுண்ணறிவையும் தூண்டுவதாக மருத்துவம் கூறுகிறது. புதன்கிரகமே இச்சுரப்பியை தன் ஆளுமைக்குள் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. புதன் ஒருவர் மட்டுமே தனித்திருக்கும் நிலையில் சுபராக இருப்பார். பிறருடன் இணையும் போது, அவர் சேரும் கிரகம் சுபரானால், தன்னைச் சுபராகவும் அந்தக் கிரகம் பாபரானால் தன்னையும் பாபராகவும் தனது நிலையை மாற்றிக் கொள்வார்.

    புதன் பலம் குறைந்திருப்பவர்கள், நுண்ணறிவுத் திறன் குறையப் பெற்றிருப்பவர்கள், மனக்குழப்பம் அடைவார்கள். நுரையீரல், சிறுநீரகம், நரம்புத்தளர்ச்சி, ஜீரண உறுப்புகளின் கோளாறு, உடல் நலம் பாதிக்கும். சூரிய பலம் குறைந்திருப்பவர்கள் ஆன்மபலத்தை இழப்பார்கள். இதயம் தொடர்பான நோய்கள் ஏற்ப்படும். நிர்வாகத்திறன் குறையும். சூரியன் என்றால் ஆன்மா, புதன் என்றால் புத்தி. ஆன்மாவும் புத்தியும் இணையும் போது மட்டுமே மனிதர்களுக்கு ஆன்ம பலம் பெருகும். ஆத்ம பலம், ஞானத்தை தரும் சூரியனுடன் புத்தி காரகன், வித்யா காரகன் புதன் சேரும் போது மனிதனுக்கு அளவில்லாத வாழ்வியல் ஞானம் ஏற்படுகிறது. ஆன்ம பலத்தால் அடைய முடியாத வெற்றியே கிடையாது.மனித வாழ்வில் அறிவுக் கண்ணை திறப்பதில் முதலிடத்தில் இருப்பதும் கல்வி தான். அந்த கல்வியில் தனித்து வத்துடன் விளங்க புத ஆதித்ய யோகம் அவசியம்.

    அதே போல் பலர் புத ஆதித்ய யோகம் கல்விக்கு மட்டுமே பலன் தரும் என்று நினைக்கிறார்கள். மனிதர்கள் வாழ்வில் அனைத்து விதமான வெற்றியை வழங்க கூடிய யோகமாகும்.

    சூரியனுடன் புதன் இணையும் போது அவர் நன்மை தரும் சுபராக செயல்படுவாரா அல்லது தீமை தரும் பாபராக இருப்பாரா என்று கணிப்பதில் சிக்கல் ஏற்படும். அனுபவமுள்ளவர்களையும் தடுமாற வைக்கும். சூரியன் புதன் இவர்களை பார்க்கும் கிரகங்களின் நிலை, ஆதிபத்தியம் ஆகியவற்றைக் கொண்டு பலனைச் சீர்தூக்கி பார்க்க வேண்டும். இதை எளிமையாக 8 விதிகளில் பலன் கூறி விடலாம்.

    1. சூரியனுக்கும் புதனுக்கும் பாகை அடிப்படையில் 7 டிகிரி மட்டுமே வித்தியாசம் இருக்க வேண்டும். சூரியனுடன் குறிப்பிட்ட பாகையில் புதன் இணைந்திருக்கும் போது அஸ்தமனம் ஏற்படும். அஸ்தங்கக் கதியில் இருக்கும் புதன் நற்பலன்கள் தருவார். புதனுக்கு அஸ்தங்க தோஷம் கிடையாது.

    2. புதனுக்கு அடிக்கடி வக்கிரகதி ஏற்படுவதுண்டு. ஆனால் புதன் வக்கிரகதியில் இருந்தால் மனக்குழப்பம் தருவார் என்பதால் புதன் வக்ரம் பெறாமல் இருப்பது சிறப்பு.

    3. சூரியன் அல்லது புதனுக்கு ராகு, கேது, சனி சம்பந்தம் இருக்கக் கூடாது. சூரியனோ, புதனோ ராகு, கேது, சனி சாரம் பெறக்கூடாது.

    4. சூரியன் புதனை நோக்கி சென்றால் தந்தை அதிக புத்திசாலி, கல்வியில் சிறந்து விளங்கியவர், கணித நுண்ணறிவுடையவர், நிர்வாகப் பதவியில் இருப்பார் அல்லது சிறந்த வியாபாரி. அதே போல் குழந்தையும் தந்தைக்கு இணையாக சகல செயல்களிலும் வல்லமை பெறும்.

    5. சூரியன் புதனை நோக்கிச் செல்லும் அனைவருக்கும் பாவக, காரக ஆதிபத்திய ரீதியாக ஏதாவது ஒரு சில நன்மை உண்டாகும்.

    6. புதன் சூரியனை நோக்கி சென்றால் தந்தைக்கு படிப்பறிவு குறைவு, அடிமைத் தொழில், படிப்புக்கு சம்பந்தம் இல்லாத வேலை. அதே போல் குழந்தைக்கும் கல்வி ஞானக் குறைவு ஏற்படும்.

    7. சூரியன் புதனை நோக்கி சென்று ஜீவ காரகன் குருவையோ அல்லது கல்வி, தொழில் டி. வி, பத்திரிக்கைகளில் வரும் பாராட்டுதலுக்கு உரிய வகையில் இருக்கும்.

    8. புதன் ஒருவரே மறைவு ஸ்தானங்களான 3,6,8,12ல் இருக்கும்போது நற்பலனைத் தருவர். மறைந்த புதன் நிறைந்த பலன் உண்டு. இவர் சூரியனுடன் சேர்த்து ஒரே ராசியில் இருக்கும் போது புதஆதித்திய யோகம் உண்டாகும். சூரியன், புதன் ஆகியோரின் பலம், ஆதிபத்தியம் சுப அசுபர்களின் இணைவு, பார்வை ஆகியவற்றின் தன்மையைப் பொறுத்து பலன்கள் அளவு கூடவோ குறையவோ செய்யும்.

    பரிகாரம்

    சுய ஜாதகத்தில் புத ஆதித்ய யோகம் இல்லாதவர்கள் கல்வியில் பின் தங்கிய நிலையில் இருப்பவர்கள் புதன் கிழமை வரும் பிரதோசத்திற்கு செல்ல புதனால் வரும் கெடு பலன் நீங்கும். கல்வி சிறக்கும். அறிவு வளரும். படிக்காத பிள்ளை படிக்கும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தவறாமல் புதன் அன்று வரும் பிரதோசத்திற்கு அழைத்து செல்ல வேண்டும். தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவார்கள்.

    Next Story
    ×